Thursday, August 16, 2012

அவனை இப்பொழுதே சுட்டுக் கொல்லுங்கள் - ஆமியின் ஆவேசம்

தீந்தை பூசப்படும் சுவர்களின் மேல்
சாமரங்கள் வீசியவாறு 
பொன்னாடை போர்த்துவோர்
ஏறி நடக்கின்றார்கள்
ஆந்தை முழி கொண்ட
கண் கொத்திப் பாம்பாய்
அலை மீதேறி அணிவகுப்பேதுமின்றி
அச்சுறுத்தல் இன்றும் 
ஆளரவமற்ற சிறு தீவிலும் தொடர்கிறது
வெள்ளெருக்கம் சடை உன்னியின்
வேப்பு நனை காடு 
கள்ளடிக்காது காம வெறி கொண்ட
வெள்ளரசுகளின் பிடியில் 
சிக்கி வேர்த்து நனைகிறது! 

ஏற்றி வைத்த விறகுகளும்
கூட்டி வைத்த சொந்தங்களும்
மனதினுள் முகாரி இசைக்க - ஆமியெனும்
பய மயக்கத்திலும் அவர்களுடனான 
நினைப்பு அர்த்த ராத்திரியிலும் சங்கீதமாய்!

தாவி ஒரு பாய்ச்சலில்
தடையகற்றும் கனவுகள் மட்டும்
மேவி விளையாட முடியாத
கிளித் தட்டின் கோடுகளாய்
காவி உடை தரித்த பச்சோந்திகளின்
காமப் பசியின் கீழ் அமிழ்ந்து போகிறது!

ஆளின்றி தொடரும் அர்த்தமற்ற கூடல்கள்
அணைப்பின்றி நிகழும் அர்த்த ஜாம பிரசவங்கள்
வாயில்லா ஜீவன்களாய் வலியில் துடிக்கும் சவங்கள்
வேரின்றி அல்லாடும் வெளியூர் சொந்தங்கள்
போரென்ற அரக்கனினால் துண்டாடப்பட்ட பின்னும்
வாவென்று அழைக்கிறது அன்னை மண்
வந்தாலோ செத்திடுவோம் எனச் சொல்கிறான்
அப்புகாமி அவன்! 

அவனை இப்பொழுதே சுட்டு கொல்லுங்கள்
அழைப்பொழி மாத்திரம் 
சிகப்பு சால்வை போர்த்திய தமிழ் உயிரெனும்
சிற்றின்ப வெறியனிடமிருந்து வரும் 
பிழைப்பிற்காய் காமப் பிசாசுகள் 
கன்னிகாஸ்திரிகளின் உடலங்கள் தேடி நகரும்
அழைப்பின்றி அந்தரங்கங்கள் கிளறப்படும்
அடியாட்களாய் காடையர்காள் புறப்படுவர்
பிடிவிறாந்து ஏதுமின்றி கைதுகளும் நடக்கும்
பின் ஓர் இரவில் மீண்டும் கேட்கும்
அவனை இப்பொழுதே சுட்டு கொல்லுங்கள்!!

நண்பர்களே! புரட்சி எப்.எம் அப்படீங்கிற பேரில ஒரு வானொலி ஆரம்பிச்சிருக்காங்க. நீங்களும் ஓய்வாக உள்ள போது இவ் வானொலியைக் கேட்டு உங்கள் பேராதரவினையும் வழங்கலாம் அல்லவா?



புரட்சி எப்.எம் இணையப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்:

3 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் ,நிரூபன்!அருமை!எனக்கென்னவோ நீங்கள் இது வரை எழுதியவற்றில் மிகச் சிறப்பான ஓர் கவிதைச் சாடல் இது ஒன்று மட்டுமே என்று தோன்றுகிறது,வாழ்த்துக்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

தங்களின் அன்பான கருத்துக்களுக்கு நன்றி ஐயா

ஹேமா said...
Best Blogger Tips

கவிதைக்கு முதல் படத்தைப் பார்க்கும்போதே கஸ்டமாயிருக்கு நிரூ !

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails