என் வலைப் பதிவிற்கு வருகை தரும் அத்தனை உள்ளங்களையும் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். blogger எனும் கூகுள் தளம் 2006ம் ஆண்டில் தமிழ் நாதம் இணையத்தளம் வாயிலாக அறிமுகமாகி இருந்தாலும் இந்த புளொக்கினை எப்படி உருவாக்குவது, இதற்கு சொந்தமாக இணையம் வேண்ட வேண்டுமா என்கின்ற அதீத சிந்தனைகளின் காரணமாக இன்று வரை எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. மாதத்தில் எப்போதாவது ஒளியருவி புகைப்படக் கடைக்கு போகும் போது மட்டும் இந்த இணையத்தினை உபயோகிப்பது பற்றி செல்வம் அண்ணாவின் உதவியுடன் கொஞ்சம் அறிந்து வைத்திருந்தேன்.
ஆனாலும் வலைப் பதிவுகளை தமிழ் நாதம் இணையத் தளம் மூலமாக பார்த்தாலும் என்னுடைய ஆக்கங்களை எழுதுவதற்கு வன்னியின் இணைய வழங்கிகளின் வேகம் ஈடு கொடுக்குமா, புதிய பெயரில் எனக்கான தளம் வாங்க வேண்டுமா எனும் கேள்விகளோடு என்னுடைய வலைப்பதிவுகள் பற்றிய எண்ணம் முடங்கிப் போனது. சிறு வயது முதலே இருந்த இலக்கியத்தின் மீதான ஆர்வமும், வானொலிகள் மீதான காதலும் தந்த உந்து சக்தி வீரகேசரி, ஈழநாதம், புலிகளின்குரல், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், தென்றல், சக்தி எப்.எம் உதயன், நமது ஈழநாடு முதலிய ஊடகங்கள் வாயிலாக அத்தி பூத்தாற் போல ஒரு சில ஆக்கங்களை வெளிக் கொண்டு வருவதற்கு அடித்தளமாக அமைந்தது.
வெளி நாட்டில் உள்ள நண்பன் சாய் அவர்களது உதவியும், என்னுடைய ஆலமரத்தடி மாலை நேர நண்பர்களின் ஊக்கமுமே என்னை இன்று இந்த வலைப் பதிவினூடாக உங்களை சந்திக்க வைக்கிறது. தற்போது கிடைக்கும் இணையத் தொழில் நுட்பமும், கணினி பற்றிய அறிவுரையும் இன்னும் ஒரு சில காலங்களுக்கு முன்னர் கிடைத்திருந்தால் போரின் துயரங்களை காலத்தின் கண்ணாடியாக ஆக்கியிருக்க முடியாதா என அங்கலாய்க்கத் தூண்டுகிறது.
கூகுள் வழங்கும் இலவச புளொக்கர் பற்றிய தகவலை கூட கடந்த வருட இறுதியில் தான் தெரிந்து கொண்டேன். இப்படி என்னைப் போல எத்தனை எத்தனை பின் தங்கிய ஜீவன்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களே? போர் எங்கள் முன்னேற்றத்தின் மீது முட்கம்பிகளை மட்டுமல்ல வெளியுலகே தெரியாத சிறை கூடங்களையும் உருவாக்கித் தந்துள்ளது.
இனி உங்களோடு இந்த வலையினூடாக என் ஆக்கங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். பள்ளித் தோழன், பால்ய சிநேகிதன் சாயின் இணைய வடிவமைப்பில் பிறந்தது தான் இந்த நாற்று. இந்த நாற்று வலைத் தளத்தின் பக்க வடிவமைப்பை அவர் தான் உருவாக்கித் தந்தார். அவருக்கு இந் நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
நாற்று இந்த பெயரினை நான் தெரிவு செய்யக் காரணம்- இணைய வலையில் வலம் வந்து கொண்டிருக்கும், பெரும் எழுத்தாளர்கள், பதிவர்கள் எனும் விருட்சங்களின் முன்னே இன்று கன்னிப் பதிவோடு வலைப் பதிவு நோக்கி வரும் நான் ஒரு நாற்று எனும் காரணத்தினால் தான். நான் இப்போது நடை பழகும் ஒரு சிறு குழந்தை. என் நடையில் தவறு இருக்கும். அதனைத் திருத்தி, தப்பாது தமிழ் எழுத வழிகாட்டுவது உங்கள் கடமை.
நாற்று: வேரோடியெங்கும் விழுது விட்டிருக்கும் பதிவர்களின் முன்னே
இணைய வலை ஏறி வரும் சிறிய காற்று.
இந்த நாற்று மேடையில் பல்வேறு விடயங்களையும் அலசலாம், எழுதலாம் என்றிருக்கிறேன். உங்களின் ஆதரவும், ஊக்கங்களும், விமர்சனங்களும் தான் இச் சிறு நாற்றினை நல்வழிப்படுத்தும்.
காலம் எனும் பெரு வெளியில் கரைந்து போகாது
வானம், வையகம் இவையிரண்டில் வாழும் வாழ்ந்து கொண்டிருக்கும்
சம்பவங்களை உள்ளடக்கி வரும் ஒரு சிறிய வலைப் பதிவு
உங்களின் ஆதரவோடு இந்த நாற்றின் பயணம் தொடரும்....
நான் இணையத்தில் தமிழ் எழுத வரும் சிறு காற்று
உங்களை இனி மகிழ்விக்கும் என் நாற்று.
என்றென்றும் உங்கள் நேசமுள்ள
நிருபன் செல்வராஜா.
|
8 Comments:
ம்ம் நடத்து.. நடத்து!!!
வணக்கம் வருக வருக என வரவேற்று எனது முதலாவது கருத்தை தெரிவித்து போகிறேன்.. இருவருக்குமிடையில் பல தொடர்பிருக்கு தனிமடலில் கதைப்போம்...
பதிவுலகத்திற்கு வரவேற்கின்றேன், உங்கள் எழுத்திற்கு அங்கீகாரம் கிடைக்க வாழ்த்துக்கள்
சாய், மதிசுதா, எப்பூடி முதன் முதல் என் வலைப் பதிவிற்கு வந்து கருத்துக்கள் இட்ட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மனதிற்குள் கருத்தரிக்கும் நினைவுகளை முறையாக பிரசவிக்க வலைப்பூக்கள் நல்ல செவிலியாக உள்ளன.
ஆக்கபூர்வமாக நீங்களும், மற்றவர்களும் பயன்படுத்தி பயன்பெற நல்வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சகோதரா...
நீ நட்ட இந்த நாற்று செழிப்பாக வளர வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள் சகோதரா...
நீ நட்ட இந்த நாற்று செழிப்பாக வளர வாழ்த்துக்கள்...!
வணக்கம். வாழ்த்துக்கள்.அருமை.தொடருங்கள்... ஹிஹி.
என்னுடைய நிலையும் இதுதான்.காசு கட்டி, பெரிய டவர் பூட்டித்தான் இணையத்தில் எழுதவேண்டுமா? என்று நினைத்தே பல நாட்களை வீணாக்கியிருக்கிறேன்.
இன்னும் எத்தனையோபேர் இப்பொழுதும் இதே மனநிலையில் இருக்கலாம்.அவ்வாறானவர்களுக்கும் சொல்லி,தெளிவுபடுத்தவேண்டியதுதான் நமது கடமை.
Post a Comment