Tuesday, June 21, 2011

முன்னாள் பெண் புலியின் கண்ணீர் கதை!

இடம் பெயர்ந்த பின்னர்
இடிந்து போன 
துயிலுமில்லமொன்றின்
அருகிருந்து கைவிடப்பட்ட
நிலையிலிருந்த
லுமாலா சைக்கிள் ஒன்றை(க்)
கண்டெடுத்தேன்
துயிலுமில்லமருகே
இருந்த மகிமையோ என்னவோ
இன்று வரை 
துருப்பிடிக்காதிருந்தது சைக்கிள்,
வேகமும், அதற்கே ஊரிய
வீரியமும் சிறிதளவு குன்றாது
உந்தி மிதிக்க
உருண்டோடி, இவ் உலகின்
மேர்சிடேஸ் காரின் மோகத்திற்கு
நிகரான சுகத்தை 
அது எனக்குத் தந்தது!

முதன்மைச் சாலையென 
முன்பொரு காலத்தில் அழைக்கப்பட்ட
கிளி நொச்சியின் ஏ ஒன்பது
நெடுஞ்சாலையூடாக 
சீட்டில் ஏறி உட்கார்ந்து 
சுகந்தமில்லாக் காற்றினைச் 
சுவாசத்திபடியும்,
வீதியோரம் - கைகளில் 
சுடு கலன்கள் தாங்கி நின்ற 
சட்டித் தொப்பிகளின்
மர்மங்கள் நிறைந்த 
மன்மதப் பார்வைக்கு
வேண்டா வெறுப்போடு 
சிறு புன்முறுவல் கொடுத்தும்
155ம் கட்டை நோக்கி என் பயணம் தொடர்ந்தது!

கிளி நொச்சி நகரம் நெருங்க
என் சைக்கிளிற்கும், 
என்னைப் போல 
ஏழரை தொற்றிக் கொண்டது,
புசுக் என்று சத்தம் கேட்க
விசுக் என்று 
நிலையெடுத்து
வீதியோரம் நின்ற ஆமி
அலேட்டாகி
துப்பாகிதனைச் சுடத் தயார்படுத்தி நிற்கையிலோ
என் சைக்கிள் டயர் காத்துப் போன
காட்சிதனைக் கண்டு 
வெட்கித்துப் போனான்,
இன்னும் அவனுக்குள் 
அது பற்றிய
இராக் கனவுப் பயம்
நீங்கவில்லை எனும் உண்மை
அவன் செய்கைகளில் தெரிந்தது,

சைக்கிள் ஒட்டும் கடை 
பூட்டியிருந்த காரணத்தால்
போரின் வடுக்களால்
வேர்கள் தொலைத்து
ஊரில் எஞ்சியுள்ள 
தலையில்லா கட்டடங்களை
தரிசித்தபடி நடந்து கொண்டிருந்தேன்,

போகும் வழியில் 
என் பேச்சுக்குத் துணை போல
ஒருத்தி அகப்பட்டாள்,
அவளா இவள், என மனமோ
நம்ப மறுத்தது,

முன்னோர் நாள்
இடுப்பில் பட்டி கட்டி
தாம்- இவர்கள் 
என்னும் இறுமாப்போடு
கம்பீர நடை நடந்து
கட்டளைகள் வழங்கிய
அவளா இவள் என 
மனம் நம்ப மறுத்தது,

அவள் கையில் ஒரு குழந்தை;
மூக்குச் சளி சிந்தி
மேற்சட்டை முழுதும் 
நனைத்த சளி 
வீணி போல அதன் சட்டையிலிருந்து
வழிந்து கொண்டிருந்தது,

கிழிந்த பாவாடை, 
உள்ளே ஏதும் போடவில்லை 
என்பதற்கு அறிகுறியாய் 
மேற் சட்டையின் அசைவினூடு
உணர்ந்து கொண்ட பெருமிதத்தில்
ஆண்களுக்கே உரிய 
வெறித்தனத்தோடு
குறிப்பெடுத்துக் கொண்டது என் மனம்

ஆனாலும் அந் நேரம் 
அவளை 
இந் நிலையில் 
எதிர்பார்க்கவில்லை,
குசலம் விசாரித்தேன்,
தன் நிலையை உணர்த்தினாள், 

இறுதிப் போரின் 
இருண்ட கணங்களிலிருந்து
தப்புவதற்காய்
சாட்சிகளோ, 
எழுத்து வடிவமோ ஏதுமற்ற 
கலியாணம்
ஆனாலும்
உரிமையுள்ள ஒருவனை
மணந்து கொண்டதாய்
கண்ணீர் கொப்பளிக்கச் சொன்னாள்

ஊர் விழுங்கும் பேய்களிடம்
உள்ளதெல்லாம் 
போய் விட்ட பின்னர்
சரணடையும் வேளையில்
கணவன் கண் முன்னே
சுடப்பட்டதாக 
கவலையுற்றாள்,

தடுப்பு முகாம் தாண்டி
தானோர் நிறை மாத(க்)
கர்ப்பிணி எனும் உண்மையினை
உணராதோர்
உதாசீனம் செய்ததாய் வருந்தினாள்!

மீண்டும் ஊர் வந்து
குடி புகுந்ததில் 
பெருமிதம் காண்பதாய்
உணர்ச்சிச் செருக்குடன்
பதிலளித்தாள்,
ஆனாலும்
இன்றோ தனக்கு(த்)
தொழிலில்லை,
பிள்ளைக்கு உடையில்லை
தான் வாழ வழியில்லை

தன்னைப் போல் 
பல முன்னாள் 
போராளிகளும்
வாழ்க்கையின் 
விடியலுக்காய்
தத்தளிப்பதாக கவலையுற்றாள்,

நிமிர்ந்து நடக்கையில்
நிரை நிரையாக
அள்ளி அனுப்பியோர் எல்லாம்- தலை
குனிந்து போனதும்
தமை மறந்து விட்டனர் என
ஆதங்கப்பட்டாள்,

எங்கிருந்தாவது ஒரு கை
எம்மையெல்லாம் அணைத்து
ஏற்றம் பெறச் செய்யாதா 
என ஏக்கம் தொனிக்க
விம்மினாள்,

என்னால் என்ன செய்ய முடியும்?
நானும் என் கதையை உரைத்து
ஆறுதலைச் சொல்லி விட்டு
மெதுவாய் விலகி நடந்தேன் - காரணம்
தமிழன் நான்...
நானும் ஓர் சுயநலவாதி தானே! 

பிற் குறிப்பு: இது ஓர் வசன கவிதை

டிஸ்கி:  
*துயிலுமில்லம்: இறந்து போன வீரர்களின் கல்லறைகள் உள்ள இடம் 
*மேர்சிடேஸ் கார்: Mercedes Car
*கர்ப்பிணி: நிறை மாத பிள்ளைத் தாச்சி. 

128 Comments:

தனிமரம் said...
Best Blogger Tips

Palkoopi soolunga bass itho varan.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

முகத்தில் அறைகின்ற யதார்த்தம்....!

Angel said...
Best Blogger Tips

//எங்கிருந்தாவது ஒரு கை
எம்மையெல்லாம் அணைத்து
ஏற்றம் பெறச் செய்யாதா
என ஏக்கம் தொனிக்க
விம்மினாள்,//
இந்த வரிகளை படித்த போது மனசு வலிச்சது .

Unknown said...
Best Blogger Tips

முன்னாள் போராளிகள் எதிர்காலம்??????? ஆனால் விரைவில் பதில் கிடைக்கும் என நம்புவோமாக

தனிமரம் said...
Best Blogger Tips

எத்தனை துயரங்கள் தாங்க முடியும் ஒவ்வொரு வரிகளும் மனதை குடைகிறது துருப்பிடிக்காது இதயத்தில் பதிந்த நினைவுகள்!

தனிமரம் said...
Best Blogger Tips

கையேந்தும் நிலைக்கு தமிழன் போனதன் வலிகள் புரியுமா? சர்வதேச சமாதான விரும்பிகள் என்று குடி கெடுத்தவர்களுக்கு?!

DARLING EXPORT said...
Best Blogger Tips

ஐரோப்பிய தமிழரால் கைவிடப்பட்ட தாயக உறவுகள்!http://www.youtube.com/watch?v=xlnWjuw8cC0&feature=player_embedded

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதிர்கால தமிழ் இனம் சுதந்திரமாக எதிரியிடம் மண்டியிடாமலும் வாழவேண்டும் என்பதற்காக ஆயுதம் ஏந்திய தமிழ் பெண்கள் இன்று அனாதைகளாக கைவிடப்பட்டுள்ளனர்.

இவர்களின் பெயரில் ஐரோப்பிய, அவுஸ்ரேலிய, அமெரிக்க மற்றும் கனடா போன்ற சுமார் 40 இற்கு மேற்பட்ட நாடுகளில் சேகரிக்கப்படும் பணம் எவரை சென்றடைகிறதோ அது இறைவனுக்கும் தெரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது.

DARLING EXPORT said...
Best Blogger Tips

மக்களுக்காக போராடிய போராளிகளும் வறுமையில் தற்கொலை செய்யும் நிலையில்! யாழில் தொடரும் தற்கொலைகள்http://www.youtube.com/watch?v=QQQSUHCEGDQ&feature=player_embedded
வறுமையாலும் மன அழுத்தத்தாலும் இன்று யாழ். மாவட்டத்தில் பெண்கள் தற்கொலை செய்கின்ற நிலைமை அதிகரித்தே வருகின்றன.

இவ்வாறானதொரு சம்பவம் நேற்று முன்தினமும் யாழ் புன்னாலைக்கட்டுவான் ஈவினையில் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் முன்னாள் பெண் போராளியான லாவண்யா என்ற 21 வயதுடைய யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளாள்.

முன்னால் போராளிகளை கண்டுகொள்ளாத தமிழ் மாகாண தமிழ் சமுகம்

தனிமரம் said...
Best Blogger Tips

இன்னும் எத்தனை தோழிகள் எம்மை காவல்காத்தவர்கள் கவலையுடன் வாழ்கிறார்கள் என்ன கைமாறு செய்யப் போறம் என்ற குற்ற உனர்ச்சி எனக்கு!

தனிமரம் said...
Best Blogger Tips

நீங்கள் நடந்த அந்த வீதியோரம் நானும் ஒருகாலத்தில் விளையாடி இனிய நினைவுகள் அங்கே ஒரு கோபுரம்(வயிலேஸ் ) இருந்தது . ம்ம் எத்தனை இழ்ப்புக்கள், இப்போது தேவை மனோபலத்தை உருவாக்கும் திட்டங்கள் என்பது என் சிந்தனை எப்படி மீளக்கட்டி எழுப்பலாம் எதிர்கால நம்பிக்கையை வாழ்க்கைப் பிடிப்பை?

தனிமரம் said...
Best Blogger Tips

வாரியனைத்த வன்னி இன்று ஒரு மூடிய பல துயரங்களை தன்னகத்தே கொண்டுள்ள தகவல்களை உங்கள் கவிதை பாடிச் செல்கிறது வலிகளுடன் !நிச்சயம் ஒரு விடிவு வரும் என்று நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன் கடமைக்கு மணியடிக்குது!

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ் ....

Anonymous said...
Best Blogger Tips

///இடம் பெயர்ந்த பின்னர்
இடிந்து போன
துயிலுமில்லமொன்றின்
அருகிருந்து கைவிடப்பட்ட
நிலையிலிருந்த
லுமாலா சைக்கிள் ஒன்றை(க்)
கண்டெடுத்தேன்
துயிலுமில்லமருகே
இருந்த மகிமையோ என்னவோ
இன்று வரை
துருப்பிடிக்காதிருந்தது சைக்கிள்,/// இந்த ஒரு பத்திக்குள்ளே எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது ..(((

Anonymous said...
Best Blogger Tips

///சுகந்தமில்லாக் காற்றினைச்
சுவாசத்திபடியும்/// கந்தகம் கலந்த காற்று (((

Anonymous said...
Best Blogger Tips

///இன்னும் அவனுக்குள்
அது பற்றிய
இராக் கனவுப் பயம்
நீங்கவில்லை எனும் உண்மை
அவன் செய்கைகளில் தெரிந்தது,

//// புள்ள குட்டி காரன் போல, பொழைப்புக்காக வேற்றான் பூமியில் வந்து நிக்கிறான் ((

Anonymous said...
Best Blogger Tips

////ஊரில் எஞ்சியுள்ள
தலையில்லா கட்டடங்களை
தரிசித்தபடி நடந்து கொண்டிருந்தேன்,/// ஒரு காலத்தில் எல்லாம் தலை நிமிரும் பாஸ் .... கந்தகம் அற்ற காற்றை நம் சந்ததி சுவாசிக்கும்....

Anonymous said...
Best Blogger Tips

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. எம் முன்னே பெரிய கடமை ஒன்று உள்ளதாக மட்டும் புரிகிறது...

Anonymous said...
Best Blogger Tips

///என்னால் என்ன செய்ய முடியும்?
நானும் என் கதையை உரைத்து
ஆறுதலைச் சொல்லி விட்டு
மெதுவாய் விலகி நடந்தேன் - காரணம்
தமிழன் நான்...
நானும் ஓர் சுயநலவாதி தானே! // (((

Yoga.s.FR said...
Best Blogger Tips

இப்படியான அவல வாழ்வுக்குள் தள்ளி விட்டுத் தான்,புனர் வாழ்வளிக்கிறோம்,மீள்குடியேற்றுகிறோம் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள்!இந்த அவலம் மீழளிக்கப்படும்,ஆண்டவனால்!

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

சகோ!வீதியோரம் நின்ற ஆமி மட்டுமே உதவிக்கரம் நீட்ட இயலாததின் காரணம்.அடிப்படை உதவிகளை குறுகிய காலத்திலே செய்து விட முடியும்.ஆமியை அகற்றுவது யார்?

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

இலங்கை அரசு சுயமாக பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.இல்லாவிட்டால் உலக அமைப்புக்களை எந்த வித தடையுமில்லாமல் அனுமதிக்க வேண்டும்.

செங்கோவி said...
Best Blogger Tips

மண் வெட்டிக் கூலி தின்னலாச்சே, எங்கள் வாள் வலியும் தோள் வலியும் போச்சே - எனும் பாரதியின் பாடலைத் தான் வருத்ததுடன் பாட வேண்டும்.

sarujan said...
Best Blogger Tips

உண்மை ....வலி

சுதா SJ said...
Best Blogger Tips

பாஸ் உங்கள் கவிதை மீண்டும் என்னை விரல் பிடித்து வன்னிக்கு அழைத்து சென்று விட்டது,
படிக்கும் போதே மனசு கணக்குறது , மறக்க நினைத்த என் ஒரு உறவின் நினைவு ஒன்று கண்களில் நிழலாடுகிறது,
விடுங்கள் பாஸ் அவர்களை மறக்க நினைக்குறேன் ...

ஹேமா said...
Best Blogger Tips

எங்கள் தேசத்து இன்றைய அவலம்.என்ன சேய்யலாம் நிரூ.உலகநாடுகளின் எந்த சத்தத்தையுமே சட்டை செய்யாமல் எங்கள் சிவப்புச் சட்டைக்காரர்கள்.
இன்றுகூட பீரிஸ் என்ன சொல்லியிருக்கிறார் கேட்டீர்களா ?

“உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்து வருகின்றன. இலங்கை விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றே சீன மற்றும் ரஷ்ய நாட்டுத் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் இறைமைக்கு எதிரான ஆயுத போராட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் இராஜதந்திர ரீதியான போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. அதே நேரம் பயங்கரவாத இல்லாதொழிப்பு மூலம் நாடு அடையக் கூடிய நன்மைகளை தெளிவுபடுத்தி உலக நாடுகளை அரசாங்கத்தின் பக்கம் திருப்பும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.”

Unknown said...
Best Blogger Tips

மாப்ள ஆறா ரணங்களை எழுத்துக்களாய் விதைசிருக்கீங்க!

Unknown said...
Best Blogger Tips

நான் தமிழன் சுயநலவாதி தானே ........வசன வடிவில் கோபம் துயரம் இரண்டையும் பதிவு செய்து பகிர்ந்த உங்களுக்கு salute ...நன்றி சகோ

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

என்னால் என்ன செய்ய முடியும்?
நானும் என் கதையை உரைத்து
ஆறுதலைச் சொல்லி விட்டு
மெதுவாய் விலகி நடந்தேன்>>>>

சகோ.... நம் வலிகளை நாம் உலகுக்கு உரைத்தாலும் கேட்பதற்கு ஆளில்லையே... அராஜகம் ஒழியும் வரை நாம் உரைத்து சொன்னாலும் நீதி கிடைக்கப்போவது இல்லை.

Unknown said...
Best Blogger Tips

tamil manam 11-12
indli 11-12
tamil 10 9-10

Muruganandan M.K. said...
Best Blogger Tips

நடந்த, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற அவலங்களிருந்து மீள விடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

கூடல் பாலா said...
Best Blogger Tips

படைத்தவன் விரைவில் மனமிறங்க வேண்டும் ......

DARLING EXPORT said...
Best Blogger Tips

வன்னி மக்களை கண்டுகொலாத யாழ் தமிழ் சமுகம் கோவில் திருவிழா எண்டு கொண்டாடிய வீடியோ பதிவு
இணுவில் கந்தசுவாமி கோயில் திருவிழா
http://www.youtube.com/watch?v=Z3TzG90atDQ&feature=player_embedded
யாழ் வற்றாப்பளை அம்மன் பொங்கல்
http://www.youtube.com/watch?v=LVB68rY_Y0k&feature=channel_video_title
மஞ்சவனப்பதி ஆலய மஹாகும்பாபிஷேகம் (வீடியோ இணைப்பு)
http://www.youtube.com/watch?v=sa4VZ2Xbobk&feature=player_embedded

ஈழத்து சிதம்பரம் நடைபெற்ற மஹாயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்
http://www.youtube.com/watch?v=sVuNbJLhX3E&feature=player_embedded
ஈவினை வைரவர் ஆலய வேள்வி (படங்கள் இணைப்பு) ஆடுகளை பாலி கொடுத்து வேள்வி நடத்திய யாழ் தமிழர்கள்
http://www.youtube.com/watch?v=aT0r0ERItn8&feature=player_எம்பெட்டெட்
யாழ் இந்துக்கல்லூரி உயர்தர வகுப்ப மாணவர்களின் ஒன்று கூடல் நாட்டியம் (வீடியோ இணைப்பு )
http://www.youtube.com/watch?v=r9fl3CZ_cwQ&feature=player_embedded

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>
எங்கிருந்தாவது ஒரு கை
எம்மையெல்லாம் அணைத்து
ஏற்றம் பெறச் செய்யாதா
என ஏக்கம் தொனிக்க
விம்மினாள்,

ஆதங்கமான வரிகள்

maruthamooran said...
Best Blogger Tips

எல்லாம் மாறவேண்டும் நிரூபன்.

ஒரு காலத்தில் ஹீரோக்களாக கொண்டாடப்பட்டவர்கள் இன்று அதே சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற வலி மிகவும் கொடியது. யதார்த்தம் கன்னத்தில் சப்பென்று அறைகின்றது கவி வரிகளில்.

ஆகுலன் said...
Best Blogger Tips

அண்ணா இது கற்பனையா.. அல்லது உண்மை சம்பவமா.....

Mathuran said...
Best Blogger Tips

அருமையான, முன்னாள் போராளிகளின் வலிகளை வெளிப்படுத்தும் கவிதை

இறுதி வரிகளில் தமிழனின் பெருமைகளை????!!!! விளக்கிவிட்டீர்கள்

Mathuran said...
Best Blogger Tips

அருமையான, முன்னாள் போராளிகளின் வலிகளை வெளிப்படுத்தும் கவிதை

இறுதி வரிகளில் தமிழனின் பெருமைகளை????!!!! விளக்கிவிட்டீர்கள்

Riyas said...
Best Blogger Tips

ம்ம்ம்ம்ம் வரிகள் முழுதும் வலிகள்

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

படிக்கும் போதே மனதை கணக்கா வைக்கும் வரிகள்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

இவ் உலகின்
மேர்சிடேஸ் காரின் மோகத்திற்கு
நிகரான சுகத்தை
அது எனக்குத் தந்தது!// உங்களின் இயல்பை சொல்லும் வரிகள்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

155ம் கட்டை நோக்கி என் பயணம் தொடர்ந்தது!// இவ்வரிக்கு விளக்கம்?

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

கிழிந்த பாவாடை,
உள்ளே ஏதும் போடவில்லை
என்பதற்கு அறிகுறியாய்
மேற் சட்டையின் அசைவினூடு
உணர்ந்து கொண்ட பெருமிதத்தில்
ஆண்களுக்கே உரிய
வெறித்தனத்தோடு
குறிப்பெடுத்துக் கொண்டது என் மனம்/// இவ்வரிகளில் உங்கள் நேர்மை தெரிகிறது..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

ஊர் விழுங்கும் பேய்களிடம்
உள்ளதெல்லாம்
போய் விட்ட பின்னர்
சரணடையும் வேளையில்
கணவன் கண் முன்னே
சுடப்பட்டதாக
கவலையுற்றாள்,/// வலி மிகுந்த வரிகள்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

தன்னைப் போல்
பல முன்னாள்
போராளிகளும்
வாழ்க்கையின்
விடியலுக்காய்
தத்தளிப்பதாக கவலையுற்றாள்,// அங்குள்ள நிலையினை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

என்னால் என்ன செய்ய முடியும்?
நானும் என் கதையை உரைத்து
ஆறுதலைச் சொல்லி விட்டு
மெதுவாய் விலகி நடந்தேன் - காரணம்
தமிழன் நான்...
நானும் ஓர் சுயநலவாதி தானே!

/// இயலாமை...

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மொத்தத்தில் கவிதை படித்து முடித்தவுடன் மனம் கனக்கிறது சகோ..

காமராஜ் said...
Best Blogger Tips

முழுவதும் படித்து முடிக்க சற்று துணிவு வேண்டும்.வலி வலி நிஜமான வலி.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்! இன்று வசன கவிதையா? சரி, கவிதை - அதுவும் வசன கவிதை! பார்க்கிறேன்!

vidivelli said...
Best Blogger Tips

நண்பா அருமையான வலிகள் நிறைந்த வரிகள்
அவர்கள் கறைபடிந்த மனிதர்கள் அல்ல,,,, புனிதமான தெய்வப்பிறவிகள்... அதனால் இன்றும் துருப்பிடிக்காமல் இருக்கிறது

!!எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவைப்பற்றி தொடர் ஓடிக்கொண்டு இருக்கிறது நீங்களும் ஓடிவாங்கோ

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரூபனுக்கும், பதிவின் தலைப்புக்களுக்கும் ஆகாது போல! இந்தத் தலைப்பிலும் உறுத்தலாக இருக்கும் இரண்டு விடயங்களை சுட்டிக்காட்டுதல் எனது கடமை!

” முன்னாள் ஈழப் பெண் புலியின் கண்ணீர்(க்) கதை!”

இதில் ஈழம் என்ற சொல் தேவையற்றது! பெண்புலிகள் என்றாலே, அவர்கள் ஈழவிடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிதானே! உலகில் வேறேதும் நாடுகளில், வேறேதும் அமைப்புகளில் பெண்புலிகள் இருக்கிறார்களா என்ன?

சிலர் எழுதுகிறார்கள் ‘ இந்தியாவில் இருக்கும் தாஜ்மஹாலில்......’ என்று! அப்படியாயின், தாஜ்மஹால் உலகில் வேறெங்கேனும் உண்டோ?

இந்தியாவில்தான் தாஜ்மஹால் உண்டு என்று குறித்துக் காட்டுவது, தாஜ்மஹாலுக்குரிய பெருமையினக் குறைக்கும் வாக்கியமாகும்!

உலக அதிசயங்களில் ஒன்றாகிய தாஜ்மஹால் எங்கிருக்கிறது என்று தெரியாமல் யாரேனும் இருப்பாராகில், அது அவரின் பிழையே தவிர, தாஜ்மஹாலினதோ, இந்தியாவினதோ பிழையன்று!

இதுபோலவே, பெண்புலிகள் என்போர் நிச்சயமாக ஈழத்துப் பெண்புலிகள்தான்!

பெண்புலிகள் என்று அழைப்பதே சிறந்தது!

மேலும் இத்தலைப்பு, இன்னுமொரு மயக்கத்தையும் தருகிறது! அதாவது முன்னாள் ஈழப் பெண்புலியின் கண்ணீர்க்கதை எனும் போது, இப்போது ஈழத்தில் இருக்கும் முன்னாள் பெண்புலிகள் கண்ணீரில் வாடுவதாகவும், ஈழத்துக்கு வெளியே இருக்கும் பெண் புலிகள், அவ்வாறு இல்லை என்றும் குறிப்பதற்கான பெருவாரியான வாய்ப்புக்கள் உள்ளன!

உண்மையில் ஈழத்துக்கு வெளியே இருக்கும் தமிழ்மக்கள், முன்னாள் போராளிகள் என அனைவருமே, நடந்து முடிந்த அனைத்தையும் எண்ணி இப்போது கண்ணீரில்தான் வாடுகிறார்கள்!

ஆக ‘ முன்னாள் பெண்புலியின்..... என்று வருதலே சாலவும் நன்று என்பது எனது முடிபு! ( முடிவு அல்ல)

ஏற்பதும்,மறுப்பதும் உங்கள் கையில்....!!!

மேலும், ‘ கண்ணீர்(க்)கதை ‘ என்று வரும் இடத்தில் வரும் க் ஐ அடைப்புக்குறிகளுக்குள் போட்டதன் விளக்கம் யாதோ?

கண்ணீர், கதை இரண்டு சொற்களுமே புணரும் போது, இலக்கணப்படி, வருமொழி முதலில் வரும் மெய் மிகுந்து ‘ கண்ணீர்க்கதை ‘ என்றே வரும்! இதில், ஐயத்துக்கு ஏது இடம்?

ஆக தலைப்பில் வரும் அடைப்புக் குறிகள் அவசியமற்றவை!

சிலர் கண்ணீர் + கதை இரண்டையும் புணர்த்தி கண்ணீற்கதை என்கிறார்கள்! அந்தக் கொடுமைக்கு, நீங்கள் போட்டது எவ்வளவோ மேல் என்றாலும், வசன கவிதை என்று வரும் போது, இலக்கணமும் சரிவர இயங்குதல் முறையன்றோ!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இடம் பெயர்ந்த பின்னர்
இடிந்து போன
துயிலுமில்லமொன்றின்
அருகிருந்து கைவிடப்பட்ட
நிலையிலிருந்த
லுமாலா சைக்கிள் ஒன்றை(க்)
கண்டெடுத்தேன்

பல பத்து கருத்துக்களை உள்ளடக்கியதாக கவிதை தொடங்குகிறது! மக்கள் இடம்பெயர முன்பு , மாவீரர் துயிலும் இல்லங்கள், உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, நல்ல நிலையில் இருந்ததையும், மக்களின் இடப் பெயர்வோடு, அவையும் கவனிப்பாரற்று, சிதைந்து போயின என்பதை வலியோடு உணர்த்துகிறீர்கள்!

மேலும் சைக்கிள் என்ர ஆங்கிலச் சொல் இக்கவிதைக்கு தேவையற்றது! ஈருறுளி, மிதிவண்டி போன்ற பதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம்! சிலர் சைக்கிளுக்கு தமிழில் துவிச்சக்கரவண்டி என்று பெயர் வைக்கிறார்கள்.

துவி, சக்கர இரண்டுமே வேற்றுமொழிச் சொற்களாகும்! ஆக, நீங்கள் ஈருறுளி, மிதிவண்டி போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம்!

நல்ல தமிழ்ச்சொற்களைக் கையாழும் போது, அதனை யாரேனும் எள்ளி நகைத்தால்,அவர் தமிழராக அல்லது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருப்பதில் அர்த்தமில்லை!

’ லுமாலச் சைக்கிள் ‘ என்பது மக்கள் அன்றாடம் பேசும் பேச்சு மொழி. எனவே கவிதை இயல்பாகவும், சுவையாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக பயன்படுத்தினேன் என்று நீங்கள் ஒரு விளக்கம் சொல்லம் முடியும்!

அப்படிச் சொன்னால், பின்னர் நான் மிக நீண்ட விளக்கமளித்து இன்னொரு பின்னூட்டம் போட வேண்டியிருக்கும் !

நிரூபன் வேண்டுமானால்,

‘ தமிழ் உயிர்வாழ்வது - இயல்புத் தமிழிலா? இலக்கணத்தமிழிலா? ‘

எனும் தலைப்பில் ஒரு பதிவு போடுங்கள்! ஆழமாக அலசி ஆராய்வோம்! தமிழில் முட்டி மோதுவோம்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

துயிலுமில்லமருகே
இருந்த மகிமையோ என்னவோ
இன்று வரை
துருப்பிடிக்காதிருந்தது சைக்கிள்,²

நிரூபன் - இந்த அழகிய குறியீட்டைக் கண்டுபிடிப்பதற்கு, எத்தனை முறை உக்காந்து யோசித்தீர்கள? அல்லது தெரியாமல் பயன்படுத்தினீர்களா?

மாவீரர்கள் கல்லறை அருகினில் நின்ற, மிதிவண்டியே துருப்பிடிக்கவில்லை எனும் போது, மாவீரர்களின் நிழலில் வாழும் மக்களை, அவர்களின் தூய ஆத்மா எங்ஙனம் காக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வியப்பாக இருக்கிறது!

உண்மையில் அவர்கள் யாரையும், எப்போதும் துருப்பிடிக்கவிடவில்லைத்தான்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வேகமும், அதற்கே ஊரிய
வீரியமும் சிறிதளவு குன்றாது
உந்தி மிதிக்க
உருண்டோடி, இவ் உலகின்
மேர்சிடேஸ் காரின் மோகத்திற்கு
நிகரான சுகத்தை
அது எனக்குத் தந்தது!////

இதனை பக்கம் பக்கமாக விபரிக்கலாம்! சுருக்கமாக கூறுகிறேன்!

’ கொள்ளை அழகு’

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

முதன்மைச் சாலையென
முன்பொரு காலத்தில் அழைக்கப்பட்ட....

இல்லை! அது இப்போதும் முதன்மைச் சாலைதான்! அப்போது அது முதன்மை பெற்றதுக்கும், இப்போது அது முதன்மை பெறுவதுக்கும் காரணங்கள் வேறுபட்டாலும், ஏ 9 சாலை என்றைக்குமே முதன்மைச் சாலைதான்! - இல்லாவிட்டால் அவ்வளவு படையினரைக் குவித்து பாதுகாப்பார்களா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சுகந்தமில்லாக் காற்றினைச்
சுவாசத்திபடியும்.......


புரிகிறது! காற்றுக்கு வாசம் கொடுத்த மலர்களைத் தானே கருக்கித் தொலைத்துவிட்டார்கள்! இனியெப்படிக் காற்றிலே சுகந்தம் வரும்?

( குறிப்பு - சுகந்தம் என்பது தமிழ் சொல் அல்ல! நிரூபன் )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சுடு கலன்கள் தாங்கி நின்ற
சட்டித் தொப்பிகளின்
மர்மங்கள் நிறைந்த
மன்மதப் பார்வைக்கு
வேண்டா வெறுப்போடு
சிறு புன்முறுவல் கொடுத்தும்
155ம் கட்டை நோக்கி என் பயணம் தொடர்ந்தது!....

உங்களை ஒரு ஆணாக வெளிப்படுத்தி, இக்கவிதையினை சொல்லியிருப்பதால், இராணுவத்தினர் உங்களைப் பார்க்கும் பார்வயை - மர்மங்கள் நிறைந்த
மன்மதப் பார்வை.... என்று சொல்லியிருப்பது, பொருத்தமற்றதாக தோன்றுகிறது!

வேண்டுமானால் , கோரப்பார்வை என்றோ, கொலைப் பார்வை என்றோ அல்லது வேறொரு பார்வையின் பெயரையோ குறிப்பிடுதல் நன்று!

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

சைக்கிள் ஒட்டும் கடை
பூட்டியிருந்த காரணத்தால்
போரின் வடுக்களால்
வேர்கள் தொலைத்து
ஊரில் எஞ்சியுள்ள
தலையில்லா கட்டடங்களை
தரிசித்தபடி நடந்து கொண்டிருந்தேன்,

ரணங்களை கவிதையாய் பகிர்ந்த விதம் அருமை சகோ
பல இடங்களில் மனம் கனமானது

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

என் சைக்கிள் டயர் காத்துப் போன
காட்சிதனைக் கண்டு
வெட்கித்துப் போனான்,////

நகைச்சுவை கலந்த உண்மை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

முன்னோர் நாள்
இடுப்பில் பட்டி கட்டி
தாம்- இவர்கள்
என்னும் இறுமாப்போடு....


இவ்வரிகளில் யாருக்கேனும் குழப்பம் வருமா தெரியவில்லை! காரணம் பெண்புலிகள் வன்னியிலே, இருமாப்புடனா திரிந்தார்கள் என்று!

ஆனால் நிரூபன் இவ்விடத்தில், இறுமாப்புடன் என்ற சொல்லை பயன்படுத்தியமை முற்றிலும் சரியே!

போர்வீரர்களின், இறுமாப்பு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான்! இவ்விடத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடல் வரிகள் ஒன்றை நினைவுபடுத்துகிறேன்!

‘ பிரபாகரனின் காலத்தில் வாழும்
ஆணவத்தால் முடி சூடுகிறோம் ‘

கவிஞர் சொன்ன ஆணவமும், நிரூபன் சொன்ன இறுமாப்பும் ஒன்றே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

கிழிந்த பாவாடை,
உள்ளே ஏதும் போடவில்லை
என்பதற்கு அறிகுறியாய்
மேற் சட்டையின் அசைவினூடு
உணர்ந்து கொண்ட பெருமிதத்தில்
ஆண்களுக்கே உரிய
வெறித்தனத்தோடு
குறிப்பெடுத்துக் கொண்டது என் மனம்//////

அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்! நலிந்து நொந்த ஒருத்திமீது கூட, தமிழனுக்கு காமம் வருவது, எமது கலாச்சாரம் என்ற நாறிய குட்டை எமக்குத்தந்த பரிசாகும்!

இந்த இடத்தில் நான் மீண்டும் எமது கலாச்சாரம் என்ற கன்றாவியையும், அதனைக் காலம் காலமாக காவித்திரிய வேண்டும் என்று சட்டம் போடும் கலாச்சாரக் காவலர்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்!

எல்லாத்தையும் பொத்திப் பொத்தி வையுங்கோ! தமிழனுக்கு ஒருபோதுமே இயற்கையாக வாழத்தெரியாது! என்னால் ஆயிரம் பக்கங்களில் விளக்கமளிக்க முடியும்!

சசிகுமார் said...
Best Blogger Tips

கூப்பிட்டு கன்னத்துல அறைகிற மாதிரி இருக்கு உன்னுடைய கடை வரிகள்... கொடுக்க மனமிருந்தாலும் எங்கே கொடுப்பது யாரிடம் கொடுப்பது கொடுத்தால் சரியாக போய் சேருமா என்ற சந்தேகத்தாலே நிறைய பேர் ஒதுங்கி கொண்டுள்ளனர். கண்டதை எழுதி காலத்தை ஓட்டும் எங்களை போன்ற பதிவர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி ஒவ்வொரு பதிவும் உணர்சிகரமான பதிவுகள்... நிரூ நீ தொடர்ந்து எழுதுடா(உரிமையோடு) கண்டிப்பா எல்லா வற்றிற்கும் உனக்கு உறுதுணையாக இருப்பேன்.

Jana said...
Best Blogger Tips

ம்ம்ம்... மனதில் ரணத்தோடு வாசித்துமுடித்தேன். இதுபோல யாழில் நிறைப்பேரை நானும் சந்தித்துள்ளேன், பெருமைக்காக இல்லை அவர்களுக்காக என்னால்முடிந்த தொழில் வாய்ப்புக்கள் சிலவற்றை பெற்று கொடுத்துள்ளேன். அதேபோலல முன்னாள் போராளிகளின் தொழில் வாயப்பு, அவர்களின் முன்னேற்றத்திற்கான அரசார்பற்ற நிறுவனம் ஒன்று வெகுவிரைவில் தமது சேவைகளை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளதாக அறியமுடிந்தது, சிறப்பான சேவையை அவர்கள் வழங்குவார்கள் என்று நம்புகின்றேன்.

shanmugavel said...
Best Blogger Tips

//என்னால் என்ன செய்ய முடியும்?
நானும் என் கதையை உரைத்து
ஆறுதலைச் சொல்லி விட்டு
மெதுவாய் விலகி நடந்தேன் - காரணம்
தமிழன் நான்...
நானும் ஓர் சுயநலவாதி தானே!//

இப்படி சொல்லிவிட்டீங்களே சகோ ! உருக்கும் வரிகள் நிறைய !

vanathy said...
Best Blogger Tips

அழுகையை வரவழைக்கும் வரிகள். பொருத்தமான படங்கள். இரண்டாவது படம் பார்க்கவே நெஞ்சு பதறுது. விடிவு வருமா? வேதனை தீருமா?

Mahan.Thamesh said...
Best Blogger Tips

சகோ படித்து முடிப்பதற்குள் நெஞ்சு கணத்துவிட்டது இடையிலே நிறுத்தி பின் தொடர்து படித்தேன்.
போராளிகளின் இன்றைய நிலையினை மிக சிறப்பாக எடுத்துகாட்டியுள்ளீர்கள்.

Mahan.Thamesh said...
Best Blogger Tips

நிமிர்ந்து நடக்கையில்
நிரை நிரையாக
அள்ளி அனுப்பியோர் எல்லாம்- தலை
குனிந்து போனதும்
தமை மறந்து விட்டனர் என
ஆதங்கப்பட்டாள்,

உதவ காத்திருப்போர் பலர் அனால் சென்றடையும் வழிகள் சிக்கல் நிறைந்ததாகவே உள்ளது சகோ . அதனால் பலர் ஒதுங்கிகொள்கின்றனர்.

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

நிரூபனுக்கும் கவிதை வருமோ? ஒரு பெரிய உண்மைச் சம்பவத்தை ஒரு கவிக்குள் அடக்கி அழகாகச் சொல்லிட்டீங்க.... நம் நாட்டுக் கண்ணீர்க் கதைகளை ஒவ்வொன்றாக எழுதினால்... நாம் செத்தாலும் எழுதி முடிக்க இயலாது...

Unknown said...
Best Blogger Tips

உள்ளேன் ஐயா...என்ன கதைக்க முடியவில்லை..அட என் வாயில் பிளாஸ்டர் ஒட்டியது யார்???

Unknown said...
Best Blogger Tips

உள்ளேன் ஐயா...என்ன கதைக்க முடியவில்லை..அட என் வாயில் பிளாஸ்டர் ஒட்டியது யார்???

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

Palkoopi soolunga bass itho varan.//

அடிங்...பிச்சுப் புடுவேன் பிச்சு.
பால் கோப்பி கொடுக்கிற பதிவா இது..
சின்னப் புள்ளத் தனமா இருக்கு.

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin

இந்த வரிகளை படித்த போது மனசு வலிச்சது //

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@M.Shanmugan


முன்னாள் போராளிகள் எதிர்காலம்??????? ஆனால் விரைவில் பதில் கிடைக்கும் என நம்புவோமாக//

நன்றி சகோதரம்,

நிரூபன் said...
Best Blogger Tips

@DARLING EXPORT

இவர்களின் பெயரில் ஐரோப்பிய, அவுஸ்ரேலிய, அமெரிக்க மற்றும் கனடா போன்ற சுமார் 40 இற்கு மேற்பட்ட நாடுகளில் சேகரிக்கப்படும் பணம் எவரை சென்றடைகிறதோ அது இறைவனுக்கும் தெரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது.//

இது தான் இன்று இலங்கையில் வாழும் ஏதிலிகள் பலருக்கும் புரியாத புதிராக உள்ள விடயம் சகோதரி,
உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD


வெறும் வார்த்தைகள் மட்டுமே, வலிகளை ஆற்றிடாது!//

ஆமாம் சகோ,
வார்த்தைகளை விட, இன்றைய கால கட்டத்தில் வாழ்வாதரத்தினைக் கட்டியெழுப்பும் முயற்சிகளைத் தான் வன்னி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


வணக்கம் பாஸ் ....//

வணக்கம் பெரிய பாஸ்,

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


//// புள்ள குட்டி காரன் போல, பொழைப்புக்காக வேற்றான் பூமியில் வந்து நிக்கிறான் ((//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

/// ஒரு காலத்தில் எல்லாம் தலை நிமிரும் பாஸ் .... கந்தகம் அற்ற காற்றை நம் சந்ததி சுவாசிக்கும்...//

இப்படியான வசனங்களைக் கேட்டுக் கேட்டு என் காதெல்லாம் புளிச்சுப் போட்டு பாஸ்,
இதனைத் தான் பலரும் பல வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாள் தான் எப்போது வரும் என்று தெரியவில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. எம் முன்னே பெரிய கடமை ஒன்று உள்ளதாக மட்டும் புரிகிறது...//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

இப்படியான அவல வாழ்வுக்குள் தள்ளி விட்டுத் தான்,புனர் வாழ்வளிக்கிறோம்,மீள்குடியேற்றுகிறோம் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள்!இந்த அவலம் மீழளிக்கப்படும்,ஆண்டவனால்!//

புரிந்துணர்வோடு கூடிய உங்களின் கருத்துக்களுக்கு நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


சகோ!வீதியோரம் நின்ற ஆமி மட்டுமே உதவிக்கரம் நீட்ட இயலாததின் காரணம்.அடிப்படை உதவிகளை குறுகிய காலத்திலே செய்து விட முடியும்.ஆமியை அகற்றுவது யார்?//

சகோ, இப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டியதெல்லாம் ஆமியினை அகற்றும் செயல் அல்ல.
வாழ்வாதரத்தினைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் தான். நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

இலங்கை அரசு சுயமாக பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.இல்லாவிட்டால் உலக அமைப்புக்களை எந்த வித தடையுமில்லாமல் அனுமதிக்க வேண்டும்.//

தமிழர்கள் வாழும் பூமியதாலால் உதவிகள் வந்து சேரும் வழி மாத்திரம் அடைக்கபட்டிருக்கிறது,.
கடவுள் தான் ஒரு வழியினைக் காட்ட வேண்டும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி


மண் வெட்டிக் கூலி தின்னலாச்சே, எங்கள் வாள் வலியும் தோள் வலியும் போச்சே - எனும் பாரதியின் பாடலைத் தான் வருத்ததுடன் பாட வேண்டும்.//

உங்கள் புரிதலுக்கு நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ !


உண்மை ....வலி//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்


விடுங்கள் பாஸ் அவர்களை மறக்க நினைக்குறேன் ..//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா


எங்கள் தேசத்து இன்றைய அவலம்.என்ன சேய்யலாம் நிரூ.உலகநாடுகளின் எந்த சத்தத்தையுமே சட்டை செய்யாமல் எங்கள் சிவப்புச் சட்டைக்காரர்கள்.
இன்றுகூட பீரிஸ் என்ன சொல்லியிருக்கிறார் கேட்டீர்களா ?//

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது, எல்லோருமே ஒன்றாகச் சேர்ந்து தமிழனுக்குப் பாடை கட்டப் போகிறார்கள் எனும் விடயம் தான் தெளிவாகத் தெரிகிறது, நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்


மாப்ள ஆறா ரணங்களை எழுத்துக்களாய் விதைசிருக்கீங்க!//

நன்றி மாம்ஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரியாஸ் அஹமது


நான் தமிழன் சுயநலவாதி தானே ........வசன வடிவில் கோபம் துயரம் இரண்டையும் பதிவு செய்து பகிர்ந்த உங்களுக்கு salute ...நன்றி சகோ//

உங்களுக்கும் நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


சகோ.... நம் வலிகளை நாம் உலகுக்கு உரைத்தாலும் கேட்பதற்கு ஆளில்லையே... அராஜகம் ஒழியும் வரை நாம் உரத்து சொன்னாலும் நீதி கிடைக்கப்போவது இல்லை.//

இனிமே கடவுள் தான் அந்த மக்களுக்கு ஒரு வழியினைக் காட்ட வேண்டும் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரியாஸ் அஹமது

tamil manam 11-12
indli 11-12
tamil 10 9-10//

உங்கள் அன்பிற்கு நன்றி மாப்ளே.

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr.எம்.கே.முருகானந்தன்


நடந்த, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற அவலங்களிருந்து மீள விடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala


படைத்தவன் விரைவில் மனமிறங்க வேண்டும் ......//

ஆமாம் சகோ, ஆனால் எம் உறவுகளின் இன்றைய நிலையினைப் பார்க்கும் போது படைத்தவன் கூட கண் மூடி விட்டான் என்றே எண்ணத் தோன்றுகிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


ஆதங்கமான வரிகள்//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மருதமூரான்.

எல்லாம் மாறவேண்டும் நிரூபன்.

ஒரு காலத்தில் ஹீரோக்களாக கொண்டாடப்பட்டவர்கள் இன்று அதே சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற வலி மிகவும் கொடியது. யதார்த்தம் கன்னத்தில் சப்பென்று அறைகின்றது கவி வரிகளில்.//

என்ன செய்ய முடியும் சகோ, இன்று இவர்களின் அவல நிலையினைப் பார்க்கையில்,
எல்லோரும் தமக்கு வேண்டியது நிறைவேறாத கோபத்தில் அவர்கள் மீது பழிச் சொற்களை வீசிப் புறக்கணித்து விட்டார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@akulan


அண்ணா இது கற்பனையா.. அல்லது உண்மை சம்பவமா.....//

ரொம்ப முக்கியம்,
உங்களுக்கு ஓவர் நக்கல்,
வன்னிப் பகுதிக்கோ, அல்லது குடாநாட்டில் முன்னாள் போராளிகள் வாழும் பகுதிக்கோ ஒருக்கா வந்து பார்க்கிறது;-))

உண்மையான நிகழ்வுகளின் சிறு துளிகளைக் கொண்டு கவிதையினை எழுதியிருக்கிறேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

அருமையான, முன்னாள் போராளிகளின் வலிகளை வெளிப்படுத்தும் கவிதை

இறுதி வரிகளில் தமிழனின் பெருமைகளை????!!!! விளக்கிவிட்டீர்கள்//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Riyas


ம்ம்ம்ம்ம் வரிகள் முழுதும் வலிகள்//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!


படிக்கும் போதே மனதை கணக்கா வைக்கும் வரிகள்..//

உங்களின் புரிதலுக்கு நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!


155ம் கட்டை நோக்கி என் பயணம் தொடர்ந்தது!// இவ்வரிக்கு விளக்கம்?//

எங்கள் ஊர்களில் இரண்டு பிரதேசங்களுக்கு இடைப்பட்ட தூரத்தினை,
ப்ழைய மைல் அளவினை அடிப்படையாகக் கொண்டு கட்டை எனும் சொற்பதத்தினூடாக குறிப்பிடுவார்கள்.

உதாரணமாக வேடந்தாங்கலுக்கும்,
ஊட்டிக்கும் இடையேயான தூரம் 32மைல் என்றால் அதற்கு அண்மையாக இருக்கும் தூரக் குறிப்பு கல்லில் எழுதியிருக்கும் 32 எனும் அலகினை வைத்து அந்த இடத்தினைக் குறிப்பிடுவார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!


மொத்தத்தில் கவிதை படித்து முடித்தவுடன் மனம் கனக்கிறது சகோ..//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@காமராஜ்


முழுவதும் படித்து முடிக்க சற்று துணிவு வேண்டும்.வலி வலி நிஜமான வலி.//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


வணக்கம் நிரூபன்! இன்று வசன கவிதையா? சரி, கவிதை - அதுவும் வசன கவிதை! பார்க்கிறேன்!//

வணக்கம் மிஸ்டர் ஓட்டவடை,
ஆமாம், பாருங்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@vidivelli


நண்பா அருமையான வலிகள் நிறைந்த வரிகள்
அவர்கள் கறைபடிந்த மனிதர்கள் அல்ல,,,, புனிதமான தெய்வப்பிறவிகள்... அதனால் இன்றும் துருப்பிடிக்காமல் இருக்கிறது//

உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி சகோ.
எனது நிலமையினைக் கருத்திற் கொண்டு இப்படியான ஈழம் பற்றிய இலங்கை அரசியலினால் தடை செய்யப்பட்ட அ முரண்பாடுகளை ஏற்படுத்தும் பின்னூட்டங்களைத் தவிர்க்கலாமே சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

நிரூபனுக்கும், பதிவின் தலைப்புக்களுக்கும் ஆகாது போல! இந்தத் தலைப்பிலும் உறுத்தலாக இருக்கும் இரண்டு விடயங்களை சுட்டிக்காட்டுதல் எனது கடமை!

” முன்னாள் ஈழப் பெண் புலியின் கண்ணீர்(க்) கதை!”

இதில் ஈழம் என்ற சொல் தேவையற்றது! பெண்புலிகள் என்றாலே, அவர்கள் ஈழவிடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிதானே! உலகில் வேறேதும் நாடுகளில், வேறேதும் அமைப்புகளில் பெண்புலிகள் இருக்கிறார்களா என்ன? //

இன்றைய கால கட்டத்தில் ஒரு ரசனை நிறைந்த இலக்கியப் பதிவினையும் மார்புக் கச்சை நீக்கிச் சந்தைப்படுத்த வேண்டிய நிலையினைத் தான் தமிழ் இலக்கிய உலக வாசகர்கள் தந்திருக்கிறார்கள். அதனால் தான் வித்தியாசமான முறையில் தலைப்புக்களை வைக்க முனைகையில், தவறுகள் இடம் பெற்று விடுகின்றன,

இங்கே பெண் புலிகள் எனப் போட்டால் ஈழத்தில் உள்ளவர்களுக்கு அச் சொல் புரிந்துணர்வு நிறைந்த் பதமாக இருக்கும், ஆனால் தமிழக மக்களிடையே அச் சொல்லின் மூலம் என் பதிவினைக் கொண்டு செல்ல முடியாது எனும் காரணத்தினால் தான் இவ்வாறு தலைப்பினை வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
தவறினை உணர்ந்து தலைப்பினை மாற்றி விட்டேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


மேலும் இத்தலைப்பு, இன்னுமொரு மயக்கத்தையும் தருகிறது! அதாவது முன்னாள் ஈழப் பெண்புலியின் கண்ணீர்க்கதை எனும் போது, இப்போது ஈழத்தில் இருக்கும் முன்னாள் பெண்புலிகள் கண்ணீரில் வாடுவதாகவும், ஈழத்துக்கு வெளியே இருக்கும் பெண் புலிகள், அவ்வாறு இல்லை என்றும் குறிப்பதற்கான பெருவாரியான வாய்ப்புக்கள் உள்ளன!

உண்மையில் ஈழத்துக்கு வெளியே இருக்கும் தமிழ்மக்கள், முன்னாள் போராளிகள் என அனைவருமே, நடந்து முடிந்த அனைத்தையும் எண்ணி இப்போது கண்ணீரில்தான் வாடுகிறார்கள்!//

நீங்கள் கூறுகின்ற பொருள் மயக்க விடயம் ஏற்றுக் கொள்ளத்தக்கது தான்,
ஆனாலும் இக் கவிதையின் உட் கிடக்கையானது ஈழத்தில் இன்று வாழும் முன்னாள் போராளிகளின் நிலையினை விபரிக்கும் வகையில் அமைந்துள்ளதால், தான் ஈழப் பெண் போராளியின் எனும் பதத்தினைச் சேர்த்தேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

சிலர் கண்ணீர் + கதை இரண்டையும் புணர்த்தி கண்ணீற்கதை என்கிறார்கள்! அந்தக் கொடுமைக்கு, நீங்கள் போட்டது எவ்வளவோ மேல் என்றாலும், வசன கவிதை என்று வரும் போது, இலக்கணமும் சரிவர இயங்குதல் முறையன்றோ!//

வருங்காலத்தில் இத்தகைய தவறுகள் இடம் பெறா வண்ணம்,
வழுவற்ற படைப்புக்களைத் தர முயற்சி செய்கிறேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

மேலும் சைக்கிள் என்ர ஆங்கிலச் சொல் இக்கவிதைக்கு தேவையற்றது! ஈருறுளி, மிதிவண்டி போன்ற பதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம்! சிலர் சைக்கிளுக்கு தமிழில் துவிச்சக்கரவண்டி என்று பெயர் வைக்கிறார்கள்.

துவி, சக்கர இரண்டுமே வேற்றுமொழிச் சொற்களாகும்! ஆக, நீங்கள் ஈருறுளி, மிதிவண்டி போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம்!

நல்ல தமிழ்ச்சொற்களைக் கையாழும் போது, அதனை யாரேனும் எள்ளி நகைத்தால்,அவர் தமிழராக அல்லது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருப்பதில் அர்த்தமில்லை!

’ லுமாலச் சைக்கிள் ‘ என்பது மக்கள் அன்றாடம் பேசும் பேச்சு மொழி. எனவே கவிதை இயல்பாகவும், சுவையாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக பயன்படுத்தினேன் என்று நீங்கள் ஒரு விளக்கம் சொல்லம் முடியும்!

அப்படிச் சொன்னால், பின்னர் நான் மிக நீண்ட விளக்கமளித்து இன்னொரு பின்னூட்டம் போட வேண்டியிருக்கும்//

எங்களது இயல்பான வாழ்க்கைக் கோலத்தினைக் கவிதையில் கொண்டுவர முயன்றேன், அத்தோடு மிதிவண்டி, ஈருருளி எனும் பதங்கள் பலருக்குப் புரியாத புதிராக இருக்கும் என்பதால் தான்,
பொருள் விளக்கம் கொடுக்கும் நிலையில் இருந்தும் தவறி, இயல்பான பண்பாட்டுவியலோடு கலந்த மொழி வடிவத்தினைக் கவிதையினுள் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


நிரூபன் வேண்டுமானால்,

‘ தமிழ் உயிர்வாழ்வது - இயல்புத் தமிழிலா? இலக்கணத்தமிழிலா? ‘

எனும் தலைப்பில் ஒரு பதிவு போடுங்கள்! ஆழமாக அலசி ஆராய்வோம்! தமிழில் முட்டி மோதுவோம்!!//

ஆம் சகோ, நல்லதோர் கருவினைத் தந்திருக்கிறீங்க,
வெகு விரைவில் விவாத மேடையில் இத் தலைப்பினூடாக ஒரு சொற்போர் நடாத்துவோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


நிரூபன் - இந்த அழகிய குறியீட்டைக் கண்டுபிடிப்பதற்கு, எத்தனை முறை உக்காந்து யோசித்தீர்கள? அல்லது தெரியாமல் பயன்படுத்தினீர்களா? //

தங்களோடு முன்னாள் போராளிகள் பற்றியும், கவனிப்பாரற்ற மக்களின் நிலமையினைப் பற்றியும் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு(ஈழம் என்ன தொட்டு நக்கும் ஊறுகாயா?)
உரையாடும் போது தான் இந்தக் கவிதைக்கான கரு மனதில் தட்டுப்பட்டது,

இந்தக் குறியீடானது உட்கார்ந்து யோசித்தது என்றும் சொல்லலாம்/
இயல்பாகவே சொற்களைக் கோர்க்கையில் வந்து விழுந்த வார்த்தை என்றும் சொல்லலாம்- காரணம்- கடந்த
ஞாயிறு, திங்கள், செவ்வாய்-
இந்த மூன்று நாட்களும் இக் கவிதை பற்றிய சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டிருந்தன.

இன்னோர் விடயம் ஆலங்குளம் பகுதியின் இன்றைய நிலை பற்றி ஒரு சில கருத்துக்கள் நெருக்கமானவர்கள் மூலமாக என் காதினை எட்டியது. அவை தான் இந்தக் கவிதை பற்றிய தூண்டுதலுக்கு காரணமாக அமைந்தன,

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


இல்லை! அது இப்போதும் முதன்மைச் சாலைதான்! அப்போது அது முதன்மை பெற்றதுக்கும், இப்போது அது முதன்மை பெறுவதுக்கும் காரணங்கள் வேறுபட்டாலும், ஏ 9 சாலை என்றைக்குமே முதன்மைச் சாலைதான்! - இல்லாவிட்டால் அவ்வளவு படையினரைக் குவித்து பாதுகாப்பார்களா?//

அவ்........ஹா...ஹா...
என்ன ஒரு கடி.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


உங்களை ஒரு ஆணாக வெளிப்படுத்தி, இக்கவிதையினை சொல்லியிருப்பதால், இராணுவத்தினர் உங்களைப் பார்க்கும் பார்வயை - மர்மங்கள் நிறைந்த
மன்மதப் பார்வை.... என்று சொல்லியிருப்பது, பொருத்தமற்றதாக தோன்றுகிறது!

வேண்டுமானால் , கோரப்பார்வை என்றோ, கொலைப் பார்வை என்றோ அல்லது வேறொரு பார்வையின் பெயரையோ குறிப்பிடுதல் நன்று!//

இன்றைய கால கட்டத்தில் கோரப் பார்வையினை அவர்கள் வீசவில்லை.

ஆண்களில் சிலர் எவ்வாறு பெண்களினை அன்பொழுகப் பார்ப்பது போல, ஒரு கண்ணில் அன்பினையும், மறு கண்ணில் காமத்தினையும் கலந்து பெண்களினைப் பார்க்கிறார்களோ, அதே போன்ற பார்வையினைத் தான் இன்று எம்மூர்களில் நிற்கும்
‘நாக்குக் கிழிபட்ட தென்னங் குருத்துக்களும் பார்க்கின்றன சகோ.

அதாவது உள்ளே, இன்னமும் வெட்டிச் சரிக்க வேண்டும் என்கின்ற வன்மம் நிறைந்திருந்தாலும்,
வெளித் தோற்றப்பாட்டிற்கு சமாதானம் கலந்த புன்னகையினை உதிர்க்கிறார்கள் என்பதனை விளக்கத் தான் இப்படி ஓர் சொற் பதத்தினைக் கையாண்டேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@A.R.ராஜகோபாலன்

ரணங்களை கவிதையாய் பகிர்ந்த விதம் அருமை சகோ
பல இடங்களில் மனம் கனமானது//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

ஆணவத்தால் முடி சூடுகிறோம் ‘

கவிஞர் சொன்ன ஆணவமும், நிரூபன் சொன்ன இறுமாப்பும் ஒன்றே!//

இன்று வழமைக்கு மாறாக,
மொக்கை, நகைச்சுவைகளினை மாத்தி யோசிக்கும் உன்னில் ஒரு இலக்கிய நயம் மிகுந்த உணர்வு பொங்கிப் பிரவாகித்துள்ளதை என்னால் உய்த்தறிய முடிகிறது,
இதற்கான காரணம் தான் எனக்கு இன்னமும் தெரியவில்லை.

வெறுமனே மொக்கைகளையும், மாத்தியோசிக்கும் வில்லங்களையும் போடும் உன்னால் இப்படியும் ஆக்க பூர்வமான விமர்சனங்களை வழங்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக நேற்றுச் சிபி வலையிலும்,
இன்று என் வலையிலும் பின்னூட்டங்களைப் பகிர்ந்திருக்கிறாய்,

தமிழ் எழுத்துலகில் உன்னுடைய இன்னோர் பரிணாமத்தினை நீ வெகு விரைவில் தொடங்கப் போகிறாய் என்பதற்கான அறிகுறிகள் மட்டும் இப்போது தெரிகிறது மாப்ளே.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

ஆணவத்தால் முடி சூடுகிறோம் ‘

கவிஞர் சொன்ன ஆணவமும், நிரூபன் சொன்ன இறுமாப்பும் ஒன்றே!//

மச்சி, நீ இன்றும் அந்தப் பாட்டை,
கடல் கடந்து தொலை தூரத்தில் வாழும் போதும் நினைவில் வைத்திருக்கிறாய் என்பது ஆச்சரியமாக இருக்கிறது,

’சந்தோச மேகங்கள் வந்தாடும் நேரத்தில்
செந்தூரப் பூ மழை தூவியது.....

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

நிரூ நீ தொடர்ந்து எழுதுடா(உரிமையோடு) கண்டிப்பா எல்லா வற்றிற்கும் உனக்கு உறுதுணையாக இருப்பேன்//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்
கண்டதை எழுதி காலத்தை ஓட்டும் எங்களை போன்ற பதிவர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி //

இக் கூற்றினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்,
எல்லோரிடத்தும் நிச்சயமாக ஓர் திறமை ஒளிந்திருக்கிறது, அதனை நீங்கள் தான் வெளிப்படுத்த வேண்டும்,
வந்தேமாதரம் இல்லையென்றால் வலை உலகில் நமக்கெல்லாம் பல டெக்னோலாஜி விடயங்களே தெரியாமல் போயிருக்கும்,
ஆகவே கண்டதையும் எழுதிக் காலத்தை ஓட்டுதல் என உங்களை நீங்களே தாழ்த்தலாமா சகோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@Jana

ம்ம்ம்... மனதில் ரணத்தோடு வாசித்துமுடித்தேன். இதுபோல யாழில் நிறைப்பேரை நானும் சந்தித்துள்ளேன், பெருமைக்காக இல்லை அவர்களுக்காக என்னால்முடிந்த தொழில் வாய்ப்புக்கள் சிலவற்றை பெற்று கொடுத்துள்ளேன். அதேபோலல முன்னாள் போராளிகளின் தொழில் வாயப்பு, அவர்களின் முன்னேற்றத்திற்கான அரசார்பற்ற நிறுவனம் ஒன்று வெகுவிரைவில் தமது சேவைகளை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளதாக அறியமுடிந்தது, சிறப்பான சேவையை அவர்கள் வழங்குவார்கள் என்று நம்புகின்றேன்.//

இந் நேரத்தில் உங்களுக்கு ஒரு சல்யூட்,
இதே போல எல்லோரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்தால்,
எம் இனம் தலை நிமிர்ந்து வாழும் என்பதில் ஐயமில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel


இப்படி சொல்லிவிட்டீங்களே சகோ ! உருக்கும் வரிகள் நிறைய !//

என்ன செய்ய முடியும் சகோ,
இது தானே இரக்கமற்ற சுயநலத் தமிழர்களின் யதார்த்த நிலை சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@vanathy

வேதனை தீருமா?//

இது தான் விடையில்லாத ஒரு வினாவாக நகர்ந்து கொண்டிருக்கிறது...

நன்றி வான்ஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

உதவ காத்திருப்போர் பலர் அனால் சென்றடையும் வழிகள் சிக்கல் நிறைந்ததாகவே உள்ளது சகோ . அதனால் பலர் ஒதுங்கிகொள்கின்றனர்.//

நீங்கள் சொல்லும் பதிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான், ஆனால் உதவ முடிந்தவர்கள் எல்லோரும் தனித்தனியாக தம்மால் முடிந்த உதவிகளை ஒருவருக்காகவது வழங்கலாம் தானே சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நிரூபனுக்கும் கவிதை வருமோ? ஒரு பெரிய உண்மைச் சம்பவத்தை ஒரு கவிக்குள் அடக்கி அழகாகச் சொல்லிட்டீங்க.... நம் நாட்டுக் கண்ணீர்க் கதைகளை ஒவ்வொன்றாக எழுதினால்... நாம் செத்தாலும் எழுதி முடிக்க இயலாது...//

இதற்கு முதற் பதிவுகளிலும் நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறேன் சகோ.
கவிதை எல்லாம் வராது, ஏதோ மனதில் பட்ட உணர்வுகள் கவிதை என்ற அடை மொழியின் கீழ் வருகிறது.
ஹி....ஹி...

ஆமாம்,
எங்கள் வாழ்வில் கறை படிந்த கடந்த காலத்து கண்ணீர் கதைகளை எழுதி ஆற்றுப்படுத்த முடியாதென்பது உண்மை தான்,

ஆகுலன் said...
Best Blogger Tips

@நிரூபன் "ரொம்ப முக்கியம்,
உங்களுக்கு ஓவர் நக்கல்,
வன்னிப் பகுதிக்கோ, அல்லது குடாநாட்டில் முன்னாள் போராளிகள் வாழும் பகுதிக்கோ ஒருக்கா வந்து பார்க்கிறது;-))"

இந்த கவிதை வாசித்துவிட்டு யாராச்சும் நக்கல் கருத்து இடலாமா.....

கண்கலங்க வைக்கும் வரிகள்.....
நீங்கள் கவிதையில் குறிப்பிட்ட முக்கியமான இடங்கள் அனைத்தும் என் கண்முன்னே வந்து போகின்றது...

நானும் வன்னி பகுதியில் வழ்ந்தவன்தான்....

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

உள்ளத்தை உலுக்கி விட்டீர்கள்;உருக்கியும்தான்.

கவி அழகன் said...
Best Blogger Tips

பெண் ஆண் போராளிகளின் தற்பொழுது உள்ள உண்மை நிலையை கூறியிருக்கும் கவிதை
கால் நொண்டி நொண்டி நடந்தால் என்ற ஒரு வசனம் வந்திருந்தாள் இன்னும் உண்மைக்கு உரம் சேர்க்கும்
55 கட்டை பழைய யாபகங்கள் மீண்டும் வருகிறது மனதுக்குள்

Unknown said...
Best Blogger Tips

காரணம்
தமிழன் நான்...
நானும் ஓர் சுயநலவாதி தானே!


கண்ணீரே மையாக
கவிதை எழுதி-படித்து
மண்ணீர மாயக
மாறப் புழுதி-வெடிக்க
பண்ணீரே நிருப
படைத்தீரே நிருப-இங்கே
எண்ணீரா எண்ணீரா
ஏனோநான் தமிழனானேன்

புலவர் சா இராமாநுசம்

Rathnavel Natarajan said...
Best Blogger Tips

வேதனையாக இருக்கிறது.

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

உங்கள் கவிதை யோசிக்க வைக்கிறது.
நல்ல உலகசினிமாவும் நல்ல கவிதையும் ஒன்று.

J.P Josephine Baba said...
Best Blogger Tips

உண்மை வலியை தான் தருகின்றது!

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

>என்னால் என்ன செய்ய முடியும்?
நானும் என் கதையை உரைத்து
ஆறுதலைச் சொல்லி விட்டு
மெதுவாய் விலகி நடந்தேன் - காரணம்
தமிழன் நான்...
நானும் ஓர் சுயநலவாதி தானே!

நானும் அப்படித்தான் செய்திருப்பேன். ஏனென்றால் நானும் தமிழன்தானே.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails