ஒரு இலக்கியத்திற்குரிய
பாடு பொருட்கள்
பல இருந்தும்,
எழுது கோல் கொண்டு
எழுத முடியாதவாறு
கண்காணிப்புக்கள்
அச்சமூட்டும் ஆக்கிரமிப்பு
வடிவங்களாக நகர்ந்து செல்கின்றன!
செதுக்கப்பட வேண்டிய
குறிப்புக்கள் யாவும்
இன்று பூட்ஸ் கால்களின் கீழ்
அமிழ்ந்தும், நசியுண்டும்,
பச்சை சீருடையின் சாயத்தினால்
நிறம் மாறியும்
கைகளினை சேராது
காணமற் போய் விட்டன!
எப்போதும் தேவைகள் பற்றிய
சிந்தனைகள் மனதில் வர
மனிதர்கள் பற்றிய விருப்பங்கள்
உள் மனம் அறியாத
புது உணர்வு போல
பட்டெனத் தொற்றிக் கொள்கின்றது!
’’ஐங்கரன் வீட்டிற்கு
பல மாதங்களின் பின்னர்
அவசர அலுவலுக்காய்
உதவியொன்றைப் பெறும் நோக்கில்
மெதுவாக அடியெடுத்து வைத்தேன்’’
வழமையான உரையாடலாய்
அன்று வார்த்தைகள்
வர மறுத்தன - காரணம்
அவன் வீட்டு சுவரில்
தங்கையாகிய என் பள்ளித் தோழி
நினைவஞ்சலிப் படமாக
தொங்கிக் கொண்டிருந்தாள்!
ஒட்டியும் ஒட்டாதும் சொற்கள்
விலகிச் செல்ல,
ஒவ்வொன்றாகப் பிடித்து
சேர்த்து வைத்துக் கொள்ள
முயற்சி செய்தும்
என் நாவிடம் நான்
தோற்றுப் போனேன்!
ஈழம் நனைந்து
நிறம் மாறிய
கொடிய செங்குருதி
மழையின் பின்னர்
சிதைக்கப்பட்ட வெளித்தெரியாத
சீழ்ப் பருக்கைகளாக
இருக்கும் வரலாற்று வடிவத்தினை
ஐங்கரனின் வீட்டிலும் நான் கண்டேன்!
இச்சையினைத்
தீர்த்து கொள்ள
இடமேதுமின்றி
செத்த பிணங்களினைப் புணர்ந்து
பிரித் ஓதும் பௌத்த
வம்சத்தின் கோரப் பிணிக்கு
பு(ன)ணர்வாழ்வு முகாமிலிருந்த
அவன் தங்கை
ஆளாகியிருந்தாள்,
இறுதியில் எல்லாம்
நிகழ்ந்தேறியதும்
வெற்றுடலை மட்டும்
தம் புணர்ச்சியின் எச்சங்களோடு
சேர்த்து வீதியிலே
போட்டு விட்டுப் போய் விட்டார்கள்!
எதிர்த்து(க்) கேள்வி கேட்டல்
இருப்பை குலைப்பதால்
வாய்கள் யாவும் இங்கே
துப்பாக்கி முனைகள் கொண்டு
அடைக்கப்பட்டிருக்கிறது!
வெள்ளரசுகளுக்கு உரமாக- எம்
சகோதரிகளின் தீட்டுத் தண்ணீரும்,
வேட்கையினைத் தீர்த் கொள்ள
இறந்து போன பெண்மையின்
வெறுங் கூடுகளும்
தேவை என்பது
மஞ்சள் துணியால் போர்த்தப்பட்டு
சிகப்புச் சால்வை சுற்றப்பட்ட நாட்டில்
எழுதப்படாத விதியாகி விட்டது!
புனர் வாழ்வு முகாம் என்பது,
இன்று
எம் காதுகளில்
புணர்- பின் வாழ்வழி
எனும் தொனியில்
எம் செவிப்பறைகளில்
ஒலித்து(க்) கொண்டிருக்கிறது!
|
10 Comments:
வணக்கம் நிரூபன்!என்ன தலைப்பு????????????????????????????????????????????????????????,,,
தங்கை தங்களை என்று மாற்றிக்கொண்டு கிடக்கிறாளோ....எங்கள் அவலங்களைப்போல !
பேச வார்த்தைகள் வர மறுக்கிறது.மறக்க முடியாத நம் அவலங்களை யாரிடம் போய் உரைக்க?
நிரூ தலைப்பை ஒரு தடவை மீண்டும் படித்து பாருங்கோ. எழுத்துப்பிழை?
//வெள்ளரசுகளுக்கு உரமாக- எம்
சகோதரிகளின் தீட்டுத் தண்ணீரும்,
வேட்கையினைத் தீர்த் கொள்ள
இறந்து போன பெண்மையின்
வெறுங் கூடுகளும்
தேவை என்பது
மஞ்சள் துணியால் போர்த்தப்பட்டு
சிகப்புச் சால்வை சுற்றப்பட்ட நாட்டில்
எழுதப்படாத விதியாகி விட்டது!//
100% உண்மை சொல்லும் அற்புதமான வரிகள்
@Yoga.S.FR
வணக்கம் நிரூபன்!என்ன தலைப்பு????????????????????????????????????????????????????????,,,
//
வணக்கம் ஐயா, அவசரத்தில் கவனிக்க தவறி விட்டேன். தலைப்பில் ஓர் எழுத்து பிழை தலைப்பில் இருக்கிறது.
ஐங்கரனின் தங்கை என்று வரவேண்டும்.
தவறினைச் சுட்டிக் காட்டிய உங்களுக்கு நன்றிகள்.
@ஹேமா
தங்கை தங்களை என்று மாற்றிக்கொண்டு கிடக்கிறாளோ....எங்கள் அவலங்களைப்போல !
//
உண்மை தான்..
தற்போது திருத்தி விட்டேன் அக்கா.
@சித்தாரா மகேஷ்.
பேச வார்த்தைகள் வர மறுக்கிறது.மறக்க முடியாத நம் அவலங்களை யாரிடம் போய் உரைக்க?
//
யாரிடம் உரைத்தாலும் நீதி கிடைக்கனுமே!
தமிழனுக்கும் நீதிக்கும் வெகு தூரமாச்சே!
@அம்பலத்தார்
நிரூ தலைப்பை ஒரு தடவை மீண்டும் படித்து பாருங்கோ. எழுத்துப்பிழை?
//
ஆமாம் ஐயா.
சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
தற்போது வழுவினை/ எழுத்துப் பிழையினை திருத்தி விட்டேன்.
மன்னிக்கவும்.
True
Post a Comment