Tuesday, October 18, 2011

அகதித் தமிழனின் அவலச் சாவு - உண்மைச் சம்பவம்!

"டெய்சி,  நான் உணர்ச்சி வேகத்தில அப்படிச் செய்திட்டேன். என்ன பண்ண? ஒரு நிமிடம் யோசித்திருந்தா, உங்களை கை படாத பூவாக வாழ விட்டிருக்கலாம். என் மேலையும் தப்பில்லைத் தானே? நீங்க வளைந்து கொடுத்தீங்க. நான் வளைத்துக் கொடுத்தேன். இனிமே இந்த உறவு வேணாம். நான் உங்களைக் கல்யாணம் கட்டுற முடிவ மாத்திக்கப் போறேன். ஒரு கீழ்ச் சாதிப் பொண்ணை கல்யாணம் கட்ட எங்க வீட்டில ஒத்துக்க மாட்டாங்களாம். மன்னிச்சிடு டெய்சி!" என அவள் காலில் விழுந்து மண்டியிட்டுப் பேசிய வேந்தனைப் பார்த்து சடாரென ஓங்கி கன்னத்தில் அடிக்காத குறையாக வார்த்தைகளை அனல் பறக்க வீசத் தொடங்கினாள் டெய்சி. 
"நீங்க ஆம்பிளைங்க. உங்களுக்கு வேண்டிய மேட்டர் முடிஞ்சுதுன்னா என்ன வேணாலும் பேசுவீங்க இல்லே? சீ...அப்பவே சொன்னாங்க." "சேறு கண்ட இடத்தில காலை மிதிச்சு, தண்ணி கண்ட இடத்தில கழுவுறது" தான் உங்கள மாதிரி ஆளுங்களோட குணம் என்று. அதையும் மீறி உங்களை நம்பி உங்களுக்கு என்னை அர்ப்பணித்தேனே! என்னைச் செருப்பாலை அடிக்கனும். நீங்க உங்க முடிவைச் சொல்லிட்டீங்க தானே! என் மூஞ்சியிலே முழிக்காதீங்க. எனக்குத் தெரியும் என் வழியைப் பார்த்துக் கொள்ள." எனத் தன் நம்பிக்கைத் துரோகத்திற்குச் செருப்பால் அடிக்காத குறையாக வார்த்தைகளால் சுட்ட டெய்சியிடமிருந்து காதலெனும் ஆடை போட்டுத் தன் காம இச்சை தீர்த்த பெருமிதத்தில் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் வேந்தன்.

வீட்டிற்கு வந்து கதவினைத் திறந்த வேந்தனுக்கு அவன் தாய் மரகத்தின் வார்த்தைகள் கடுப்பையும், விரக்தியையும் உண்டு பண்ணியது. "காவாலி! தெருப் பொறுக்கி, வாழ வேண்டிய வயசில ஊர் மேயுற பரதேசி! உன்னைப் பெத்து வளர்த்த நேரத்துக்கு ரெண்டு தென்னம் புள்ளையை நட்டிருந்தாலும் இப்போதைக்கு வருமானமாச்சும் (INCOME) கிடைச்சிருக்கும்! உன்னோட அறிவுக் கண்ணைக் கொஞ்சம் திறந்து பாரேன். பக்கத்து வீட்டில இருக்கிற சுதன் எப்பூடி இருக்கான். அவனுக்கும் உன்னோட வயசு தானே. லண்டனுக்குப் போயி கார்ட் (விசா) கிடைச்சு வாற மாதம் வந்து கலியாணம் கட்டப் போறான். உனக்கும் ஏழு கழுதை வயசாகப் போகுதில்லே. ஏன் இப்படித் தெருப் பொறுக்கியா அலைகிறாய். வெளிநாட்டிற்குப் போய் உழைத்து வாழு என்றாலும் கேட்கிறியா? "

"ஊர் சுத்திச் சுத்தியெல்லே உன்ரை வாழ்வைக் கெடுக்கிறாய். எத்தினை நாளைக்குத் தான் உனக்கு நாம சாப்பாடு போடுறது! உனக்கும் உழைத்துப் பெற்றோரைப் பார்க்க வேண்டிய கடமை ஒன்று இருக்கென்று மறந்து போட்டியா?  அதோட இந்த நாசமாப் போன ஆமிக்காரங்களுக்குப் பயந்து எத்தனை நாளைக்குத் தான் வாழப் போறாய்?" என அனல் பறக்கும் வார்த்தைகளைப் பேசி முடித்த மரகத்தினைப் பார்த்து "ஒரு நமட்டுச் சிரிப்புடன் பேசி முடிச்சிட்டியா அம்மா" எனக் கேட்டான் வேந்தன். போ கழுதை! போய்ச் சாப்பிடு! உன்னைத் திருத்தவே முடியாது எனத் திட்டித் தீர்த்தாள் மரகதம்! வேந்தன் மெதுவாக தன் அறைக்குள் நுழைந்து வானொலிப் பெட்டியை முறுக்கி விட்டவாறு சிந்திக்கத் தொடங்கினான்.

வானொலியில் அப்போது ஒலித்த "எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யார் அறிவாரோ..."எனும் பாடல் அவன் சிந்தையினை மேலும் கிளறி அவன் மன நிலைக்கேற்ற சிட்டுவேசன் பாடலாக மாறியது. தன் உடன் பிறந்த தங்கையினைக் கரை சேர்க்க வேண்டும் எனும் கடமை, இராணுவத்தால் அடிக்கடி சுற்றி வளைக்கப்பட்டுத் தலையாட்டி முன் நிறுத்தப்பட்டுத் தமிழன் என்ற ஒரேயொரு காரணத்திற்காக சித்திர வதைக் கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கசாப்புக் கடை ஆடுகள் போல துன்புறுத்திக் கொலை செய்யப்படும் நிரந்தரமற்ற நாட்டு நிலமை; வீட்டின் பொருளாதார நிலை, பள்ளிப் படிப்பை முடித்தும் வேலை செய்ய முடியாத நிலமை போன்ற இன்ன பிற காரணிகள் இனிமேலும் நாட்டில் இருப்பதால் பயனில்லை. இப்பவே வெளி நாடு போக ட்ரை பண்ண வேண்டும் எனும் உணர்வினை அவனுள் கிளப்பி விட்டிருந்தது.

உடனடியாக என்னோட அம்மாவிடம் போய்ச் சொல்லனும் என்றவாறு, அடுப்படிக்குள் நுழைந்த வேந்தன்; "அம்மா இப்பவே நீ மாமா கூடப் பேசி! என்னை எந்த நாட்டிற்காச்சும் அனுப்பி வை. எனப் பேசிய வேந்தனின் சொற் கேட்டு வேந்தனின் தாய் மரகதமோ முகமலர்ச்சி கொண்டவளாக, "ஓக்கே தம்பி! நான் இன்னைக்கு இரவே தம்பி கூடப் பேசி, உன்னை எங்கேயாச்சும் ஒரு பெரிய நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்" எனச் சொல்லி வேந்தனின் வெளி நாட்டுக் கனவிற்கு ஊக்கம் கொடுத்தாள். மறு நாள் பொழுது புலர்ந்தது! மரகதம் வேந்தனின் படுக்கையறைக்குச் சென்று அவனைத் துயில் எழுப்பினாள். "தம்பி வேந்தன், மாமாவிடம் நேத்தைக்கு நைட் பேசினேன். அவன் தன்னட்டை (தன்னிடம்) காசு இல்லாட்டியும் கடன் பட்டாச்சும் உனக்கு உதவி செய்கிறதா சொல்லியிருக்கான்."

"இப்போ தன்னோட வசதிக்கு ஏற்றாற் போல உன்னை ஆஸ்திரேலியாவுக்கு கப்பலில் அனுப்புவதற்கு ஏஜென்ஸி கிட்டப் பேசிறதா முடிவெடுத்திருக்கிறான். முதல்ல நீ இலங்கையை விட்டு கிளம்பினால் தான் மத்த வேலைகளைப் பத்தி யோசிக்க முடியும் என்று தம்பி சொல்லியிருகான். நீ இன்னைக்கே பாஸ்போர்ட்டை எடுத்துக் கிட்டு கொழும்பிற்குப் போயி, இந்திய விசாவிற்கு அப்ளே (APPLY) பண்ணு" எனக் கூறியதும், வலி நிறைந்த ஒரு நாட்டில் அடிமையாகி துப்பாக்கி முனைகளின் கீழ் வாழ்வதை விடுத்து, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியும் எனும் நம்பிக்கையில் வெளி நாட்டிற்குச் சென்ற பலரின் பின்னே தானும் சங்கிலித் தொடர் போலச் செல்வதாக முடிவெடுத்தான் வேந்தன். 

வேந்தன் இந்திய விசா பெற்று, தமிழகத்தினுள் காலடி எடுத்து வைத்தான். பேசி வைத்தாற் போல, வேந்தனின் ஆசை மாமா ராஜன் திட்டங்களை முன்னெடுத்து ஏஜென்சியிடம் வெளிநாட்டிற்கு அனுப்புவார் எனும் நம்பிக்கையில் வேந்தனை ஒப்படைத்தார். வேந்தன் தமிழகத்திலிருந்து தரை வழியாக இந்தியாவின் கேரளாவிலுள்ள கொல்லத்திற்கு ஏஜென்சி தருமனுடன் சென்று சேர்ந்தான். "நான் எப்போது வெளி நாடு போவேன்? எப்போது வேலை செய்வேன்?" என அங்காலாய்த்தவாறு வெளி நாடு செல்லக் காத்திருக்கும் 56 தமிழ் உறவுகளோடு தானும் ஒருவனாக கேரளத்தில் தங்கினான் வேந்தான். 

"மச்சான் நீயும் வெளிநாடு போகவே வந்திருக்கிறாய்?" என நக்கல் கலந்து சிரித்துப் பேசிய - வெளி நாடு போவதற்காய் தங்கியிருந்த புது நண்பர்களின் அறிமுகம் வேந்தனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. "மச்சான் வேந்தன் உனக்குத் தெரியுமா? வெளி நாட்டில மணித்தியாலத்துக்குத் தான் சம்பளம் குடுப்பாங்களாம். அப்படீன்னா நீ முப்பது நாளும் எட்டு மணித்தியாலப் படி வேலை செய்தால் எவ்ளோ சம்பளம் கிடைக்கும் எனப் பெருக்கிப் பாரேன்?" எனச் சொன்னான் இன்னோர் நண்பன். 
"ஓம் மச்சான், மாசத்தில 240 மணித்தியாலம் வேலை செய்தாலே, இலங்கைக் காசுக்கு மூன்று இலட்சத்திற்கு மேல சம்பளம் வரும்! அதோட, வீட்டு வாடகை, கரண்டு பில், ஏனைய சிலவுகள் போக ஒரு இலட்சம் மிச்சம் பிடிச்சாலும் (சேமித்தாலும்) தங்கச்சியின் கலியாணத்திற்கு காசு நிறைஞ்சிடும்" எனச் சொன்னான் வேந்தான். 

வெளி நாடு செல்லும் கனவினைச் சுமந்தவாறு காத்திருந்தோருக்கு நாட்கள் நகர்ந்தே தவிர, தாம் வெளி நாட்டிற்குச் செல்வோமா எனும் சந்தேகமே ஏற்பட்டுக் கொண்டிருந்தது. "தருமன் அண்ணே! வீட்டில உள்ள நகை நட்டு எல்லாம் விற்றுத் தான் அப்பா என்னை அனுப்பி வைத்தார். இப்பவே ஆறு மாசம் ஆச்சு, ஒரு காரியமும் நடக்கிறதா காணல்லை. நீங்க தான் மனசு வைத்து நம்மள நேர காலத்திற்கு வெளி நாட்டிற்கு அனுப்பி வைக்க வேணும்" எனச் சொன்னான் வேந்தனோடு காத்திருந்த மாறன். 

"ஓம் தம்பி. கண்டிப்பா கூடிய சீக்கிரத்தில அனுப்பி வைக்கிறேன்." எனச் சொல்லி விட்டு வெளி நாட்டிற்குப் போவதாற்காய் முற் பணமாய் பாதி எமவுண்டைக் கொடுத்து விட்டுக் காத்திருக்கும், 56 அப்பாவித் தமிழ் உள்ளங்களின் பணத்திலும் வாங்கிய Black Douglas குடி பானத்தினை மூக்கு முட்டக் குடித்து விட்டுப் போதையிலே புரண்டார் ஏஜென்சி தருமன்.

அப்போது இன்னமும் வெளி நாட்டிற்குப் போக முடியலையே எனும் ஆதங்கம் நிறைந்தவனாக தருமன் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்தில் தங்கியிருந்த வேந்தன் பாடத் தொடங்கினான். 

"அவனுக்கென்ன தூங்கி விட்டான். அகப்பட்டவன் நானல்லவா". எங்கிருந்தோ வந்த இப் பாடல் வரிகளைக் கேட்டுப் போதையிலும் தன் நிலை மறவாத ஆளாய் "உன்னை நான் சந்தித்தேன். நீ ஆயிரத்தில் ஒருவன்" எனப் பல பேரை வெளி நாட்டு ஆசை காட்டி ஏமாற்றி; நட்டாற்றில் கைவிடுவது போன்று, உன்னையும் விடுவேன் வேந்தா ஜாக்கிரதை எனும் பூடகமான சேதியினைப் பாடல் மூலமாகச் சொன்னார் தருமன். 

வேந்தனோ, "சே..எல்லாம் என்ரை தலை விதி! பேசாம டெய்சியைக் கூட்டிக் கொண்டு ஓடிப் போய்க் கலியாணம் கட்டியிருந்தாலாச்சும், அவளோட வசதிக்கு இப்பவே அவங்களோட கடையை என்ரை பேரில எழுதி வாங்கியிருக்கலாம். இப்போ ரெண்டும் கெட்டான் நிலையில நின்று வாடுறேனே!" என நொந்து கொண்டான்.

ஏஜென்சி தருமனின் போன் அப்போது ஒலியெழுப்பியது. அவசர் அவசரமாக வெளி நாட்டிற்குப் போவதற்காகத் தங்கியிருந்த 56 பேரையும் மிட் நைட்டில் துயில் கலைத்தார். 

"எல்லோரும் நான் சொல்லுறத தெளிவாக கேட்டுக் கொள்ளுங்க. நீங்க அனைவரும் இன்னைக்கு விடிய 2 மணிக்கு ஆஸ்திரேலியா நோக்கிப் போகத் தயாராகப் போறீங்க. எல்லோரும் விடிய 1.45 இற்கு ரெடியாகி வாசலில நிற்கனும். தம்பி வேந்தன், நீங்க கடற் புலியில இருந்ததா கேள்விப் பட்டேன். அப்போ நீங்களும், "போட்" (BOAT) ஓட்டத் தெரிந்த மாறனும் தான் கரையில இருக்கிற படகினை ஓட்டிக் கொண்டு போகப் போறீங்க. நீங்க கொல்லத்தில இருந்து 160 நோட்டிக்கல் - Nautical Miles (கடல் மைல்) தொலைவில இருக்கிற இடத்தில போய், சரியாக இலங்கையில் உள்ள காலிக்கு தென் மேற்காக நிலை எடுத்து நிற்கனும்.

"அங்கே தான் உங்கள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு போற பெரிய கப்பல் காத்திருக்கும். கொல்லத்தில இருந்தோ, இல்லே இந்தியக் கடல் எல்லையைத் தாண்டும் வரையோ நாம பெரிய கப்பலை யூஸ் பண்ண முடியாது. மீன்பிடிப் படகினைத் தான் யூஸ் பண்ணனும். கொழும்பிற்கு தென் மேற்காக நான் ஏலவே பேசி வைத்தது போன்று, உங்களின் பயணத்திற்குத் தேவையான எண்ணெய், உணவு, முதலியற்றோடு பெரிய கப்பல் உங்களை வந்து மீட் பண்ணும். நீங்க தான் ஜாகிரதையாக கப்பலை செலுத்தனும்.

இன்னொரு முக்கியமான மேட்டர், நவிக்கேசனில (NAVIGATOR - GPS) நான் போட்டுத் தந்திருக்கிற ரூட்டின் (ROUT) படி தான் நீங்க போகனும். இல்லேன்னா ப்ராப்ளம் ஆகிடும். வழமையாக கப்பல் போற திசைக்கு எதிர்த் திசையினூடாகத் தான் நீங்கள் போகனும். இன்னோர் முக்கியமான விடயம், கொழும்பில இருந்து 20 நாள் கடற் பயணத் தொலைவில இருக்கு ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவிற்கு கிட்டவா போறீங்க என்றதுமே நவிக்கேசனை உடைச்சு கடலில வீசிடுங்க" என வி(வெ)ளக்கம் கொடுத்தார் தருமன்.

தருமனின் அறிவுரைகளை கவனமாகச் செவிமடுத்தவாறு 56 பேரும் குறித்த நேரத்திற்குத் தயாராகி படகில் ஏறி உட்கார்ந்தார்கள். அமாவாசை இருட்டில் படகு அவர்களை ஏற்றியவாறு பயணிக்கத் தொடங்கியது. கொழும்பிற்குத் தென் மேற்காக வெயிட் பண்ணிப் பார்த்தார்கள். பெரிய கப்பல் நடமாட்டத்தை அவர்களால் காண முடியவில்லை. மீண்டும் தருமனுக்குத் தொடர்பெடுத்தார்கள். தருமன் தான் ஏலவே போட்டு வைத்திருந்த ஏமாற்றுத் திட்டத்திற்கு அடிப்படையாக் "பெரிய கப்பல் ஒன்றும் வராது. நீங்க இந்தப் படகில தான் ஆஸ்திரேலியா போகனும்" வேற வழி ஒன்றுமே இல்ல. நீங்க கொல்லத்தை விட்டுக் கிளம்பியதும் தான் நேவிக் காறாங்களுக்கு யாரோ தகவல் சொல்லியிருக்கனும், கொல்லத்தில ரவுண்ட் அடிச்சுக் கொண்டு நிற்கிறாங்க. ஆகவே நீங்க திரும்பி வரவும் முடியாது. இதை விட்டா வேறு சான்ஸ் எப்போ கிடைக்கும்னு தெரியலை. போற வழியைப் பாருங்க. அப்புறமா நீங்க போய் இறங்கியதும் உங்க வூட்டுக்காரர்களிடம் சொல்லி மிச்ச எமவுண்டையும் கொடுக்கச் சொல்லுங்க"  எனப் பேசி முடித்தார் தருமன்.
பட்டரி (பற்றரி) லோ ஆகியதால் போனும் கட் ஆகியது. கொழும்பிலிருந்து வந்த படகிலிருந்து உணவுப் பொருட்களையும், படகிற்குத் தேவையான எரிபொருளையும் பெற்றவாறு தம் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இன்னும் 20 நாட் கடற் பயணத்தின் பின் ஆஸ்திரேலியாவினை அடைந்து விடலாம் எனும் நம்பிக்கையோடு கடற் பயணத்தினைத் தொடர்ந்தார்கள் வேந்தன் தலமையிலான 56 பேரும். அவர்கள் பயணத்தைத் தொடங்கியது அக்டோபர் மாதம் என்பதால் பசுபிக் குளிர் நீரோட்டமும், இந்து மகா சமுத்திரத்தின் வெப்ப நீரோட்டமும் சங்கமாகும் இடத்தில் வழமைக்கு மாறாக அலைகளின் வேகம் சுழற் காற்றின் காரணமாக அதிகரித்துக் காணப்பட்டது. இந்தோனேசியா தாண்டி இன்னும் இருப்பது இரண்டு நாட்களே எனும் நோக்கோடு படகு ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவினை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 

அவ் வழியில் பெரும் அலை ஒன்று படகினைப் பலமாகத் தாக்கியதால் சிறிய துவாரம் ஒன்று உருவாகிக் கொள்ள கடற் தண்ணி மெது மெதுவாக உட்புகத் தொடங்கியது. மாறனின் சொல்லுக்குச் செவி மடுத்தவர்களாய் கப்பலினுள் உள்ள அனைவரும் தம்மால் இயன்றவரை தண்ணீரைக் கைகளினாலும், படகினுள் இருந்த ஏனைய உபகரணங்களின் உதவியுடனும் அள்ளி வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். சிறிய துவாரம் பெரிய துளையாகிக் கொள்ள வாழ்வா சாவா எனும் நிலையில் 56 பேரும் போராடிக் கொண்டிருந்தார்கள். பட்டரி இல்லாமல் செத்துப் போன தொலைபேசியும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கப்பல் போக்குவரத்து எதுவும் தெரியாது கரும் புகை போன்ற மழைத் தூறல்களால் இருண்டிருந்த கடற் பகுதியும் அவர்களுக்கு அச்சத்தை வரவழைத்துக் கொள்ளும் அதே கணத்தில் படகு மெது மெதுவாக நீரினுள் மூழ்கத் தொடங்கியது. 

நீந்தத் தெரிந்தவர்கள் கரையினை நோக்கி நீந்தத் தொடங்கினார்கள். ஏனையோர் நீரினுள் அமிழத் தொடங்கினார்கள். 10 மணி நேர நீண்ட தூர நீச்சலின் பின்னர் வேந்தனும் அவன் பின்னே சென்ற சில நண்பர்களும் ஒரு அரேபிய வணிக கப்பலைக் கண்டு சைகை செய்து கப்பலுக்கு அருகில் சென்றார்கள். அந்த வணிக கப்பலில் உள்ளோருக்குத் தமது அவல நிலையினை விளக்கிச் சொல்லப் பாசை தெரியாத காரணத்தினால் தண்ணீரில் நின்று தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். சைகை மூலம் புரிய வைத்தார்கள் இந்த உறவுகள். 

"அகதிகளுக்கு உதவக் கூடாது என்றும், அகதிகளை கடலில் கண்ணுற்றால் ஆஸ்திரேலிய அரசிற்கு அறிவிக்க வேண்டும்" எனும் நடை முறைக்கமைவாகவும் அந்த அரேபிய வணிகக் கப்பல் வேந்தனையும் அவன் பின்னே சென்ற சில நண்பர்களையும் கடலில் தத்தளிக்க விட்டுக் கடந்து சென்றது. 

நல்ல மனம் கொண்டவர்களாய் வணிக கப்பலில் உள்ள ஒரு அதிகாரி ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனுப்பினார். பல பேர் நீரில் மூழ்கிக் கொண்டிருக்க, சிலரோ உயிருக்குப் போராடி நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அவலச் சூழ் நிலையில் ஆஸ்திரேலிய கடற் படையும், ஹெலிகொப்டரும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டோரைச் சூழ்ந்து கொண்டது. குளிர் தண்ணீரில் நீண்ட நேரம் நீந்திய காரணத்தினால் வேந்தன் தன் உயிர் மூச்சைத் தண்ணீரோடு கலந்து உயிர் விட்டான். மாறனையும் இன்னும் சில நண்பர்களையும் மாத்திரம் ஆஸ்திரேலிய கடற் படையால் காப்பாற்ற முடிந்தது. 

"என் மகன் வெளி நாடு போய்ப் பல மாதங்களாகி விட்ட நிலையில் ஏன் இன்னும் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை" எனும் ஆதங்கம் மேலிட ஏஜென்சி தருமனைத் தன் தம்பியின் உதவியோடு தொடர்பு கொண்டாள் மரகதம்.

பதில், "இப்போது கப்பலில் வேந்தன் ஆஸ்திரேலியா நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான். இன்னும் சில நாளில் ஆஸ்திரேலியாவினை அடைந்ததும் உங்களிற்கு போன் பண்ணுவான்" எனும் பாணியில் மயிலிறகால் மென்மை தடவி மரகத்தைத் தேற்றுவது போலத் தருமனின் வாயினூடாக வந்து விழுந்தது. மகன் தன்னைத் தேடித் தொலை பேசி எடுப்பான்! இனிமேல் தம் குடும்பத்தின் கவலையெல்லாம் பறந்தோடி விடும் எனும் நினைப்பில் இலவு காத்த கிளியானாள் மரகதம்! ஆஸ்திரேலிய ஊடகங்கள் "51 SriLankan Asylum Seekers Killed in a boating horror of Christmas Island" (ஆஸ்திரேலியா நோக்கி வந்த 51 இலங்கை அகதிகள் படகு உடைந்ததனால் கொல்லப்பட்டார்கள்) எனச் செய்தி வெளியிட்டு அந் நாட்டு அரசினால் அகதிகளுக்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என விமர்சித்துக் கொண்டிருந்தன.

*2010ம் ஆண்டு அக்டோபர் மாதமளவில் ஆஸ்திரேலியா நோக்கிப் அகதிகளகப் பயணம் செய்கையில் உயிர் துறந்த இலங்கை உறவுகள் அனைவருக்கும் இப் பதிவினைச் சமர்ப்பிக்கிறேன்.

இப் பதிவிற்கான கருப் பொருளைத் தந்தவர் இச் சம்பவத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பி, தற்போது புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் என் பாடசாலை நண்பர் ஒருவர். அவருக்கு இந் நேரத்தில் என் உளமார்ந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் என் சார்பிலும், உங்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

47 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம், நிரூபன்!சிறி லங்கா அரசின் இரக்கமற்ற ஆட்சியால் இவ்வாறான பல மரணங்கள் நிகழ்ந்து விட்டன.இன்னுமின்னும் அடக்கு முறையும்,தான் என்ற ஆணவத்துடனுமே சிறி லங்கா அரசு நடந்து கொள்கிறது.முடிவு கிட்டும்,விரைவாகவே.

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்

மகேந்திரன் said...
Best Blogger Tips

மனதை கனக்கச் செய்யும் பதிவு..

Anonymous said...
Best Blogger Tips

பதிவுலக உலாவுதலையும் பதிவிடலையும் குறைக்க போறியளா?சகோ நிரு நீங்கள் ஒதுங்க விரும்பினாலும் இந்தப் பதிவுலகம் உங்களை எழுதாமல் இருக்க விடாது. எழுத்தாளர் என்பது எப்பொழுதுமே ஒற்றையடிப்பாதை.இங்கு வந்துவிட்டால் எழுதினால் தான் ஆத்ம திருப்தியுடன் அன்று இரவு நாம் தூங்கலாம்.எழுதாவிட்டால் அது நரகத்தில் உழல்வது போலவே இருக்கும்.உங்களைப்போலவே இம்முடிவை நானும் ஏற்கனவே எடுத்து அதை பின் கைவிட்ட அனுபவசாலி.

ஹேமா said...
Best Blogger Tips

ஆரம்ப காலங்களில் பனிகுவியலுக்குள்கூட புதையுண்டு இறந்திருக்கிறார்கள்.எங்கள் அவலங்களை வரிசைப்படுத்தி வருகிறீர்கள் !

Unknown said...
Best Blogger Tips

கண்களில் கசியும் கண்ணீரே
இதற்குக் காணிக்கை!

புலவர் சா இராமாநுசம்

SURYAJEEVA said...
Best Blogger Tips

கண்ணீர் அஞ்சலி

Anonymous said...
Best Blogger Tips

அக்கரை பச்சையை தேடி அகதிவாழ்வுக்கு புறப்படும் தமிழனின் அவல நிலையை பதிவு சொல்லுகிறது...

அம்பலத்தார் said...
Best Blogger Tips

புலம்பெயர் நாடுகளின் அகதிவாழ்வு தரும் பொய்யான பகட்டு வாழ்வு தந்த ஏக்கத்திற்கு அநியாயமாக இரையான அந்த அன்புறவுகளை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. அவர்களின் குடும்ப உறவினர்களிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Unknown said...
Best Blogger Tips

உருக்கமான கதை நிரூ உண்மை செய்தியை கதையாய் வடித்த பாங்கு அருமை

Mohamed Faaique said...
Best Blogger Tips

பகிர்விற்கு நன்றி...

rajamelaiyur said...
Best Blogger Tips

வருத்தமான விஷயம்

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

நிரூபனின் தலைப்பைப் பார்த்து உள்ளே குதித்திட்டேன்... ஆனா கடல்போல இருக்கு கொஞ்சம் இருங்க நீந்திக் கரைக்கு வந்து பின்னூட்டம் போடுறேன்... இது முன் ஊட்டம்:))))

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

ஐ..... உடனேயே வெளிவந்திட்டுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)). நிரூபன் நித்திரைபோல:))

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

நெஞ்சில் ரத்தம், கண்ணில் கண்ணீர் தாரைதாரையாய்....

Anonymous said...
Best Blogger Tips

விஷயம் படித்தபோது வருத்தப்பட்டேன்...இப்போது சற்றே கூடுதலாய் ...
இவர்கள் போல் சீன கன்டைனர்கள்...மெக்சிகன் வாகனங்கள்...ஆப்ரிக்க கப்பல்கள் குடித்த உயிர்கள் எத்தனையோ ஆயிரம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

வருத்தமான விஷயம்....

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

உண்மைதான் நிரூபன்... ஊரில இருக்கப் பயந்து வெளிநாட்டுக்கு வந்து, குடித்து வெறித்துக் கெட்டோர் ஒருபுறம்... வரும் வழியில் முடிந்துபோனோர் ஒருபுறம் இப்படி எத்தனையோ கதைகள் இலங்கைத் தமிழர் வாழ்வில்....

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

வருமானமாச்சும் (INCOME)//
கார்ட் (விசா)//
அப்ளே (APPLY)//
வோட் (BOAT) //
நவிக்கேசனில (NAVIGATOR - GPS)
ரூட்டின் (ROUT)///


நிரூபனின் தமிழாக்கம் படிச்சதில சிரிச்சு முடியுதில்ல.... அதிலயும் வோட்:))))) சூப்பர் தமிழாக்கம்.:)))).

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

புலம் பெயர்வதில் உள்ள துயரங்களை...துரோகங்களை படித்ததில் மனசு கலங்கிவிட்டது.
உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலி நண்பனுக்கு வாழ்த்துக்கள்.சகோ...

தனிமரம் said...
Best Blogger Tips

இந்த வெளிநாட்டு மோகத்தினால் சீரலிந்தவர்கள் கதைகள் ஆயிரம் இருக்கும் நண்பா! ஈழ்த்தவன் கொடுமைகள் வெளியுலகிற்கு பலது தெரியாது அதில் இந்த புலம்பெயர நாம் செய்யும் முயற்ச்சிகள் அவலங்கள் துயரங்கள் நிச்சயம் இந்தபதிவு பலரைச்  சென்றடையனும்!

தனிமரம் said...
Best Blogger Tips

பதிவைப் படிக்கும் போது நீங்கள் என்பதிவு ஒன்றுக்கு முன்னர் பின்னூட்டம் இட்டவரிகள் வந்தபோது மனதில் ஒரு வலி வந்து போகின்றது!

M.R said...
Best Blogger Tips

படித்ததும் வேதனை மிஞ்சியது நண்பரே

தனிமரம் said...
Best Blogger Tips

அகதியாக வெளிக்கிட்டு மாண்டுபோனவர்களுக்கு  அஞ்சலியில் நானும் சேர்கின்றேன்!

சித்தாரா மகேஷ். said...
Best Blogger Tips

மனதைக் கனக்க வைத்துவிட்டது தங்கள் பதிவு.வெளிநாட்டுக் கனவுடன் வாழ்வைத் தொலைத்த இளைஞர்கள் நம் நாட்டில் இன்னும் எத்தனையோ...

Unknown said...
Best Blogger Tips

இந்த அவலங்களுக்கு சமீபத்திய உதாரணம்,கனடிய கடலில் தடுத்து வைக்கப்பட்ட, அங்கு குடியேற ஈழதமிழ் மக்கள் சென்ற கப்பல் விவகாரம்.ஈழத்தமிழனின் இந்த அவலங்கள் என்று மாறுமோ?

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

அருமையான அனுபவ பதிவு

செங்கோவி said...
Best Blogger Tips

எவ்வளவு கொடுமையான விஷயம்..இப்படி வருகிறார்கள் என்றால் அங்கே எவ்வளவு பிரச்சினைகள் இருந்திருக்க வேண்டும்..மிகவும் வருத்தமாக உள்ளது நிரூபன்.

shanmugavel said...
Best Blogger Tips

உருக்கமான பகிர்வு சகோ!

ஆமினா said...
Best Blogger Tips

உயிருக்கு பயந்து வேறொரு இடம் புகுந்தால் அங்கேயும் உயிர் போகும் சோகம்

ரொம்ப கொடுமை

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் 
உண்மை சம்பவத்தை  கொண்டு வந்திருக்கீங்க.. இங்கும் நம்மவர்கள் ஹேமா சொல்வதுபோல் பனிக்குளிக்குள் மூழ்கிய சம்பவங்களும் கப்பளில் வந்து இறந்த சம்பவங்களும் அதிகம் இப்படி இறந்துபோனோர்க்கு எனது அஞ்சலிகள்...

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

நிரூபன்... நீங்க பதிவுலகத்தை விட்டு விலகப்போறதா கேள்விப்பட்டேன்... ரொம்ப வருத்தம்... உங்கள் எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்...

எனக்கு ப்ளாக் சம்பந்தமா சில உதவிகள் தேவைப்படுகின்றன... வார இறுதியில் நேரமிருந்தால் சாட்டுக்கு வரவும்... நன்றி...

Angel said...
Best Blogger Tips

மனதை கனக்க வைத்த சம்பவம் .
இந்த சம்பவத்தில் உயிரிழந்த சகோதர்களுக்கு அஞ்சலிகள்

இமா க்றிஸ் said...
Best Blogger Tips

அறிந்திருந்த ஓர் கோரச்சம்பவம்.. ஒருவர் வாழ்க்கை நிகழ்வாய்ப் பகிரப்பட்டுள்ள விதம் நன்று, பாராட்டுகள் நிரூபன்.
படித்து முடிகையில் மனதில் ஒரு கனம். ;( இறந்தவர்களுக்காகவும் அவர்களை இழந்தவர்களுக்காகவும் என் பிரார்த்தனைகள்.

மாய உலகம் said...
Best Blogger Tips

"அவனுக்கென்ன தூங்கி விட்டான். அகப்பட்டவன் நானல்லவா". எங்கிருந்தோ வந்த இப் பாடல் வரிகளைக் கேட்டுப் போதையிலும் தன் நிலை மறவாத ஆளாய் "உன்னை நான் சந்தித்தேன். நீ ஆயிரத்தில் ஒருவன்" //

பார்றா ஒருவன் வேதனையில பாடுனா... ஏஜண்டு குசும்பா பாடுறான்... சூப்பர் பாஸ்

மாய உலகம் said...
Best Blogger Tips

வேந்தனோ, "சே..எல்லாம் என்ரை தலை விதி! பேசாம டெய்சியைக் கூட்டிக் கொண்டு ஓடிப் போய்க் கலியாணம் கட்டியிருந்தாலாச்சும், அவளோட வசதிக்கு இப்பவே அவங்களோட கடையை என்ரை பேரில எழுதி வாங்கியிருக்கலாம்.//

வேதனையில வேந்தன் திருந்திட்டான்னு பாத்தா.. கடைய எழுதி வாங்கிருக்கலாமா... ஹய்யோ ஹய்யோ

மாய உலகம் said...
Best Blogger Tips

குளிர் தண்ணீரில் நீண்ட நேரம் நீந்திய காரணத்தினால் வேந்தன் தன் உயிர் மூச்சைத் தண்ணீரோடு கலந்து உயிர் விட்டான்.//

அது தண்ணீரல்ல அது அந்த டெய்சியின் கண்ணீர்... //ஆனால் அம்மா என்ன பாவம் செய்தாள் மகனை இழப்பதற்கு.. வேதனையான சம்பவம்.... கவலையை தருகிறது நண்பா

மாய உலகம் said...
Best Blogger Tips

*2010ம் ஆண்டு அக்டோபர் மாதமளவில் ஆஸ்திரேலியா நோக்கிப் அகதிகளகப் பயணம் செய்கையில் உயிர் துறந்த இலங்கை உறவுகள் அனைவருக்கும் இப் பதிவினைச் சமர்ப்பிக்கிறேன்.//

அவர்களுக்காக என் பிரார்த்தனைகள் நண்பா

மாய உலகம் said...
Best Blogger Tips

இப் பதிவிற்கான கருப் பொருளைத் தந்தவர் இச் சம்பவத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பி, தற்போது புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் என் பாடசாலை நண்பர் ஒருவர். அவருக்கு இந் நேரத்தில் என் உளமார்ந்த நன்றியினையும், வாழ்த்துக்களையும் என் சார்பிலும், உங்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.//

நன்றி நண்பரே!

ம.தி.சுதா said...
Best Blogger Tips

/////அவன் பின்னே சென்ற சில நண்பர்களும் ஒரு அரேபிய வணிக கப்பலைக் கண்டு சைகை செய்து கப்பலுக்கு அருகில் சென்றார்கள்.////

பதிவின் பின்புலத்தில் எத்தனை மனித வடு தேங்கிக் கிடக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது நிரு..

குறையொன்றுமில்லை. said...
Best Blogger Tips

வலி நிறைந்த , வலிய உணற்த்திய பதிவு

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

சாரி ஃபார் லேட் எண்ட்ரி..

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

ஒரு உண்மைச் சம்பவத்தைக் கதையாக்கி மனம் கனக்கச் செய்து விட்டீர்கள்.

Riyas said...
Best Blogger Tips

ஆழ்ந்த வருத்தங்கள்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
Best Blogger Tips

//நிரூபனின் தமிழாக்கம் படிச்சதில சிரிச்சு முடியுதில்ல.... அதிலயும் வோட்:))))) சூப்பர் தமிழாக்கம்.:)))).//

ஆதிரா!
நிச்சயம் அது எழுத்துப் பிழை என நினைக்கிறேன். இலங்கையில் " BOAT" இந்த ஆங்கிலச் சொல்லைப் " போட்" என்றெ உச்சரிப்பார்கள், இருபோதும் "வோட்" என எவருமே உச்சரிப்பதில்லை.
அதைத் திட்டவட்டமாக கூறமுடியும்?

இவ்விடத்தில் ஒரு சின்னக் கதை ஞாபகம் வருகிறது.
தமிழைப் பிழையாக எழுதக் கூடாதெனக் கங்கணங்கட்டும் ஒரு தமிழ்ப் பண்டிதரின் மகள், தான் விரும்பிய
ஒருவனுடன் கடிதமொன்றை எழுதிவைத்து விட்டு ஓடி விட்டாள்.கடிதத்தைப் பார்த்த
குடும்பத்தவர் எல்லோரும் குய்யோ முறையோ எனக் குழறியப்போது, தமிழ்ப் பண்டிதரும் குழறினாரும்
என்னெண்டு " படிச்சு படிச்சுச் சொல்லிக் கொடுத்தும், சனியன் எழுத்துப் பிழைகளேல்லோ" விட்டிருக்கு!

இன்று பதிவில் எழுத்துப் பிழையென்பது மிக மலிவாக உள்ளது. அடுத்தவர் சுட்டும் போதுதான் நமக்கும் தெரிகிறது;
அதனால் இதில் சிரிப்பதற்கு ஏதுமில்லை.
நிருபன் - இதைத் தெரிந்து செய்யவில்லை. அவர் பதிவுகளில் எழுத்துப்பிழைகள் மிக ஆச்சரியமாக விடயம்.

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

>"அகதிகளுக்கு உதவக் கூடாது என்றும், அகதிகளை கடலில் கண்ணுற்றால் ஆஸ்திரேலிய அரசிற்கு அறிவிக்க வேண்டும்" எனும் நடை முறைக்கமைவாகவும்

இப்படி ஒரு நடைமுறை இருப்பதாகத் தெரியவில்லை. மனச்சாட்சி இல்லாதோர் உதவி செய்யாமற் போகலாம். அது வேறு.

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

>(BOAT) என்பதைத் தமிழில் எழுதவேமுடியாது. போட், போற், எல்லாமே அண்ணளவுதான். வோற்/வோட் என்பது சிலர் பாவிப்பதைக்கேட்டுள்ளேன்.

BOAT என்று ஆங்கிலத்தில் எழுதியதைக்கூட அவுஸ்திரேலியர்கள் ஒருமாதிரியாகவும் இங்கிலாந்துக்காரர் இன்னொருமாதிரியாகவும் உச்சரிப்பார்கள். அமேரிக்கர்கள் இன்னொருமாதிரி. இதில் சரி எது பிழை எது? அந்தந்த இடத்தில் பாவிப்பது அந்தந்த இடத்தில் சரி.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails