தமிழ்த் திரை உலகில் மிகவும் குறுகிய காலத்தினுள் தம் திறமை மூலம் அபார வளர்ச்சி கண்டவர்களைப் பட்டியலிடுகின்ற போது அவ் நபர்கள் வரிசையில் "வித்தக கவிஞர் பா.விஐய்" அவர்களும் வந்து கொள்வார். இயக்குனர் கே.பாக்கியராஜ் அவர்களது திரைப்படத்தின் டைட்டில் பாடல் மூலம் தன் திரையுலகப் பயணத்தினை ஆரம்பித்த பா.விஜய் அவர்கள் தன் கவித்துவத் திறமை மூலம் பல்வேறுபட்ட சாதனைகளைத் தமிழ் சினிமாவில் நிலை நாட்டினார். வெற்றிக்கொடிகட்டு திரைப் படத்தில் இடம் பெற்ற “கறுப்புத் தான் எனக்கு புடிச்ச கலரு” பாடல் மூலம் கறுப்பின் மகிமையினை ஓர் பாடலுக்குள் உட்புகுத்தி அனைத்து மக்களுக்கும் நன்கு அறிமுகமானார் பா.விஜய்.
பின்னர் வானத்தைப் போல படத்தில் இடம் பெற்ற காதல் வெண்ணிலா கையில் சேருமா, பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ( நீ வருவாய் என) “ஏ அசைந்தாடும் காற்றுக்கும் (பார்வை ஒன்றே போதுமே) பொம்பளைங்க காதலைத் தான் நம்பி விடாதே (உன்னை நினைத்து) எனத் தொடர்ச்சியாக பல ஹிட்டுப் பாடல்களை அள்ளித் தெளித்து மக்கள் மனங்களில் கொள்ளை இடம் பிடித்த பெருமையும் இவரையே சாரும். காப்பிய கவிஞர், கவியுலக மார்க்கண்டேயர் வாலி அவர்களால் தன் வாரிசுக் கவி எனச் சிறப்பிக்கப்பட்ட பெருமைக்குச் சொந்தக்காரரும் பா.விஜய் தான்.
உலகெங்கும் சிதறிக் கிடந்த பழங் காதலை அழகுறத் தன் உடைந்த நிலாக்கள் நூல் மூலம் தொகுத்தளித்து பலரது உடைந்த முகங்களைச் ஒன்று சேர்த்த கவித்துவ வித்தகர், வெற்றிலையில் அந்த வாசம் வருமே எனக் குறிப்பால் உணர்த்திய அர்த்த ஜாம கவிராஜன், இரண்டில தான் ஒண்ணை தொட வாரியா என மார்பிற்கே மையல் கொள்ளும் வல்லமை நிறைந்த கவி கொடுத்த இளைய கவிஞராக ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார் பா.விஜய் அவர்கள். என் அம்மா காலத்திலும், இன்று வாழும் பல மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களும் சொல்லும் ஓர் விடயம், ஓர் காலத்தில் தாம் செல்லும் இடங்களில் கவிஞர் வாலி எழுதிய பாடல்களைக் கேட்க நேரும் போதெல்லாம் இது கண்ணதாசனின் பாடல்கள் தானா எனச் சந்தேகம் எழும் வண்ணம் கண்ணதாசனே மெய் மறந்து வியக்கும் வகையில் வாலி பாடல் எழுதியிருக்கின்றார்.
ஆனால் இன்றைய காலத்தில் சில வருடங்களுக்கு முன்பு நாம் கேட்கும் பா.விஜயின் பாடல்கள் கூட வைரமுத்து, வாலி எழுதிய பாடல்களா என ஐயம் கொள்ளும் அளவிற்கு அபார திறமையுடன் தன் கொங்கு தமிழால் திரைச் சந்தம் கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. “ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம்” தேசிய விருதினைப் பெற்றாலும் வித்துவச் செருக்கேதுமின்றி தத்துப் பிள்ளையாக மௌனமாய் திரையுலகில் ஆர்ப்பாட்டமற்ற கவிஞனாகப் பயணித்துக் கொண்டிருந்தார் கவிஞர். காமராஜர் பல்கழைக் கழகத்தின் தமிழ்ப் பாடத் திட்டத்தில் ஒவ்வொரு பூக்களுமே பாடல் இடம் பெறுமளவிற்கு பாடல் எழுதிய பெருமைக்குரியவராக, தமிழ் சினிமா வரலாற்றிலே ஒரு திரையுலக கவிஞனின் பாடல் ஒன்று பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறதே என புருவங்களை நிமிர்த்திப் பார்க்க வைக்குமளவிற்குப் பணியாற்றிய பாவலன் அவர்.
ஆனால் திடீரென இந்த அற்புத கவிஞனின் அபார வளர்ச்சி நிறைந்த பாடல்கள், வித்தகப் புலமை கொண்ட சந்தங்கள் எல்லாம் உலக்கை தேய்ந்து ஊசி போலான நிலைக்கு ஒப்பாகி விட்டது. நம் தமிழ் மரபில் ஓர் பண்பாடு உண்டு. முற்காலத்தில் புலவர்கள் பாடல் பாடும் போது மன்னனை வாழ்த்திப் பாடுவார்கள். காரணம் புலவர்களின் வயிற்றுக்கு உணவாக மன்னர்கள் தான் உணவு கொடுப்பார்கள். இம் மரபு தமிழ் சினிமாவில் இல்லாது போயிருந்த காலத்தில் கவிஞர் வைரமுத்து கலைஞர் கருணாநிதியுடன் தானும் மேலும் பேசப்படனும் எனும் சாட்டில் ஒட்டிக் கொண்டார்.
பொன்னுக்காகவோ, பொருளுக்காகவோ வைரமுத்து ஒட்டிக் கொள்ளா விட்டாலும், ஓர் காலத்தில் திமுக எனும் வட்டத்தினுள் அவரும் வலம் வர ஆரம்பித்ததால் வைரமுத்துவின் வித்துவத் திறமை குன்றத் தொடங்கியது. பின்னர் தன் நிலையினை உணர்ந்த வைரமுத்துவும், மெதுவாக கலைஞரை விட்டு கழன்று கொண்டார். ஆனால் வைரமுத்துவின் பின்னர் வந்த பா.விஜய் அவர்களோ கலைஞரைப் பற்றிப் பிடித்தார். வித்தகக் கவிஞர் எனும் பட்டமும் பெற்றுக் கொண்டார். "இளைஞன்” மூலம் திரையுலகில் ஓர் நடிகராகவும் கலைஞரின் உதவியின் மூலம் காட்சி தந்தார். ஆனால் அவரது கவியுலக ரசிகர்களை, பாடல் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்.
ஒரு வார்த்தை பேச, டிங் டாங் கோயில் மணி, காதலித்தால் ஆனந்தம், அப்படிப் போடு, எலந்தப் பழம் எலந்தப் பழம் பிடிக்குமா செக்க சிவந்த, என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு பாடல்கள் போல அர்த்தமுள்ள, அடிக்கடி கேட்கத் தூண்டும் பாடல்களை எல்லாம் இப்போது எழுதுவதை நிறுத்தி விட்டார். அருமையான ஒரு கவிஞன், குறுகிய காலத்தினுள் இளைய தலைமுறைக் கவிஞர்கள் வரிசையில் நிறைவான பாடல்களை எழுதிய பெருமைக்குரிய கவிஞன், கலைஞரைக் காக்கா பிடித்ததால் கவித்துவம் குறைந்து அரசியல் வியாதி கொண்டு அலைகின்றாரோ என்று எண்ணத் தோன்றுகிறது? அவரது இனிய பாடல்களை முணு முணுக்கும் இளைய தலைமுறையினரை இனியும் ஏமாற்ற மாட்டார், இதமான பாடல்கள் கொடுப்பார் எனும் நம்பிக்கையில் இக் கட்டுரையினை நாற்று வாசகர்களுக்காகப் புனைகின்றேன்.
நேசமுடன்,
செ.நிரூபன்.
|
1 Comments:
உடைந்த் நிலாவும் .தூரிகை துப்பாகியாகின்றது எழுதியவர் நம்பிக்கையுடன் வருவார் என நம்புவோம் கவிதைகள் தீட்ட கலைஞர் ஜால்ரா விட்டு!ம்ம்
Post a Comment