யாழ்ப்பாணக் குடா நாட்டில் பிரதேச வாதம்!
அனைவருக்கும் வணக்கமுங்க; யாழ்ப்பாணத் தீவகற்பத்தில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன, இவை பூகோள அடிப்படையில் குடாநாட்டினை அடையாளப்படுத்தும் நோக்கில்; பல நூறு ஆண்டுகளுக்கு முன்பதாகவே ஒல்லாந்தர்களினால் பிரிக்கப்பட்டிருந்தன. இங்கே வாழும் மக்கள் அனைவருக்கும் தனி நாடு வேண்டும், எனும் ஆசை இருந்தாலும், இப் பிரதேசங்களின் அடிப்படையில் வேற்றுமைகள் அவர்களின் அடி மனங்களில் காணப்படுகின்றது என்பது உண்மையே! (நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது ஈழச் சிசுவைக் கொன்றொழித்த ஈனப் பிரதேசவாதம் தொடரின் இரண்டாவது பாகமாகும். இத் தொடரின் முதற் பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்)
வலிகாமத்தின் பலாலி எனும் ஊரினையோ அல்லது அவ் ஊருக்குச் சமீபமாக உள்ள காங்கேசன்துறை, வசாவிளான், மயிலிட்டி எனும் ஊர்களில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தினைத் தான் தமது வாழ்வாதாரமாக, போருக்கு முன்னரான காலப் பகுதியில் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து ஏனைய மக்கள் எப்படி நகைப்பார்கள் தெரியுமா? "தக்களாளிப் பழம், வயிரியா வட்டத்தார், செம்பாட்டார்" என பிரதேசத்து விவசாயத்தின் அடிப்படையில் நையாண்டி செய்து அழைப்பார்கள். மேற்படி சொற்களுக்கு விளக்கங்கள் தேவை இல்லை என நினைக்கிறேன். (விவசாயத்தினைச் சார்ந்த சொற்கள்)
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் இடம் பெயர்ந்த யாழ்ப்பாணத்து வலி வடக்கினைச் சேர்ந்த மக்கள் யாழில் உள்ள ஏனைய ஊர் மக்களோடு ஒட்டி வாழ வந்த போது அவர்களால் இந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். அல்லது விலக்கி வைக்கப்பட்டார்கள். ஈழத்தில் இன்று வரை சொந்த ஊருக்குச் சென்று வாழாத மக்களாக விளங்குகின்றவர்கள்; இந்த வலி வடக்கு மக்களே!
"பட்டப் பகலில் பச்சைக் கொடியை
பச்சைப் பாம்பென்று அடிச்ச
பச்சைப் பலாலியான்" இப்படி ஏனைய யாழ்ப்பாணத் தமிழர்கள் வலிகாமம் வடக்கினைச் சேர்ந்த தமிழர்களை நையாண்டி செய்து, அவர்களைத் தம்மிடமிருந்து பிரித்துப் பார்ப்பார்கள்.
இம் மக்களைப் பிரித்துப் பார்க்க இன்னோர் காரணம், விவசாய நிலத்தினைச் சேர்ந்த இந்த மக்களின் நிறமானது ஏனைய மக்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படும். கடுமையான கறுப்பாக இருக்கும் (Dark Black). ஆதலால் பாடசாலைகளில் இப் பகுதியினைச் சார்ந்தவர்கள் படிக்கும் போது ‘வறையோட்டுக் கரியான்’ செம்பாட்டுக் கரியான்’ எனக் கிண்டலடித்து ஏனைய உயர் குடி யாழ்ப்பாணிகள் மகிழ்ச்சியடைந்து கொள்வார்கள். இதே போலத் தான் யாழில் பிரதேசவாதத்தால் அதிகம் பாதிக்கப்படும் மக்களாக தீவகத்து மக்களும் விளங்குகிறார்கள்.
தீவகத்து மக்களை எடுத்துக் கொண்டால் அவர்களின் வாழ்வாதாரம், மீன் பிடித் தொழிலாகவே இருக்கும். காரைநகர், புங்குடுதீவு, நயினாதீவு, எழுவை தீவு, அனலைதீவு, நெடுந்தீவு, ஆகிய தீவுகளும், வேலணை, ஊர்காவற்துறை, மண்டைதீவு, ஆகிய ஊர்களையும் உள்ளடக்கியதாக இந்த தீவகம் விளங்கும். ஆனாலும் தீவகத்தில் பனைகள் அதிகமாக இருப்பதாலும், பனங் கொட்டையில் இருந்து செய்யப்படும் ஒடியலிற்கு தீவகமே பிரபல்யமாக விளங்கும். தீவகத்து மக்களின் உள்ளூர் தயாரிப்புக்களுக்கு யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளில் மவுசு இருப்பதால்; என்பதாலும் அந்தப் பகுதியினைச் சார்ந்த மக்களை "தீவார்’ புழுக் கொடியல் நக்கியள்’ என்று அழைத்து மகிழ்வார்கள் ஏனைய யாழ்ப்பாண மக்கள்.
இன்னொரு முக்கியமான விடயம், யாழின் ஏனைய பகுதி மக்கள் தீவுப் பகுதியில் வாழும் மக்களுடன் இலகுவில் திருமணத் தொடர்புகளை வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். இதற்கான விளக்கத்தினை ஏனைய யாழ்ப்பாண மக்களிடம் கேட்டால்; "தீவார் என்றால் குறைஞ்ச ஆட்களாம் என்று ஒரு காரணம் வேறு சொல்லுவார்கள். இத்தோடு விடுவார்களா? புங்குடுதீவானுக்குப் புகையிலை வித்தவர்கள் என்றும், வேலணைப் படலை கட்டியள் என்றும் தீவகத்து மக்களை எள்ளி நகைத்து தம் சுய சொறிதலை அரங்கேற்றுவர் ஈழத்து ஏனைய பகுதி மக்கள். இன்றும் ஈழத்தில் நக்கலாக "முருகா நீயும் புங்குடுதீவானுக்கு புகையிலை வித்தனியா?" எனும் பழமொழியுடன் தொடர்புடைய கதையினை ஏனைய யாழ்ப்பாணிகள் தம் பிள்ளைகளுக்குச் சொல்லி மகிழ்வார்கள்.
தென்மராட்சிப் பகுதியின் புவியியல் அமைவிடம் காரணமாக, அப் பகுதியின் நிலத்தடி நீர் சிகப்பு நிறமாகவே காணப்படும், அத்தோடு உவர் தன்மை அதிகமாகவும் காணப்படும்(Sour). இத் தென்மராட்சிப் பகுதிக் கிணறுகளில் உள்ள தண்ணீரும் சிகப்பு நிறமாக சவர் தன்மையுடன் காணப்படுவதால், இங்கே உள்ள மக்களை ஏனைய யாழ்ப்பாணிகள் ‘சவர் தண்ணிக்காறார்’ என்று கேலி செய்து மகிழ்வார்கள். அளவெட்டி மக்களை தவிலூதிகள் என்றும், கைதடி, நாவற்குழி, கொட்டடி முதலிய ஊர்களைச் சேர்ந்த மக்களை ‘மரமேறிகள் என்றும் அழைத்து மகிழ்வார்கள் இந்த யாழ்ப்பாணிகள். (சீவல் தொழில் செய்வோர் அதிகமாக வாழுவதால்)
வடமராட்சிப் பகுதியானது மீன்பிடித் தொழிலுக்குப் பிரபலம் என்பதால், கரையார்,கப்பலோட்டிகள், மீன் தின்னிகள், என அழைத்து ஏனைய யாழ்ப்பாண மக்கள் மகிழ்ந்து கொள்வார்கள். இப்படியெல்லாம் சொல்லித் தமக்குள் தாமே வேறுபட்டு நிற்கும் ஒட்டு மொத்த யாழ்ப்பாண மக்களையும் அயல் மாவட்டத்தார் அழைக்கும் பெயர் தான் பனங்காய் சூப்பிகள், பனங் கொட்டை நக்கிகள். இந்தப் பெயர் ஏன் வந்தது தெரியுமா? யாழில் பனை மரங்கள் அதிகமாக இருப்பதால், அவற்றின் உள்ளீடுகளான பனம் பழத்தினை யாழ்ப்பாண மக்கள் அதிகளவாக உண்டு அல்லது சுவைத்துச் சூப்பி மகிழ்வதால் தானாம் என்று கூறுவார்கள்.
ஒரு மாவட்டத்திற்குள் இத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்றால், இந்த ஒரு மாவட்டத்தினை அடுத்த மாவட்டக்காரர் எப்படிப் புறக்கணிப்பார்கள் என்று கேட்கிறீர்களா? அதனை அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.
வன்னிப் பகுதியில் உள்ள பிரதேசவாதம் பற்றிய தகவல்களோடு இத் தொடரின் அடுத்த பாகத்தினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்......!
தலைப்பு விளக்கம்: ஈழத்தை எல்லோரும் அன்னையாகச் சிறப்பித்து அல்லது வர்ணித்து எழுதுவார்கள். நான் இங்கே ஈழத்தை ஓர் சிசுவாகப் பாவித்து பதிவிற்கான தலைப்பினைத் தெரிவு செய்திருக்கிறேன்.
யாழ்ப்பாண மக்களின் பிரதேசவாதம் தொடர்பாக நீங்களும் அறிந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா?
****************************************************************************************************************
படலை என்று சொன்னால் ஈழத்தில் உள்ளோருக்கு நல்ல பரிச்சயம் இருக்கும். வீட்டினுள் நுழைய முன்பதாக வீதிக்கு அருகாக இருக்கும் நுழை வாயிலைப் படலை என்று சொல்லுவார்கள்.
அப்படீன்னா "வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை" எப்படி இருக்கும் என நினைக்கிறீர்களா? வாருங்கள் அங்கே போய்ப் பார்ப்போம்!
படலைக்கு அழகு வேலிகள் இருப்பது தான். தன் மண்ணை விட்டுப் பிரிந்த ஓர் மைந்தனின் உணர்வலைகளினை, நினைவுகளை, அனுபவங்களை இவ் வலைப் பதிவு பேசி நிற்பதால்; இவ் வலைப் பதிவிற்கும் வேலிகள் தொலைத்த ஒர் படலையின் கதை எனும் பெயரைச் சூட்டியிருக்கிறார் ஜேகே அவர்கள்.
பதிவர் ஜேகே அவர்கள் தன்னுடைய வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை வலைப் பூவினூடாக தன் அனுபவங்கள், சுவாரஸ்யமான நினைவலைகள், பரீட்சார்த்த இலக்கிய முயற்சிகளைப் பதிவிட்டு வருகின்றார்.
ஜேகே அவர்களின் வலைப் பூவிற்கும் நீங்கள் ஓய்வாக இருக்கும் போது சென்று வரலாம் அல்லவா?
****************************************************************************************************************
|
33 Comments:
என்ன சொல்ல?மனிதனை பிரிக்கும் எந்த வாதமும் துன்பத்தில் முடியும்.
மாலை வணக்கம் நிரூபன்!"தீவான் திடுக்கிடுவான் திண்ணைக்கு மண்ணெடுப்பான்"என்று நான் படித்த யாழ்.மத்திய கல்லூரியில் ஆசிரியர்கள் தீவுப் பகுதி மாணவர்களை கிண்டல் செய்வார்கள்!இத்தனைக்கும்,ஆசிரியர்கள் எல்லோருமே வேறு ஊர்களிலிருந்து தான் கற்பிக்க வருவார்கள்!என்னுடன் கற்ற தீவுப்பகுதி மாணவர்கள் எல்லோருமே சிறந்த தரமுடைய மாணவர்கள் தான்!சிலர் விடுதியில் தங்கிக் கூடப் படித்தார்கள்!
பிரதேசவாதத்தால்...பிரிந்த எத்தனையோ இனங்கள் முன்னோடியாயிருந்தும்..மறுபடி பாடம் படிக்க துடிக்குது நம்மினம்...
எல்லாருக்கும் வாயடச்சுப் போச்சு போல?நிரூபா,நிப்பாட்டுவமோ?உள்ளதச் சொன்னா..................................!
சங்கை ஊதி வையுங்கோ நிரூ.காதில கேட்டு வச்சா நல்லதுதான்.ஆனா நிரூ ஊரில உள்ளவைதான் இதுக்கு பதில் சொன்னா சூடா இருக்கும்.
வெளிநாடுகளில எங்களுக்கு மனிதர்களை மட்டுமே தெரியுது !
மாலை வணக்கம் நிரூபன்!
ஹேமா அழகாக சொல்லிவிட்டார் என்றே நினைக்கிறேன்.. அத்தோடு தீவுகளில் மீன்பிடி தொழில் மட்டும் இல்லை இலங்கையின் மிக முக்கியமான தமிழ் தொழில் அதிபர்கள் அனைவரும் தீவார்களே.. அதற்கு ஒரு பழமொழியும் சொல்வார்கள் "காக்கா பறக்காத இடமும் இல்லை காரைதீவான் போகா இடமும் இல்லை" என்று இலங்கையில் உள்ள பல்பொருள் அங்காடிகள் தீவார்கள் கையில்தான் இருந்தது. இப்போதும் இருக்கின்றது..? இதை பற்றி என்னை விட அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..!!!!!
எல்லா இடத்திலும் இப்பிரச்சனை இருக்குதுதான் போல.
இங்கே ஒருதடவை வெள்ளையர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது, யார் சுரிதாருடன் போனாலும் அவர்களைப் பார்த்து வெள்ளை boys “பாக்கி” “பாக்கி” எனக் காத்துவார்களாம்..
சில இடத்தில் மட்டும் நடந்த கதை.
காட்டான் அண்ணன் கனகாலத்துகுப் பின் வந்ததுமில்லாமல் சும்மா இருக்கிற சங்கை ஊதிட்டுப் போயிருக்கிறார்.... ஹையோ நான் இனியும் இங்கே நிற்கமாட்டேன்...கை கால் எல்லாம் ரைப் அடிக்கப்பார்க்குது:))
ஆதிரா நான் ஒன்றும் சங்கை ஊதல கேள்விப்பட்டத சொல்கிறேன்.. தவறிருந்தால் திருத்தலாமே? (அப்பாடா அதிராவ மாட்டியாச்சு.. ஹி ஹி!!)
வணக்கம்.
அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்.பதிவு சிறப்பு.நன்றி.
@shanmugavel
என்ன சொல்ல?மனிதனை பிரிக்கும் எந்த வாதமும் துன்பத்தில் முடியும்.
//
வாங்கோ அண்ணா,
உண்மை தான்,
மனிதர்களது ஒற்றுமையினைச் சீர் குலைப்பதில் இவை தான் முதன்மை பெறுகின்றன.
@shanmugavel
என்ன சொல்ல?மனிதனை பிரிக்கும் எந்த வாதமும் துன்பத்தில் முடியும்.
//
வாங்கோ அண்ணா,
உண்மை தான்,
மனிதர்களது ஒற்றுமையினைச் சீர் குலைப்பதில் இவை தான் முதன்மை பெறுகின்றன.
@Yoga.S.FR
மாலை வணக்கம் நிரூபன்!"தீவான் திடுக்கிடுவான் திண்ணைக்கு மண்ணெடுப்பான்"என்று நான் படித்த யாழ்.மத்திய கல்லூரியில் ஆசிரியர்கள் தீவுப் பகுதி மாணவர்களை கிண்டல் செய்வார்கள்!இத்தனைக்கும்,ஆசிரியர்கள் எல்லோருமே வேறு ஊர்களிலிருந்து தான் கற்பிக்க வருவார்கள்!என்னுடன் கற்ற தீவுப்பகுதி மாணவர்கள் எல்லோருமே சிறந்த தரமுடைய மாணவர்கள் தான்!சிலர் விடுதியில் தங்கிக் கூடப் படித்தார்கள்!
//
வாங்கோ ஐயா,
நீங்க யாழ்மத்திய கல்லூரியே.
அப்படீன்னா யாருடைய காலத்தில படிச்சனீங்கள்?
பிக்மேட்ச் எல்லாம் பார்த்திருப்பீங்களே;-)))
இப்படியொரு கிண்டல் வசனம் இருப்பது எனக்கு இன்று தான் தெரியும்.
உண்மையில் வடமராட்சி, மற்றும் தீவுப் பகுதி மக்கள் தான் நன்றாகப் படிக்க கூடியவர்களாக ஈழத்தில் உள்ளார்கள்.
@ரெவெரி
பிரதேசவாதத்தால்...பிரிந்த எத்தனையோ இனங்கள் முன்னோடியாயிருந்தும்..மறுபடி பாடம் படிக்க துடிக்குது நம்மினம்...
//
என்ன செய்ய காலம் செய்த கோலம் இது அல்லவா?
@Yoga.S.FR
எல்லாருக்கும் வாயடச்சுப் போச்சு போல?நிரூபா,நிப்பாட்டுவமோ?உள்ளதச் சொன்னா..................................!
//
இல்லை ஐயா,
வன்னி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை, மலையகம் என்று ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு நிப்பாட்டும்,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@Yoga.S.FR
எல்லாருக்கும் வாயடச்சுப் போச்சு போல?நிரூபா,நிப்பாட்டுவமோ?உள்ளதச் சொன்னா..................................!
//
அப்படி நிப்பாடினால் தானே எல்லோருக்கும் தங்கள் தங்கள் அழுக்குகள் தெரியும்.
@ஹேமா
சங்கை ஊதி வையுங்கோ நிரூ.காதில கேட்டு வச்சா நல்லதுதான்.ஆனா நிரூ ஊரில உள்ளவைதான் இதுக்கு பதில் சொன்னா சூடா இருக்கும்.
வெளிநாடுகளில எங்களுக்கு மனிதர்களை மட்டுமே தெரியுது !
//
மெய்யாவே சொல்லுறீங்க.
அப்படீன்னா ஒவ்வோர் ஊரில் உள்ள திசைகளின் அடிப்படையில் வெளிநாட்டில் சங்கங்கள் அமைத்து எம்மவர்கள் செயற்படுகிறார்களே!
இது என்ன வாதம் அக்கா?
வசாவிளான் கிழக்கு முன்னேற்ற சங்கம்,
நெடுந்தீவு அபிவிருத்தி மன்றம்..இப்படி இன்னும் பல
@காட்டான்
மாலை வணக்கம் நிரூபன்!
ஹேமா அழகாக சொல்லிவிட்டார் என்றே நினைக்கிறேன்.. அத்தோடு தீவுகளில் மீன்பிடி தொழில் மட்டும் இல்லை இலங்கையின் மிக முக்கியமான தமிழ் தொழில் அதிபர்கள் அனைவரும் தீவார்களே.. அதற்கு ஒரு பழமொழியும் சொல்வார்கள் "காக்கா பறக்காத இடமும் இல்லை காரைதீவான் போகா இடமும் இல்லை" என்று இலங்கையில் உள்ள பல்பொருள் அங்காடிகள் தீவார்கள் கையில்தான் இருந்தது. இப்போதும் இருக்கின்றது..? இதை பற்றி என்னை விட அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..!!!!!
//
இனிய காலை வணக்கம் அங்கிள்
உண்மையில் வியாபாரங்களைப் பொறுத்தவரை, தீவுப் பகுதி மக்கள் தான் இலங்கையிலும் சரி, உலகளவிலும் சரி கொடிகட்டிப் பறக்கிறார்கள்.
@athira
எல்லா இடத்திலும் இப்பிரச்சனை இருக்குதுதான் போல.
இங்கே ஒருதடவை வெள்ளையர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது, யார் சுரிதாருடன் போனாலும் அவர்களைப் பார்த்து வெள்ளை boys “பாக்கி” “பாக்கி” எனக் காத்துவார்களாம்..
சில இடத்தில் மட்டும் நடந்த கதை//
எல்லா இடத்திலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது தான்,.
ஆனால் எம்மவர்களுக்குள் தான் இந்தப் பிரச்சினை அதிகம்.
@athira
காட்டான் அண்ணன் கனகாலத்துகுப் பின் வந்ததுமில்லாமல் சும்மா இருக்கிற சங்கை ஊதிட்டுப் போயிருக்கிறார்.... ஹையோ நான் இனியும் இங்கே நிற்கமாட்டேன்...கை கால் எல்லாம் ரைப் அடிக்கப்பார்க்குது:))
//
ஆனால் மறுபடியும் வருவீங்க இல்லே..
@Kumaran
அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்.பதிவு சிறப்பு.நன்றி.
//
வணக்கம் & நன்றி நண்பா
அடுத்த பாகத்தில் சந்திப்போம்.
ஊருக்கு எல்லாம் சோறு போட்டு(உணவகம் வைத்து) உயர்ந்து போனவனும் சுருட்டுக்கடை என சுற்றிவந்தவனும் தீவான் தான் என எந்த ஊரில் கேட்டாலும் எடுத்து இயப்புவான் சுகதாசவும் சுந்தரலிங்கமும் அது எல்லாம் ஒரு காலம் அண்ணாச்சி.
தொடர்ந்தும் சொல்லி இன்னும் ஏன் பிரிந்து நிற்பான் ஒன்றுபடுவோம் எல்லோறும்.
நிரூக்குட்டி, வணக்கமடா!
இந்தப் பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல், “ கும்புடுறேன் சாமி” எனும் பெயரில் ஒரு கமெண்டு போட்டேனே! ஏன் மச்சி அதை பப்ளிஷ் பண்ணலை! ஹி ஹி ஹி ஹி ஹி !!!
@நிரூபன்
//....ஊரில் உள்ள திசைகளின் அடிப்படையில் வெளிநாட்டில் சங்கங்கள் அமைத்து எம்மவர்கள் செயற்படுகிறார்களே!
இது என்ன வாதம் அக்கா?
வசாவிளான் கிழக்கு முன்னேற்ற சங்கம்,
நெடுந்தீவு அபிவிருத்தி மன்றம்..இப்படி இன்னும் பல//
நிரூ, ஊரை முன்னேற்ற, பாடசாலையை முன்னேற்ற சங்கங்கள் வைப்பதிலை தப்பில்லை. ஒவ்வொருவரும் தான் வாழ்ந்த, வாழும் பிரதேசத்தை, படிச்ச பாடசாலையை முன்னேற்ற ஆரம்பித்தால் அனைத்து பிரதேசங்களும் முன்னேறும். ஆனால் சிலபேர் சங்கங்கள் அமைப்பதுவும் மன்றங்கள் அமைப்பதுவும் தங்கள் சுய நலன்களுக்காகவும் அடுத்தவனை மட்டம்தட்டுவதற்காகவும் என்பதாக இருக்கிறது. அப்படியானவர்களை இனங்கண்டு அவர்களை சாடவேண்டும்.
தீவுப்பகுதியினர் கொழும்பையும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் அதிகமான உணவகங்களையும் முன்னையகாலத்தில் நடத்தினர், கொழும்பை அண்மித்த பகுதிகளில் இருந்த வாழப்பழக்கடைகள் பூராவும் சுழிபுரத்தாரால் நடத்தப்பட்டது. எந்த ஒரு வாழைப்பழக்கடைக்கு போனாலும் மடித்துக்கட்டிய நாலுமுழ வேட்டியுடன் மேலங்கி அணியாமல் குண்டாக வண்டியும் உருவமும் அவர்கள் எல்லோரையும் ஒரே குடும்பத்தவர் அல்லது உறவினர் என்றே எண்ணத்தோன்றும். வடமராட்சியார் கல்வியில் மிகவும் முன்னணியில் இருப்பது உண்மைதான். ஒவ்வொரு குடும்பமும் வைத்தியர், பொறியியலாளர்... என படித்தவர்களால் நிறைந்திருக்கும். (என்னைப்போல ஒருசில விதிவிலக்குகள் தவிர)
வணக்கம் நிரூபன், நல்லதொரு அலசல். யாழ்ப்பாணம் பற்றி அதிகம் தெரியாத எம்மைப் போன்றவர்களுக்கு நிறைய விடயங்களை சொல்லிக்கொடுக்கும் பதிவு. பகிர்விற்கு நன்றிகள்.
//காட்டான் said...
ஆதிரா நான் ஒன்றும் சங்கை ஊதல கேள்விப்பட்டத சொல்கிறேன்.. தவறிருந்தால் திருத்தலாமே? (அப்பாடா அதிராவ மாட்டியாச்சு.. ஹி ஹி!!//
அச்சச்சோ.. நான் ஏதோ நித்திரைத் தூக்கத்தில உளறிட்டேன்...:)).. இப்படி கேள்வி கேட்பீங்களெனத் தெரியாதெனக்கு... பெரியமனசு பண்ணி மன்னிச்சிடுங்க:)... வேணுமெண்டால் கீழுள்ளதில என்ன பணிஸ்மெண்ட் வேணுமெண்டாலும் தாங்க... ஆசையா ஏற்றுக்கொள்கிறேன்...
1. அவித்த கோழி முட்டை 10 சாப்பிடுதல்
2. புட்டும் சிக்கின் பிரட்டலும்.
3. இடியப்பம் அண்ட் தாளிச்ச சொதி.
4. மட்டின் பிர்ர்ர்ர்ர்ராணி.
5. KFC
6. தோசையும் சட்னியும்.
இது போதும் இதுக்குள்ள ஒரு பனிஸ்மெண்ட் தாங்கோ:)))...
இண்டைக்கு வரைக்கும் எங்க அம்மா அவன் தீவகத்தான் எண்டு சொல்றதும் உவன் நளவன் பள்ளன் எண்டு சாதி பிரிச்சு பாக்குறதும் நாங்கள் வெள்ளாளர்கள் எண்டு பீதிக்கிறதும் எங்கட வீட்டிலே நடக்குற ஒன்னு தான் ..!!
அப்புறம் துன்னலையரை யும் எதோ ஒண்டு சொல்லுவங்கோ ...எனக்கு தான் வர மாட்டேங்குது ...
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
இந்தப் பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல், “ கும்புடுறேன் சாமி” எனும் பெயரில் ஒரு கமெண்டு போட்டேனே! ஏன் மச்சி அதை பப்ளிஷ் பண்ணலை! ஹி ஹி ஹி ஹி ஹி !!!
//
இது உன்னோட அடுத்த அவதாரமா?
அட அது நீதான்னு சொல்லியிருந்தா அந்த கமெண்டுகளையும் பப்ளிஷ் பண்ணியிருப்பேனே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@அம்பலத்தார்
நிரூ, ஊரை முன்னேற்ற, பாடசாலையை முன்னேற்ற சங்கங்கள் வைப்பதிலை தப்பில்லை. ஒவ்வொருவரும் தான் வாழ்ந்த, வாழும் பிரதேசத்தை, படிச்ச பாடசாலையை முன்னேற்ற ஆரம்பித்தால் அனைத்து பிரதேசங்களும் முன்னேறும். ஆனால் சிலபேர் சங்கங்கள் அமைப்பதுவும் மன்றங்கள் அமைப்பதுவும் தங்கள் சுய நலன்களுக்காகவும் அடுத்தவனை மட்டம்தட்டுவதற்காகவும் என்பதாக இருக்கிறது. அப்படியானவர்களை இனங்கண்டு அவர்களை சாடவேண்டும்.//
உண்மை தான் ஐயா.
ஆனாலும் சில சங்களில் எல்லோரும் இணைய முடியாத நிலமையும் இருக்கிறது அல்லவா?
@பி.அமல்ராஜ்
வணக்கம் நிரூபன், நல்லதொரு அலசல். யாழ்ப்பாணம் பற்றி அதிகம் தெரியாத எம்மைப் போன்றவர்களுக்கு நிறைய விடயங்களை சொல்லிக்கொடுக்கும் பதிவு. பகிர்விற்கு நன்றிகள்.
//
நன்றி அண்ணர்.
@athira
அச்சச்சோ.. நான் ஏதோ நித்திரைத் தூக்கத்தில உளறிட்டேன்...:)).. இப்படி கேள்வி கேட்பீங்களெனத் தெரியாதெனக்கு... பெரியமனசு பண்ணி மன்னிச்சிடுங்க:)... வேணுமெண்டால் கீழுள்ளதில என்ன பணிஸ்மெண்ட் வேணுமெண்டாலும் தாங்க... ஆசையா ஏற்றுக்கொள்கிறேன்...
1. அவித்த கோழி முட்டை 10 சாப்பிடுதல்
2. புட்டும் சிக்கின் பிரட்டலும்.
3. இடியப்பம் அண்ட் தாளிச்ச சொதி.
4. மட்டின் பிர்ர்ர்ர்ர்ராணி.
5. KFC
6. தோசையும் சட்னியும்.
இது போதும் இதுக்குள்ள ஒரு பனிஸ்மெண்ட் தாங்கோ:)))...
//
இதெல்லாம் இப்போது கைவசம் இல்லை!
கீரைப்புட்டும், கிழங்கு கறியும் இருக்கு! ஓக்கேவா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@நிரோஜ்
இண்டைக்கு வரைக்கும் எங்க அம்மா அவன் தீவகத்தான் எண்டு சொல்றதும் உவன் நளவன் பள்ளன் எண்டு சாதி பிரிச்சு பாக்குறதும் நாங்கள் வெள்ளாளர்கள் எண்டு பீதிக்கிறதும் எங்கட வீட்டிலே நடக்குற ஒன்னு தான் ..!!
அப்புறம் துன்னலையரை யும் எதோ ஒண்டு சொல்லுவங்கோ ...எனக்கு தான் வர மாட்டேங்குது //
வணக்கம் நிரோஜ்..
இப்படியான தவறுகள் அனைத்தும் நீங்கி நல்ல சமூகம் உருவானால் அனைவருக்கும் மகிழ்ச்சியே..
துன்னாலையாரை புகையிலையுடன் தொடர்புபடுத்தி சொல்லுவார்கள் என நினைக்கிறேன்.
நான் அறியவில்லை! எங்கேனும் அறிந்தால் கண்டிப்பாக பகிர்கிறேன்.
Post a Comment