போருக்குள் வாழ்ந்த ஒரு சமூகத்திலிருந்து தன் வாழ்க்கையோடு போராடி ஓர் சமூகத்தில் சாதித்துக் காட்டியோர் பலர் உள்ளார்கள் என்றால், அந்தப் பலரினுள் ஒருவராக நம்ம பதிவர் மதிசுதாவும் வந்து கொள்வார். தென் இந்தியா சினிமா வரைக்கும் சுடு சோறு என்ற வன்னி வார்த்தையை கொண்டு சென்று சேர்த்தவர் நம்ம சுதா என்றால் மிகையாகாது. அத்தி பூத்தாற் போல இலங்கையைப் பொறுத்தவரை குறும்படங்களும், முழு நீளத் திரைப் படங்களும் அவ்வப்போது தலை காட்டுவது உண்டு!
அந்த வகையில் அண்மையில் பதிவர் மதிசுதாவின் நீண்ட நாட் கனவான படம் இயக்க வேண்டும் எனும் கனவிற்குத் தீனி போட்டிருக்கிறது து(தொ)லைக்கோ போறியள்? எனும் குறும்படம். பத்து நிமிடக் குறும்படத்தினுள் ஏராளம் விடயங்களைச் சொல்ல முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக இந்தக் குறும்படம் அமைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே முழு நீளத் திரைப் படங்களில் ஈழவாழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமான கலைஞர்களோடு, ஓர் பரிச்சயமற்ற முகம் - அது தான் நம் மதி சுதா.
சுருங்கச் சொல்லின், வேலையின்றி, அவ்வப்போது திருடி விட்டு, உள்ளே - வெளியே போய் வரும் ஓர் மனிதன் ஊடாக, யாழ்ப்பாண மண்ணின் சாதியப் பாகுபாடு, வட்டார வழக்கு கொட்டாரமடிக்கும் யாழ் மண்ணின் மொழி வழக்கு, புலம் பெயர் தமிழர்களினால், பேரும் புகழும் வேண்டி கண் மண் பாராது அள்ளி விசுறப்படும் எச்சில் காசுகள் இவை அனைத்தையும் நிதர்சனமாய் சொல்லி நிற்கிறது இந்த படம்!
ட்ராப் இசை ( Rap Music) வடிவில் எங்கே போகிறீங்க என்பதனை தொலைக்கா போறியளா எனும் தொனிப் பட பாடலாக்கியிருக்கிறார் மதிசுதா. இப் படத்தில் கலைஞர்களின் நடிப்பு பற்றி அதிகமாக நான் இங்கே விமர்சிப்பதை விட, படத்தினைப் பார்க்கும் போது நீங்களே வியப்படைந்து கொள்வீர்கள் என்பதற்கு நான் உறுதி! மதுரனின் அழகிய கணினி வரை கலை, படத்தின் எழுத்தோட்டத்திற்கு உயிரோட்டமளித்துள்ளது!
நகைச்சுவை உணர்வு ததும்ப, இலங்கைத் தமிழ் மக்களுக்கே உரிய நகைச்சுவை, நையாண்டிப் பாணியில் படம் வந்திருக்கிறது. பின்னணி இசையில் அற்புதன் பின்னியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏற்ற இறக்கங்களுடன் கையாளப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. இலங்கையில் இது நாள் வரை சுடலைக்குள் "Rip" என்று எழுதப்பட்டதாக நான் அறியவில்லை. இவ் இடத்தில் ஊர் வாசனையில் நின்றும் கதை கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டாலும், ஏனைய காட்சிகள் அப்பளுக்கற்று அப்படியே எம்மை ஈழ வள நாட்டிற்கு அழைத்துப் போகிறது. புலம் பெயர் தமிழர்கள் பலருக்கு இப் படம் நிச்சயம் விருந்தளிக்கும் என்பதில் ஐயமில்லை!
துலைக்கோ போறியள்: பத்து நிமிடத்தினுள் பல கதை சொல்லும் படம்!
இந்தப் படத்தைக் கண்டு களிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
|
0 Comments:
Post a Comment