மனமென்னும் பெருங் கடலின் ஓரத்தில் சிறு துகள்களாய் ஞாபகச் சிதறல்களின் பெரும் பாகத்தினை அவள் எடுத்து விடுகின்றாள். நினைவுகளில் நீந்தச் செய்து, உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து, காலப் பெரு வெளியின் கோலக் கிறுக்கல்கள் அவள் மூலமாக வசியம் செய்யப்பட்டு விடுகின்றது. இரவுகளின் அர்த்தமற்ற பொழுதுகள் இதமான கனவுகள் மூலம் இனிமையாக்கப்படும் வேளைகளில் மனம் எத்தனை சாந்தம் பெறும்?
ஓ! அப்படியானால் அவள் நினைவுகளைத் தந்து விட்டுச் செல்லும் நீல மேகமா?
சே... இல்லை! இல்லை! மேகத்திற்கு இணையாக அவளை எப்படி ஒப்பிட முடியும்?
வாழ்வில் அர்த்தமற்றதாக இருக்கும் ஒவ்வோர் நொடிப் பொழுதுகளும் எப்போது அர்த்தமுள்ளதாக்கப்படுகின்றதோ, அப்போது தான் அந்த அர்த்தங்களின் பின்னே ஒரு பெண் இருந்திருப்பாள் என்று வரலாறு கூறுகின்றது. நினைவுகள் நீர்த் திவலைகளாகி இலகுவில் கரைந்துருகும் போது கனவுகளிலிருந்து அவள் பற்றியதான விம்பம் சிதற விடப்படுகின்றது. "ஒரு மனிதனுள் உணர்ச்சிகள் இருக்கின்றது எனும் உண்மையினை உணரச் செய்கின்ற காதல் மோகினியாக பெண் இருக்கின்றாளாம்"- நான் சொல்லவில்லை. தமிழ் இலக்கிய உலகம் செப்பி நிற்கின்றது.
ஆண்டுகள் ஒன்றென்றாலும் அன்பே உன் உடல் தாண்டி நான் வாழ்ந்தால் தப்பேதும் இல்லையே எனும் எண்ணத்தை சில பெண்கள் கொடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் அவளும் என்னுள் நுழைந்தாள். என் மனத் திரைகளின் ஓரத்தில் ஸ்ரெல்லா பற்றிய குறிப்புக்களே அதிகம் நிரம்பி வழிகின்றது. குழைத்து வைத்த கோதுமை மாவின் வெண் சாந்தெடுத்து, குமரிப் பெண்ணின் பருவ மேட்டில் மாதுளைக் கனிகளைப் பொருத்தி, அழைப்பொலியாய் இருக்கும் சிறிய மணியோசையின் கூர் முனையை மூக்கில் செருகி, அகல விரிந்திருக்கும் தன் விழி வெண் படலத்தினுள் என்னைக் கட்டி வைக்கத் துடிக்கும் ஆரஞ்சு கலர் உதட்டுக்காரி அவள் அல்லவா.
இன்னும் அவள் அழகைப் பற்றி அதிகம் சொல்ல முடியும். ஆனாலும் அவள் பற்றிய அவஸ்தையை அதிகரிக்க விரும்பிடாத மனமோ இத்தோடு நிறுத்தச் சொல்கிறது. பழகும் வேளைகளில் இனிமை தருவாள். பருவக் கனவிற்குச் சுதந்திரம் கொடுப்பாள். மனதில் எழும் எண்ண அலைகள் கரை புரண்டோடி விடாதபடி மயக்கம் கொடுப்பாள். ஸ்ரெல்லா ஒரு கிறிஸ்துவப் பெண் என்பதனையும் தாண்டி மதங்களை வென்று விடும் மனங்களின் போர்க் களமாக எம் காதல் மொட்டு விட்டது. "இனங்களிற்கிடையேயான உரசல் பயங்கரவாதமாய் இருக்கும் எம் தேசத்தில்" ஆண் பெண் எனும் பாலினங்களிற்கிடையேயான புரிதல் எனக்கும் அவளுக்குமிடையேயான ஆலாபனையாக மாற்றம் பெற்று விட்டது.
"மேல்த் தட்டு சொர்க்கம், கீழ்த் தட்டு நரகம்" எனும் மனித குலத்தை இழிவாக்கியோரின் வரைவிலக்கணத்தைப் பொய்ப்பித்தாள். மேல்த் தட்டில் சொர்க்கம்- கீழ்த் தட்டில் சொப்பனம் என ஏதேதோ கற்பித்தாள். வாழ்வில் இனிமையான தருணங்களில் இரண்டறக் கலந்து, கல்லூரி நாட்களில் கதை பேசி மகிழ்ந்த; என் காது மடல்களை வருடிக் காதல் ரசம் பருகிய ஸ்ரெல்லாவுடனான அந்த நாட்கள் போர் மேகங்களின் சூறாவளித் தாக்குதல்களால் நிலை குலைந்து விட்டது.
இப்போது எஞ்சியிருப்பது அவளைப் பற்றிய ஞாபகச் சிதறல்கள் மட்டுமே. நினைக்க நினைக்க சுகம் தரும் ஞாபக அலைகள் பெண் மனத்தை விட்டுப் பறந்து சென்றதும் வலி தருகின்றன. நரக அவஸ்தை என்பது இன்று எனக்குள் நகரும் நொடிப் பொழுதாய் மாற்றம் பெற்றிருக்கின்றது. மறுபடியும் அவளைக் காண மாட்டேனா எனும் ஏக்கத்தை விட, மனதினுள்ளே கூடு கட்டி, என் உயிர்ச் சிறகில் சிலிர்ப்பூட்டிப் பறக்கச் செய்த அந்த வெண் பஞ்சு மேகம் மீண்டும் என் அருகே வாராதா எனும் ஏக்கம் தான் எஞ்சியிருக்கின்றது.
ஓ..ஞாபகச் சிதறல்களில் சிக்கி நான் படும் நரக அவஸ்தை இது தானோ?
மெதுவாய் வந்து, என் மேனி தன்னில் ஒரு தொடுகையிட்டு, அருகே நான் இருக்கின்றேன் ஆருயிரே என அவள் சொன்னால்- என் இரவும் இனிமை ஆகாதோ?
பூவாய் மணம் பரப்பி, புன்னகையால் கோல விழியசைத்து, மோவாய் திருப்பி, மேனி தன்னில் முத்தமிட, பாவாய் அவளும் வாராளோ!
"நினைவுகளில் சிக்கி நரக அவஸ்தையில் வாழ்வதை விட- நிஜப் பொழுதில் அவள் நினைவுகளுடன் செத்து விடல் சுகம்" எனச் சொன்னவனைக் கூட்டி வாருங்கள்!
"வாழும் போதே நரகம் எனை விட்டுப் பிரிந்த அவள் நினைப்பாக என் அருகே இருக்கையில்" எப்படி நான் சாக முடியும்? இப்போது தேடத் தொடங்குகிறேன்!
அவள் எங்கே இருப்பாள்; எப்போது கிடைப்பாள் எனும் ஆவல் மேலெழ நானும் ஸ்ரெல்லாவைத் தேடிப் போகிறேன்!
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார் பிரிவு: திருக்குறள்-1158
பொழிப்புரை: எம்மை விரும்பி அன்பு செலுத்தும் ஒருவர் இல்லாது வாழ்வது கொடுமையானது. இதனை விட, இனிமையான- மனதிற்குப் பிடித்தவரைப் பிரிந்து வாழ்வது இன்னும் கொடுமையானது.
|
17 Comments:
அருமையான எழுத்து நடை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
ஒருமுறையேனும் இப்படி அழகாக எழுத முயலவேண்டும்
என்னும் ஆவல் பெருகிக் கொண்டே போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 3
வணக்கம் சகோதரா
நலமா?
நினைவுகளின் தாத்பரியத்தை
எவ்வளவு அழகாய்
எழுதி விட்டீர்கள்...
நினைவுகள் அலையென
அடிக்கையில்
அதில் அடித்து வரும்
துரும்பாய்
இழைத்துப் போனதேனோ???
தேடல் உங்களுக்கு
அழகானதொரு நல்முத்தை
கொடுத்திடும்
என்ற நம்பிக்கையில்....
''...குழைத்து வைத்த கோதுமை மாவின் வெண் சாந்தெடுத்து, குமரிப் பெண்ணின் பருவ மேட்டில் மாதுளைக் கனிகளைப் பொருத்தி, அழைப்பொலியாய் இருக்கும் சிறிய மணியோசையின் கூர் முனையை மூக்கில் செருகி, அகல விரிந்திருக்கும் தன் விழி வெண் படலத்தினுள் என்னைக் கட்டி வைக்கத் துடிக்கும் ஆரஞ்சு கலர் உதட்டுக்காரி அவள் அல்லவா...''
இது திக்குறட் கதையா? மிக நல்ல நடை...இவ்வரிகள். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம் பாஸ்.
மீண்டும் ஸ்ரேல்லாவுடன் புலம்பலோடு வந்துவிட்டீங்க.பாவை ஞாபகம் சுருதி மீட்டுகின்றது.பிடித்தவர்களைப் பிரிந்து இருப்பது கொடுமைதான் .இனிய திருக்குறளுக்கு விளக்கமாக ஒரு பதிவு.
வணக்கம் நிரூபன்!என்னத்தச் சொல்லி ஆறுதல்படுத்த?ஒரு வழியிருக்கு...........................!புரிந்திருக்கும்.பங்குனியில் நாள் பார்த்து விடுங்கள்!ஆவணியில் நாள் இல்லையாம்!அக்கா மகளுக்கு நாள் பார்த்தார்கள்.ஜோதிடர்கள்?!(சோதிடர்கள்/சாத்திரிமார்))ஆவணியில் நாள் இல்லை என்றார்களாம்!
தலைப்பைப் பார்த்ததும் "கில்மா"ப் பதிவோ என்று மிரண்டு விட்டேன்!பதினைந்து பிளஸ் போடவில்லை,ஆசுவாசப் பெருமூச்சு விட்டுப் படித்தேன்!முடிந்தபின்னும் அதே பெருமூச்சை இரண்டாவது தடவையும்.......................
Yoga.S.FR said...
வணக்கம் நிரூபன்!என்னத்தச் சொல்லி ஆறுதல்படுத்த?ஒரு வழியிருக்கு...........................!புரிந்திருக்கும்.பங்குனியில் நாள் பார்த்து விடுங்கள்!ஆவணியில் நாள் இல்லையாம்!அக்கா மகளுக்கு நாள் பார்த்தார்கள்.ஜோதிடர்கள்?!(சோதிடர்கள்/சாத்திரிமார்))ஆவணியில் நாள் இல்லை என்றார்களாம்!///
நான் சொல்ல வந்ததையே அச்சு அசலாகச் சொல்லிட்டீங்க.. அதெப்பூடி கிட்னி மட்டும் ஒன்றாகவே திங் பண்ணுதே:)
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்.அற்புதம் நிரூ!பட்டவர்களுக்குத்தெரியும் அந்த வலியும்,அதன் சுகமும்!
காதல் என்றாலே வலிதானா?
காதல் என்றாலே காத்திருத்தல் தானா?
காதல் கைகூடட்டும் விரைவினில்..!
காதலி வரட்டும் அருகினில்!
வணக்கம் நிரூபன், இலக்கிய நயத்துடன் மிகவும் அருமையான பதிவு.
எழுதுவதும் ஒவ்வொருவனுக்கு இயற்கை தரும் கொடைகளில் ஒன்று. உங்களிற்கு அதை நிறையவே அள்ளித்தந்திருக்கிறாள் இயற்கை அன்னை வாழ்த்துக்கள்..
கருத்துரை வழங்கிய, பின்னூட்டமிட்ட, ஓட்டுக்கள் அளித்த, பதிவினைப் படித்துக் கொண்டிருக்கும், பதிவினைப் படித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய நன்றி.
ரமணி ஐயா, முயன்றால் முடியாதது எதுவுமில்லை. வெகு விரைவில் தங்களாலும் இப்படிக் கவி நடை, உரை நடை கலந்த பதிவினை கொடுக்க முடியும் என நினைக்கின்றேன்.
மகேந்திரன் அண்ணா, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
வேதா அக்கா.....தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
தனிமரம் அண்ணர் உங்கள் அன்பிற்கும் நன்றி.
யோகா ஐயா & அதிரா அக்கா...வெகு விரைவில் நல்ல சேதி கிடைத்தால் சொல்றேன்..
சென்னைப் பித்தன் ஐயா, தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
ரமேஷ் அண்ணா உங்கள் ஆசிர்வாதத்திற்கும் நன்றி.
அம்பலத்தார் ஐயா...உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசி தான் என்னை இப்படி எழுத தூண்டுகிறது. தங்களின் அன்பிற்கும் நன்றி.
தனித் தனியே பதில் போட இயலாமைக்கு வருந்துகிறேன்.
நிரூபன், எல்லோராலையும் ஒருவித கலைநயத்துடன் எழுதமுடியாது. உங்களிற்கு அது அல்வா சாப்பிடுவதுபோல வார்த்தைகள் வழுகிக்கொண்டு வந்துவிழுகிறது. அதனால்தான் நான் அடிக்கடி சொல்லுறன் நீங்க இதுபோன்ற பதிவுகளையும் அடிக்கடி எழுதவேண்டும் என. அதிக பின்னூட்டங்களும் வோட்டுக்களும் எந்த ஒரு படைப்பையும் காலத்தால் அழியாததாக நிலைநிறுத்த உதவுவதில்லை. (பதிவுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்வது எவ்வளவு சிரமம் எத்தனை சமரசங்கள் செய்துகொள்ளவேண்டும் என்பதெல்லாம் தெரியும்) தரமான படைப்புக்கள்தான் பத்தோடு ஒன்றாக காலத்தால் அழிந்துபோகாமல் பத்தில் ஒன்றாக நிலைத்திருந்து அடுத்துவரும் சந்ததிகளிடமும் சென்றடையும். உங்களது பல நல்ல பதிவுகளும் நிலைத்திருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.
ஆகா அருமை
இளமை ஊஞ்சலாட, வரிகள்
கவிதை பாட, வளமை வார்த்தை
தேட புலமை மொழில் ஓட
இனிமை இனிமை காண
எளிமை எளிமை பூண புதிவு..
புதுமை கொண்டு இன்று
பூத்தது காண் நன்று!
புலவர் சா இராமாநுசம்
athira said...
Yoga.S.FR said...
வணக்கம் நிரூபன்!என்னத்தச் சொல்லி ஆறுதல்படுத்த?ஒரு வழியிருக்கு...........................!புரிந்திருக்கும்.பங்குனியில் நாள் பார்த்து விடுங்கள்!ஆவணியில் நாள் இல்லையாம்!அக்கா மகளுக்கு நாள் பார்த்தார்கள்.ஜோதிடர்கள்?!(சோதிடர்கள்/சாத்திரிமார்))ஆவணியில் நாள் இல்லை என்றார்களாம்!///
நான் சொல்ல வந்ததையே அச்சு அசலாகச் சொல்லிட்டீங்க.. அதெப்பூடி கிட்னி மட்டும் ஒன்றாகவே திங் பண்ணுதே:)///அது கிட்னி எண்டுறதால அப்புடி திங் பண்ணுதோ,என்னவோ???ஹ!ஹ!ஹா!
Post a Comment