கரைந்து போன
உதிரங்களின் சுவாசத்தில்
பிறந்திருந்தது, எங்களுக்கான
ஒரு வசந்த காலப் பொழுது
ஒரு கும்மிருட்டை(க்)
குதூகலத்துடன் தரிசித்த
பெருமையில்
பேருவகை கொண்டிருந்தோம்,
மிக நீண்ட நாட்களின் பின்னர்
கந்தகத்துகள்களினால் நிறைந்திருந்த
எங்கள் காற்று மண்டலத்தில்
இறந்து போன உயிர்களின்
எலும்புகளைப் புணர்ந்து
பசியாற வேண்டும் என்பதற்காய்
காமப் பிசாசுகள்
ஈட்டிகளுடனும், வேல்களுடனும்
பின்னாலிருந்து குத்துவதற்காய்
கூக்குரலிட்ட படி
கலகலவெனச் சிரித்து மகிழ்ந்தன,
இவை எல்லாவற்றிற்கும் நடுவில்
எங்களுக்கெல்லாம்
காதலி கிடைத்ததை
கொண்டாடி மகிழ்ந்ததாய் ஞாபகம்!
மாவிலாறின் கரையிருந்து
அவளின் மார்பில்
ஈட்டி பாய்ந்தது,
புணர்ந்து மகிழ்ந்த
எங்கள் கலவி
நாட்களின்;
கனவுகளின்
இதமான வெப்பச் சூட்டில்
கவலைகளைத் தொலைத்த
நினைவுடன் இருக்கையில்
எங்கள் வயல்களெங்கும்
பெரு நெருப்பு
மிளாசி எரியத் தொடங்கியது,
குற்றுயிராய்த் துடிக்கும் அண்ணா,
குண்டு பட்டு குடிசையினுள்
ஓலமிடும் அப்பா
அணைக்க முடியாது சுவாலையுடன்
பற்றியெரும் வீடு
கையில் அகப்பட்ட பொருட்கள்
கவலைகளோடு
காப்பாற்ற முடியாதவராய்
அவலத்துடன் ஓடத் தொடங்கும்
அப்பாவிகளின் அலறல் ஒலி
இதனைக் கேட்காதவராய்
மேலிருந்து கீழ் பார்த்து
இதுவே எம் இலக்கு
என போடப்படும் குண்டுகள்,
இத்தனைக்கும் நடுவே
எங்கள் வசந்தம்
கற்பழிக்கப்பட்டது,
அவலக் குரல் ஆகாயத்தை
எட்ட முடியாத படி
போடப்பட்டிருந்தன வேலிகள்
சானிட்டரி நாப்கினுக்கு
பதிலாக சாரங்கள் ஏதுமின்றி
தீட்டில் குளித்து(க்)
கருகத் தொடங்கின
எங்கள் உறவுகளின்
தொடைகள்!
மீண்டும்
அம்பலவன் பொக்கணை
அரையுயிரோடு இருக்கும்
தம்பியின் உயிர்-
என்னை விட்டு விட்டு
நீங்கள் ஓடுங்கள் என
அழுதபடி விடை கொடுக்கும்
தம்பி,
கையில்
அகப்பட்ட பொருட்கள்
நகைகளை மட்டும்
நிலத்தின் கீழ் வைக்கும்
எண்ணத்தைக் கைவிட்டு
உயிர் பாதுகாப்பிற்காய்
உறைவிடம் தேடும்
உருக்குலைந்த குச்சித் தடிகள்,
முட்கம்பி வேலிகள்,
முகம் கழுவும் வேளையில்
மூக்கை மட்டும் தண்டிக்கும்
மலத்தின் வாசம்
வாழ் நாளின் தொடக்க
காலமிருந்து அடுக்கத் தொடங்கிய
’கூப்பனுக்குப்’ பதிலாக
இங்கு மட்டும்
வாசிக்கப்படும் பெயருக்கான காத்திருப்பு,
எரிந்து போன வயல்களில்
பயிர் செய்வதற்கு
உரமாக உறவுகளின் எலும்புகள்
பயிர் செய்யும் எண்ணம் ஏதுமின்றி
நாட்கள் நகர்கின்றன
வெருளிகள் மட்டும்
தலையில் சட்டியுடன்
இப்போதும் எங்கள் தோட்டங்களில்
உலா வருகின்றன!
இதுவரை சொல்லப்படாத
வரலாறுகளின் வெளியீடாக
தினம் ஒரு புத்தன்
தெருவெங்கும் பிறப்பெடுக்கிறான்
இதே வரிசையில்
இப்போது முறிகண்டிப் பிள்ளையாரின் கீழ்
கண்டெடுக்கப்பட்ட எச்சமாய்
கையுயர்த்திச் சிரிக்கிறது
சித்தார்த்தனின் சிலையும்!
பிற் குறிப்பு: கவிதையில் வரும் கூப்பன் எனும் சொல்= ரேசன் கார்ட், அல்லது, நிவாரண உணவிற்காக அடுக்கப்படும் அட்டை.
|
88 Comments:
ம் ...
நல்ல கருத்துமிக்க கவிதை
நல்ல நாடான தமிழகத்தை மோசமான தலைவன் ஆட்சி செய்வது போல் சிறந்த கவிதையை மார்க்கெட் பண்ண மோசமான தலைப்பு தேவைப்படுவது காலத்தின் கட்டாயம்
துயரங்களை வார்த்தை சாட்டையால் சுழற்றி அடித்து இருக்கிறீர்கள்...ஒவ்வொரு வரியை படிக்கும் போதும் வலிக்கிறது !!
கருத்து என்று எதுவும் சொல்ல இயலவில்லை நிரூபன்...
உணர்ந்தேன் உங்களின் உணர்வை !
துயரமும்,நிஜமும் கலங்கடிக்கும் சிறப்பான கவிதை நிருபன்
///இதுவரை சொல்லப்படாத
வரலாறுகளின் வெளியீடாக
தினம் ஒரு புத்தன்
தெருவெங்கும் பிறப்பெடுக்கிறான்
இதே வரிசையில்
இப்போது முறிகண்டிப் பிள்ளையாரின் கீழ்
கண்டெடுக்கப்பட்ட எச்சமாய்
கையுயர்த்திச் சிரிக்கிறது
சித்தார்த்தனின் சிலையும்!/// சிங்கள குடியேற்றங்களை தானே சொல்லுரிங்க. இனி கந்தரோடையில இருக்கிறதையும் விகாரைகள் ஆகுவார்கள்.
சகோ!வாழ்வின் அவலங்களை கண்முன்னே கொண்டு வந்து விட்டு அதற்கு முரணாக தலைப்பா?
என்னைப்போன்றவர்கள் உங்கள் பதிவுக்கு வருவதற்கு இப்படித் தலைப்பு வைக்க வேண்டிய அவசியமில்லை.
தலையில்லாக் கவிதை.
////இவை எல்லாவற்றிற்கும் நடுவில்
எங்களுக்கெல்லாம்
காதலி கிடைத்ததை
கொண்டாடி மகிழ்ந்ததாய் ஞாபகம்!///பெருமூச்சு (((((
இரண்டு தடவை படித்த பின் தான் கவி ஆழமாய் புரிந்தது....... உங்கள் சொல் கையாடல் வியப்பாக உள்ளது..
@நண்டு @நொரண்டு -ஈரோடு
ம் ...//
உங்களிடமிருந்து அதிகமான கருத்துக்களை எதிர்பார்த்தேன். ஒரு இரங்கலை மட்டும் சொல்லி விட்டு, நழுவி விட்டீர்களே சகோ.
@பிரபாஷ்கரன்
நல்ல கருத்துமிக்க கவிதை//
இங்கே நான் கருத்தெதுவும் சொல்லவில்லை நண்பா. இன்னொரு தடவை படித்துப் பாருங்கள், எங்களூரின் அவலங்களை மட்டுமே பதிவாக்கியுள்ளேன் சகோ.
@சி.பி.செந்தில்குமார்
நல்ல நாடான தமிழகத்தை மோசமான தலைவன் ஆட்சி செய்வது போல் சிறந்த கவிதையை மார்க்கெட் பண்ண மோசமான தலைப்பு தேவைப்படுவது காலத்தின் கட்டாயம்//
மோசமான தலைப்பு என்றாலும், எங்களின் வாழ்வும், நீலப் படம் போன்று பார்த்து முடித்த பின்னர் குப்பையில் வீசப்பட்டு, பயனற்றதாகித் தானே போய் விட்டது சகோ.
அதனால் தான் இப்படி ஒரு விபரீதத் தலைப்பு!
@Kousalya
துயரங்களை வார்த்தை சாட்டையால் சுழற்றி அடித்து இருக்கிறீர்கள்...ஒவ்வொரு வரியை படிக்கும் போதும் வலிக்கிறது !!
கருத்து என்று எதுவும் சொல்ல இயலவில்லை நிரூபன்...
உணர்ந்தேன் உங்களின் உணர்வை !//
இந்த வலிகளினூடாகத் தான் எமக்கான இன்றைய வாழ்வினை இந்தளவு தூரம் வரைக்கும் கடந்து வந்திருக்கிறோம் சகோதரி.
நன்றிகள்.
அன்பின் நிரூபன்,
வணக்கம். அவ்வளவு எளிதாக கலங்காத நான் நிச்சயமாகக் கலங்கிப் போனேன். நண்பர்களுக்கு இந்தக் கவிதையை அனுப்பியுள்ளேன்
@shanmugavel
துயரமும்,நிஜமும் கலங்கடிக்கும் சிறப்பான கவிதை நிருபன்//
நன்றிகள் சகோ.
எதுவும் சொல்லத்தெரியவில்லை நிருபன்.. இதை எனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறேன்
தலைப்பை மாற்றியிருக்கலாம் நண்பா
முட்கம்பி வேலிகள்,
முகம் கழுவும் வேளையில்
மூக்கை மட்டும் தண்டிக்கும்
மலத்தின் வாசம்
வாழ் நாளின் தொடக்க
காலமிருந்து அடுக்கத் தொடங்கிய
’கூப்பனுக்குப்’ பதிலாக
இங்கு மட்டும்
வாசிக்கப்படும் பெயருக்கான காத்திருப்பு,
எம்மவர் துயரங்களை
எத்தனை கவிதை வடித்தாலும்
எடுத்துரைக்க இயலாது!!
எனிஹவ்,
எங்கள் எண்ணங்களை
எடுத்துரைத்தமைக்கு
என்மனமார்ந்த வாழ்த்துக்கள் நிரூ.
நிரூ...ஒவ்வொரு சொல்லும் நம் அத்தனை உறவுகளின் முகங்களை அப்படியே முன்னுக்குக் கொண்டு வருது.இதே சித்திரவதையை இப்போ சத்தமில்லாமல் ஓட்டமில்லாமல் இன்னும்தானே அனுபவித்து வருகிறார்கள்.என்றுதான் விடியுமோ!
கிழக்கு மாகாணத்தில் புதிதாக தொல்பொருள் முக்கியத்துவமிக்க 85 இடங்கள் இனம் காணப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர் எல்லாவெல மேதானந்த தேரர் சொல்லியிருக்கிறாரே.இதுக்கு என்ன அர்த்தம் !
கண்ணீர் கண்ணீர் கண்ணீர் கண்ணில்....
என்ன சொல்வதென்றே தெரியவில்லை நண்பா..இப்படிக் கையறு நிலையில் இருக்கின்றோமே!
ஒவ்வொரு வரியை படிக்கும் போதும் இதயம் வலிக்கிறது !! கலங்கடிக்கும் நிஜங்கள்.கண்ணீர் விடுவதைத் தவிர வேறு வழியின்றி..சிறப்பான கவிதை நிருபன்
இறுதியாக நம் ஏழுவருட வாழ்க்கையினை யதார்த்த விம்பத்தில் துல்லியமாக விழவைத்துள்ளது இந்த கவிதை..
கவிதை படித்து முடிக்கையில் ம்ம்... என்ற பெருமூச்சுடன், இதயத்தில் அதே பழைய வலி!!
//மூக்கை மட்டும் தண்டிக்கும்
மலத்தின் வாசம்//
//என்னை விட்டு விட்டு
நீங்கள் ஓடுங்கள் என
அழுதபடி விடை கொடுக்கும்
தம்பி//
பாதி படிக்கையிலேயே பதறுகிறது நெஞ்சம். உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தாலும்...அனுபவித்தால்தான் தெரியும் அந்த வலி..
அணையா நெருப்பாக தீபத்தை சுமந்து செல்கிறீர்கள். பேயிருள் ஒழியும் நாள் வரும். வந்தே தீரும்!
நிரு...கவிதையில் வலி உணரப்படுகிறது... ஆனால் கவிதையின் தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை... வேறு தலைப்பே கிடைக்காதா?
நண்பா முடியவில்லை தாங்குவதற்கு!
சொல்லப்பாடாத சோகங்கள்!
வலிகளும் வேதனையுமாக திரிந்த கனப்பொழுதுகள் உறவுகள் குற்றுயிராக கிடந்தபோது உணர்வுகள் துடிக்க ஜரோப்பிய நகரங்கள் அதிர குரல் கொடுத்தோமே கொட்டும் மழையிலும்
பனியையும் பொருப்படுத்தாமல்!
எந்த தேவதூதனும் கைகொடுக்கவில்லையே!
நாதியற்ற நம் இனத்திற்கு!
@கந்தசாமி.
சிங்கள குடியேற்றங்களை தானே சொல்லுரிங்க. இனி கந்தரோடையில இருக்கிறதையும் விகாரைகள் ஆகுவார்கள்.//
சிங்களக் குடியேற்றங்களை விட, தற்போது புராதன வரலாறுகளின் அடிப்படையில் பௌத்த மதம் இவ் இடங்களில் எல்லாம் புழக்கத்தில் இருந்தது எனக் கூறி புதிதாக எம்மூர்களில் முளைக்கும் புத்தர் சிலைகளைகளையும், விகாரைகளையும் தான் சொல்கிறேன்.
@ராஜ நடராஜன்
சகோ!வாழ்வின் அவலங்களை கண்முன்னே கொண்டு வந்து விட்டு அதற்கு முரணாக தலைப்பா?
என்னைப்போன்றவர்கள் உங்கள் பதிவுக்கு வருவதற்கு இப்படித் தலைப்பு வைக்க வேண்டிய அவசியமில்லை.
தலையில்லாக் கவிதை.//
இல்லைச் சகோ, முரணாண தலைப்பு என்று உங்கள் பார்வையில் பட்டாலும், கொஞ்சம் ஆழ ஊடுருவிக் கவிதையினைப் பார்த்தால், தலைப்பின் உள்ளார்ந்தம் புரியும் சகோ.
நிர்வாணத்தை அடிப்படையாக வைத்து நீலப்படம் காட்டுவது போல, எங்களூரிலும் சமாதானம், யுத்தமற்ற வாழ்வு இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்து வளம் கொழித்த வாழ்வு, பல யுத்தங்களின் பின்னே அழிந்து, அவலங்களைச் சந்தித்து, சிதைவடைந்து போய்விட்டதல்ல்லவா. ஆகவே விரும்பிய போது யார் வேண்டுமானாலும் இவ் அவலங்களைத் தரிசிக்கலாம் எனும் நிலையில் எம்மூர் வரலாறுகள் ஆகி விட்டன. ஆகவே அதனை விளக்கவே இப்படி ஒரு தலைப்பு.
@கந்தசாமி.
இரண்டு தடவை படித்த பின் தான் கவி ஆழமாய் புரிந்தது....... உங்கள் சொல் கையாடல் வியப்பாக உள்ளது..//
நன்றிகள் சகோ, எங்களின் அவலங்களைக் கண் முன்னே கொண்டு வர வேண்டும் என்பதற்கான ஒரு கவியே இது, இக் கவியில் கற்பனைகளினை ஒப்பனைப்படுத்திக் கூறுவதை விடுத்து, நிஜங்களை எழுத்தாக்க முனைந்திருக்கிறேன். அதன் தாக்கம் தான் இச் சொல் கையாடல் சகோதரா.
@இரா.எட்வின்
அன்பின் நிரூபன்,
வணக்கம். அவ்வளவு எளிதாக கலங்காத நான் நிச்சயமாகக் கலங்கிப் போனேன். நண்பர்களுக்கு இந்தக் கவிதையை அனுப்பியுள்ளேன்//
நன்றிகள் சகோ, கவிதையினைப் படித்து நீங்கள் கலங்கியிருக்கிறீர்கள் என்றால், இவற்றினை அனுபவித்த உறவுகளினதும், கண் முன்னே பார்த்த எங்களதும் நிலமைகள் எப்படி இருந்திருக்கும்?
@Mathuran
எதுவும் சொல்லத்தெரியவில்லை நிருபன்.. இதை எனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறேன்//
ஏதாவது மனதின் ஒரு ஓரத்தில் தோன்றும் சகோ, அந்த உணர்வுகளையாவது சொல்லலாமே?
நன்றிகள் சகோ.
@Mathuran
தலைப்பை மாற்றியிருக்கலாம் நண்பா//
விரும்பிய போது பார்க்கவும், வேண்டிய போது பழகவும் தானே எங்கள் வாழ்வு இன்று வரை இருக்கிறது, அதனை விளக்கத் தான் இப்படி ஒரு முரண் தலைப்பு.
@மைந்தன் சிவா
எம்மவர் துயரங்களை
எத்தனை கவிதை வடித்தாலும்
எடுத்துரைக்க இயலாது!!
எனிஹவ்,
எங்கள் எண்ணங்களை
எடுத்துரைத்தமைக்கு
என்மனமார்ந்த வாழ்த்துக்கள் நிரூ.//
வாழ்த்துக்களை விட, கவிதையின் உள்ளார்ந்தக் கருத்துக்களின் தாக்கங்களையும், அவற்றிற்கான விளக்கங்களையும், விமர்சனங்களையும் தான் நான் அதிகம் எதிர்பார்ப்பதுண்டு,
ஒரு அவலத்தை எழுத்தில் வடித்த எனக்கு வாழ்த்துக்களைத் தந்திருக்கிறீர்கள் சகோ, இவ் வாழ்த்துக்களை இவ் இடத்தில் எப்படி ஏற்றுக் கொள்வது என்பது மட்டும் தான் புரியவில்லை.
நன்றிகள் சகோ.
@ஹேமா
நிரூ...ஒவ்வொரு சொல்லும் நம் அத்தனை உறவுகளின் முகங்களை அப்படியே முன்னுக்குக் கொண்டு வருது.இதே சித்திரவதையை இப்போ சத்தமில்லாமல் ஓட்டமில்லாமல் இன்னும்தானே அனுபவித்து வருகிறார்கள்.என்றுதான் விடியுமோ!
கிழக்கு மாகாணத்தில் புதிதாக தொல்பொருள் முக்கியத்துவமிக்க 85 இடங்கள் இனம் காணப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தர் எல்லாவெல மேதானந்த தேரர் சொல்லியிருக்கிறாரே.இதுக்கு என்ன அர்த்தம் !//
இன்னும் இன்னும் பல வரலாற்று ஆதாரங்கள் மண்ணின் புதைந்துள்ளன, அவையும் காலக் கிரமத்தில் வெளி வரும் என்பது தான் இதன் உள்ளார்ந்த அர்த்தம், இவை சும்மா ட்ரெயிலர் தான், வெகு விரைவில் மெயின் பிக்சர் காட்டுவார்கள் என நினைக்கிறேன்.
@MANO நாஞ்சில் மனோ
கண்ணீர் கண்ணீர் கண்ணீர் கண்ணில்....//
நன்றிகள் சகோ.
@செங்கோவி
என்ன சொல்வதென்றே தெரியவில்லை நண்பா..இப்படிக் கையறு நிலையில் இருக்கின்றோமே!//
இவை எல்லாம் நடந்து முடிந்த நிகழ்வுகள் சகோ.. இப்போது எவரிலும் குற்றமில்லைத் தானே.
@ஆதிரா
ஒவ்வொரு வரியை படிக்கும் போதும் இதயம் வலிக்கிறது !! கலங்கடிக்கும் நிஜங்கள்.கண்ணீர் விடுவதைத் தவிர வேறு வழியின்றி..சிறப்பான கவிதை நிருபன்//
நன்றிகள் சகோ.
@Jana
இறுதியாக நம் ஏழுவருட வாழ்க்கையினை யதார்த்த விம்பத்தில் துல்லியமாக விழவைத்துள்ளது இந்த கவிதை..
கவிதை படித்து முடிக்கையில் ம்ம்... என்ற பெருமூச்சுடன், இதயத்தில் அதே பழைய வலி!!//
கடந்த காலங்களை கண் முன்னே கொண்டு வர வேண்டும் என நினைத்து தான் எழுதினேன். அதனை யதார்த்தத்தை உங்களின் பின்னூட்டம் அழகாக விளக்கியிருக்கிறது. நன்றிகள் சகோ.
@! சிவகுமார் !
பாதி படிக்கையிலேயே பதறுகிறது நெஞ்சம். உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தாலும்...அனுபவித்தால்தான் தெரியும் அந்த வலி..
அணையா நெருப்பாக தீபத்தை சுமந்து செல்கிறீர்கள். பேயிருள் ஒழியும் நாள் வரும். வந்தே தீரும்!//
நன்றிகள் சகோ... நீங்கள் சொல்லும் அணையாத நெருப்பான தீபம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அணைந்து விட்டது சகோ.
இப்போது வாழ்க்கையினைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் தான் நாம் எல்ல்லோரும்.
@தமிழ்வாசி - Prakash
நிரு...கவிதையில் வலி உணரப்படுகிறது... ஆனால் கவிதையின் தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை... வேறு தலைப்பே கிடைக்காதா?//
வேறு தலைப்புகள் இருக்கிறது சகோ, உங்களின் மன ஆதங்கமும் புரிகிறது சகோ, எங்களின் இறந்து போன கடந்த காலங்களை மட்டும் இக் கவிதையில் முதன்மையளித்து எழுதியுள்ளேன்.
நிர்வாணத் தியேட்டரில் காட்டப்படும் நீலப்படம் எனும் சொல்லாடலின் மையக் கருவும்- நிர்வாணத்தை அடிப்படையாக வைத்து விரும்பிய போது பார், விருப்பமில்லையோ வேறு பக்கம் போ என்பது போன்ற அர்த்தத்தில் தானே காட்டப்படுகிறது.
இதனைப் போலத் தான், எங்களின் கடந்த கால வாழ்வும், விரும்பிய போது எல்லோரும் வந்து கொண்டாடி மகிழ்ந்தார்கள், இப்போது பயனற்ற வாழ்வாகிப் போனதால் கவனிப்பாரற்று கையறு நிலையில் பலர் வாழ்கிறார்கள். அதனை விளக்கத்தான் இப்படியொரு தலைப்பு சகோ,
@Nesan
நண்பா முடியவில்லை தாங்குவதற்கு!
சொல்லப்பாடாத சோகங்கள்!
வலிகளும் வேதனையுமாக திரிந்த கனப்பொழுதுகள் உறவுகள் குற்றுயிராக கிடந்தபோது உணர்வுகள் துடிக்க ஜரோப்பிய நகரங்கள் அதிர குரல் கொடுத்தோமே கொட்டும் மழையிலும்
பனியையும் பொருப்படுத்தாமல்!
எந்த தேவதூதனும் கைகொடுக்கவில்லையே!
நாதியற்ற நம் இனத்திற்கு!//
இல்லைச் சகோ, இவ் இடத்தில் தான் எங்கள் உறவுகள் தவறு செய்திருக்கிறார்கள். ஒரு அழிவின் விளிம்பில் நிற்கையில், இன்றோ நாளையோ எல்லோரும் முடிந்து விடுவார்கள் எனும் நிலமையில் கொடுக்கப்பட்ட குரல்- வேறோர் கண்ணோட்டத்தில் பார்க்கப்படக் கூடியதற்கான வாய்ப்புக்களையே அதிகமாக ஏற்படுத்தியிருந்தது.
இக் குரல் கொடுப்பிற்கான காலப் பகுதி 2002ம் ஆண்டில், பல சாதனைகளின் பின்னர் இடம் பெற்றிருந்தால் நிச்சயமாக பாரிய பலனைத் தந்திருக்கும்.
சில வேளை உங்களைப் போன்ற உறவுகள் அனைவரும் அக் காலத்தில் குரல் கொடுத்திருந்தால் ஒரு குழந்தையின் பிறப்பிற்கு நிச்சயமாய் அக் குரல் வழிவகுத்திருக்கும். ஆனால் எல்லாம் முடியும் வேளையில் கொடுக்கப்பட்ட குரல்.. இயலாதவனைக் காப்பாற்றுவதற்கான குரல் எனும் பார்வையில் பல நாடுகள் உற்று நோக்கியதால் பாரிய விளைவுகளைத் தரவில்லை என்பது என் கருத்து.
நெஞ்சைதொடும் கவிதை அண்ணா, உலர்ந்த வார்த்தைகளால் வடித்து இருக்குறிர்கள்,
படிக்கும்போதே மனசை ஏதோ செய்யுது
இதில் எந்தப் பத்தியை எடுத்து சுட்டுவது... வேண்டாம் நான் பலதை மறக்க நினைக்கிறேன்....
ஒரு கொடுங்காலத்தின் நிகழ்வுகளை அப்படியே பதிந்திருக்கிறீர்கள் நிரு! வன்னிமக்களுக்கு இவ்வளவு துன்பங்கள் இருந்தும், இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது உல்லாச வாழ்வு நடத்தும் சில அரசியல்வாதிகளின், முகத்திரையை விரைவில் கிழித்தெறிவோம்!!
வன்னிமக்களின் வாழ்வில் வசந்தங்கள் பூக்கட்டும்!!
நாங்கள் ரத்தம் தோய்ந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் மன்னித்துவிடு நண்பா.....மறந்து விடாதே!
மிக ஆழமானக் கவிதை... ஈழம் என்று சொல்லும் போது... ஏனோ கண்களினோரம் ஈரம்...
உணர்வின் வலியை அழுத்தமாகப்பதிவு செய்திருக்கிறீர்கள். படிக்கும்போதேயே அந்த வேதனையை உணரமுடிகிறது. நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் கவிதையின் தலைப்பு நிறையப்பேரின் கவனம் ஈர்க்கப் போடப்பட்டுள்ள தலைப்பு என்பதாகத்தான் படுகிறது. தலைப்பை மாற்றிவிடலாமே.
என்னஒரு அற்புதமான கவிதை...
நன்றி..
என்னஒரு அற்புதமான கவிதை...
நன்றி..
படிக்கும்போதே ஒருவித வலியையும், வேதனையையும் உணரமுடிகிறது ..
//குற்றுயிராய்த் துடிக்கும் அண்ணா,
குண்டு பட்டு குடிசையினுள்
ஓலமிடும் அப்பா
அணைக்க முடியாது சுவாலையுடன்
பற்றியெரும் வீடு
கையில் அகப்பட்ட பொருட்கள்
கவலைகளோடு
காப்பாற்ற முடியாதவராய்
அவலத்துடன் ஓடத் தொடங்கும்
அப்பாவிகளின் அலறல் //\
கவிதைவரிகள் காட்சிகளாக விரிந்து, தாங்க இயலா வேதனையை உண்டாக்குகின்றன..
இந்ததலைப்பை தவிர்த்திருக்கலாம் சகோ.. உள்ளே வருவதற்கு பயமாக இருந்தது...
துரத்தில் இருந்து பார்த்தவைகளுக்கு கவிதை வடிவம் கொடுப்பதற்கும், வல வேதனைகளை அனுபவித்தவனின் கவிதைக்கும் உள்ள வேறுபாட்டை உணர முடிந்தது சகோ. ஈழத்தின் வலி பற்றிய எங்களின் கவிதைகள் உணர்ச்சியற்றவைகளாக தெரிகிறது சகோ..
//நிர்வாணத் தியேட்டரில் ஓடி முடிந்த நீலப் படங்கள்!//
முடிஞ்சுடுச்சா நிரூ..
//பின்னாலிருந்து குத்துவதற்காய்
கூக்குரலிட்ட படி
கலகலவெனச் சிரித்து மகிழ்ந்தன,//
இன்று சிரிக்கவில்லையா.?
//இவை எல்லாவற்றிற்கும் நடுவில்
எங்களுக்கெல்லாம்
காதலி கிடைத்ததை
கொண்டாடி மகிழ்ந்ததாய் ஞாபகம்!//
கிடைத்த காதலியும் விட்டு போய்ட்டாளா.? மீண்டும் மலரலாம் புது காதலி..
//எங்கள் வயல்களெங்கும்
பெரு நெருப்பு
மிளாசி எரியத் தொடங்கியது,//
என்னை அங்கு கற்பனை செய்ய முடியவில்லை..
//இத்தனைக்கும் நடுவே
எங்கள் வசந்தம்
கற்பழிக்கப்பட்டது, //
நிரூ இதை எங்ஙனம் விமர்சிப்பது.?
நேற்று இதில் முழு கவனத்தை ஆழ்த்தும் மனம் என்னிடம் இல்லை.. அதனால் தான் லேட்டு.. இதை விமர்சனம் செய்யும் தகுதி எனக்கு இல்லை.. வலிகள் மாறும்..
"எரிந்து போன வயல்களில்
பயிர் செய்வதற்கு
உரமாக உறவுகளின் எலும்புகள்/"
இதை நேற்றே படித்து, பின்னூட்டமிட திராணியற்று ஓடிவிட்டேன் .வலியும் வேதனையும் புரிகிறது
"ஏதாவது மனதின் ஒரு ஓரத்தில் தோன்றும் /"
மனம் முழுதும் நிரம்பி வழியும் பிரார்த்தனை
இறைவா எம் சகோதர சகோதரிகளை நிம்மதியாக வாழ விடு
சகோ நலமா?... பதிவுக்கான மறுமொழியை நாளை இடுகிறேன் சகோ
:((((((((((((((((
:(((
இந்த கவிதையை திருப்பி வாசிச்ச வாழ்க்கை வெறுக்கும் வேண்டாம்
@துஷ்யந்தனின் பக்கங்கள்
நெஞ்சைதொடும் கவிதை அண்ணா, உலர்ந்த வார்த்தைகளால் வடித்து இருக்குறிர்கள்,
படிக்கும்போதே மனசை ஏதோ செய்யுது//
இவை தான் எங்களின் கடந்த காலங்கள் சகோ.
@FOOD
சொற்களால் சொல்லி மாளாது உங்கள் சோகம். மனம் வலிக்குது ந்ண்பரே!//
நன்றிகள் சகோ.
@♔ம.தி.சுதா♔
இதில் எந்தப் பத்தியை எடுத்து சுட்டுவது... வேண்டாம் நான் பலதை மறக்க நினைக்கிறேன்....//
சகோ நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது தானே?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஒரு கொடுங்காலத்தின் நிகழ்வுகளை அப்படியே பதிந்திருக்கிறீர்கள் நிரு! வன்னிமக்களுக்கு இவ்வளவு துன்பங்கள் இருந்தும், இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாது உல்லாச வாழ்வு நடத்தும் சில அரசியல்வாதிகளின், முகத்திரையை விரைவில் கிழித்தெறிவோம்!! //
உள்ளூரில் இருந்து நான் கிழித்தெறியப் புறப்பட்டால் என்னையே கிழிச்சுத் தொங்க விட்டிடுவாங்கள்..
ஹி..ஹி...
//வன்னிமக்களின் வாழ்வில் வசந்தங்கள் பூக்கட்டும்!!//
ஆம், சகோ, எல்லோர் நம்பிக்கைகளைப் போலவே வெகு விரைவில் வசந்தங்கள் பூக்கும் சகோ.
@விக்கி உலகம்
நாங்கள் ரத்தம் தோய்ந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் மன்னித்துவிடு நண்பா.....மறந்து விடாதே!//
இல்லைச் சகோ, உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லை, எல்லாத் தவறும் எம் அரசியல்வாதிகளையே சாரும்.
@ஜெயசீலன்
மிக ஆழமானக் கவிதை... ஈழம் என்று சொல்லும் போது... ஏனோ கண்களினோரம் ஈரம்...//
நன்றிகள் சகோ.
@Amudhavan
உணர்வின் வலியை அழுத்தமாகப்பதிவு செய்திருக்கிறீர்கள். படிக்கும்போதேயே அந்த வேதனையை உணரமுடிகிறது. நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் கவிதையின் தலைப்பு நிறையப்பேரின் கவனம் ஈர்க்கப் போடப்பட்டுள்ள தலைப்பு என்பதாகத்தான் படுகிறது. தலைப்பை மாற்றிவிடலாமே.//
இல்லைச் சகோ, தலைப்பைப் பற்றிய விளக்கங்களை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். கவிதையின் உள்ளடக்கத்திற்கு தலைப்பு பொருந்தும் எனும் காரணத்தினால் தான் இத் தலைப்பினைத் தேர்வு செய்தேன்.
நன்றிகள் சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
படிக்கும்போதே ஒருவித வலியையும், வேதனையையும் உணரமுடிகிறது ..//
நன்றிகள் சகோ.
@பாரத்... பாரதி...
இந்ததலைப்பை தவிர்த்திருக்கலாம் சகோ.. உள்ளே வருவதற்கு பயமாக இருந்தது...//
பலரின் வேண்டுகோளுக்கிணங்க, இன்று முதல் கவிதையின் தலைப்பில் கவனம் செலுத்தலாம் என்றும் தீர்மானித்துள்ளேன், நன்றிகள் சகோ.
@பாரத்... பாரதி...
துரத்தில் இருந்து பார்த்தவைகளுக்கு கவிதை வடிவம் கொடுப்பதற்கும், வல வேதனைகளை அனுபவித்தவனின் கவிதைக்கும் உள்ள வேறுபாட்டை உணர முடிந்தது சகோ. ஈழத்தின் வலி பற்றிய எங்களின் கவிதைகள் உணர்ச்சியற்றவைகளாக தெரிகிறது சகோ..//
இல்லைச் சகோ, உங்கள் கவிதைகளிலும் வீரியமும், எங்களின் அதே உணர்ச்சிகளும் தெரிகிறது. சில நேரம் உடல் மட்டும் தமிழகத்திலும், உயிர் மட்டும் ஈழத்திலும் சுவாசித்துக் கொண்டிருந்த காரணமாகவும் இருக்கலாம் அல்லவா?
@தம்பி கூர்மதியன்
/நிர்வாணத் தியேட்டரில் ஓடி முடிந்த நீலப் படங்கள்!//
முடிஞ்சுடுச்சா நிரூ..//
இல்லை...இப்பவும் ஓடிக் கொண்டிருக்கிறது.
@தம்பி கூர்மதியன்
//பின்னாலிருந்து குத்துவதற்காய்
கூக்குரலிட்ட படி
கலகலவெனச் சிரித்து மகிழ்ந்தன,//
இன்று சிரிக்கவில்லையா.?//
இன்றும் சிரித்து மகிழ்கிறார்கள் சகோ.
@தம்பி கூர்மதியன்
நிரூபன் said...
@தம்பி கூர்மதியன்
//இவை எல்லாவற்றிற்கும் நடுவில்
எங்களுக்கெல்லாம்
காதலி கிடைத்ததை
கொண்டாடி மகிழ்ந்ததாய் ஞாபகம்!//
கிடைத்த காதலியும் விட்டு போய்ட்டாளா.? மீண்டும் மலரலாம் புது காதலி..//
எல்லோரும் பல வருடங்களாக மலரும் என்று தான் சொல்லுகிறார்கள். ஆனால் அதற்கான காலப் பகுதி எப்போது என்று இன்னமும் கண்டறியப்படவில்லை.
@தம்பி கூர்மதியன்
நேற்று இதில் முழு கவனத்தை ஆழ்த்தும் மனம் என்னிடம் இல்லை.. அதனால் தான் லேட்டு.. இதை விமர்சனம் செய்யும் தகுதி எனக்கு இல்லை.. வலிகள் மாறும்..//
நன்றிகள் சகோ.
@angelin
இதை நேற்றே படித்து, பின்னூட்டமிட திராணியற்று ஓடிவிட்டேன் .வலியும் வேதனையும் புரிகிறது
"ஏதாவது மனதின் ஒரு ஓரத்தில் தோன்றும் /"
மனம் முழுதும் நிரம்பி வழியும் பிரார்த்தனை
இறைவா எம் சகோதர சகோதரிகளை நிம்மதியாக வாழ விடு//
இறைவனின் வாயினைக் கூட எங்கள் நாட்டில் அடக்கி விட்டார்கள் போலும், அதனால் தான் அவனும் பார்த்தும், பாராமலும் இருக்கிறானோ சகோதரி.
நன்றிகள்.
@ரேவா
சகோ நலமா?... பதிவுக்கான மறுமொழியை நாளை இடுகிறேன் சகோ//
நான் நலம் சகோ, நீங்களும் நலமா.
நன்றிகள் சகோ.
@சுசி
:((((((((((((((((//
கண்ணீரை மட்டுமே காலந் தோறும் சுமக்கும் படி எங்கள் வாழ்வு அமைந்து விட்டது.
நன்றிகள் சகோ.
@எல் கே
:(((//
நன்றிகள் சகோ.
@யாதவன்
இந்த கவிதையை திருப்பி வாசிச்ச வாழ்க்கை வெறுக்கும் வேண்டாம்//
இப்படி ஓர் நிலமை இனியும் வேண்டாம் என்பது தான் எல்லோரின் எதிர்பார்ப்புக்களும் நண்பா.
நன்றிகள் சகோ.
நிர்வாண தியேட்டர் தலைப்பு ஒரு கதையே சொல்கிறது
@ஆர்.கே.சதீஷ்குமார்
நிர்வாண தியேட்டர் தலைப்பு ஒரு கதையே சொல்கிறது//
சகோ, எங்கள் கடந்த கால அவலங்களை ஒரு கவிதையினுள் அடக்கி விட முடியாது. ஆனாலும் என்னால் இயன்ற வரை கவிதையினுள் பல விடயங்களைக் கொண்டு வர முனைந்திருக்கிறேன். நன்றிகள் சகோ.
என் கடந்தகால ஓட்டங்கள்,நடைகள், விழுந்து படுத்த படுக்கைகள்,உருண்ட உருளல்கள் உட்பட,சிந்திய கண்ணீர் வரைக்கும் அனைத்தும் ஞாபகம் வருகிறது.
Post a Comment