இன்னொரு சின்ன Match விளையாடலாம்
என்று நண்பனைக் கேட்டேன்
ஆறு மணியாகுது மச்சான்
வீட்டை போக வேணும் என்றான்,
அம்மா பக்கத்திலை உள்ள
கோயிலடிக்குப் போய் வரட்டோ என்றேன்,
ஆறு மணியாச்சு, நாளைக்குப் போகலாம் என்றா
இப்போதெல்லாம் எம் மூரின்
வசந்த காற்றுக்கே ஆறு மணியானதும்
பயம் கொள்ளத் தொடங்குகிறது போலும்-
ஊர் மக்களைப் போல
அசைவற்று மௌனமாய் நிற்கிறது!
ஆறு மணியாச்சுதாம்,
மீண்டும் அதே பயம்,
போர் முடிந்து விட்டது
இனிச் சமாதானம் என்று
சந்தோசம் கொண்ட முகங்களிலெல்லாம்
ஆறு மணியாச்சாம் என்றதும்
அச்ச உணர்வு இயல்பாக வந்து தொற்றுகிறது
சங்கக் கடைக் கன்ரினடி,
சண்முகம் வாத்தியாற்றை ரியூசன் கொட்டிலடி
நாங்கள் கிறிக்கட் அடிக்கடிக்கும்
அம்மன் கோவிலடி எல்லாம்
ஆறு மணியானதும் தானாகவே வெறிச் சோடிக் கொள்கிறது
‘தம்பி மெதுவாய் கதையுங்கோடா
சத்தமாய் கதைத்தால் வெள்ளை வான்
எங்கடை வீட்டையும் வரும் என்றபடி அம்மா
பிள்ளையள் ரீவி சவுண்டை கூட்டாமல்
குறைச்சுப் போட்டுப் பாருங்கோ என்றவாறு அப்பா
வீட்டுக்கு வெளியிலை உள்ள லைற்றுக்களை
போட வேண்டாம்- இது அம்மம்மா
வீட்டிலை யாரும் இருக்கிறதா
காட்டிக் கொள்ள வேண்டாம் என மூத்த அண்ணன்- காரணம்
ஆறு மணியாச்சாம்!
மீண்டும் எங்களூர் மேகங்கள்
மாலையாகும் முன்னே
இருட்டிக் கொள்கின்றன,
காரணம் கேட்டால் ஆறு மணியாச்சாம்
என்றபடி கதையளந்து செல்கின்றன,
இப்போது எங்கள் நாட்டில் யுத்தமேதுமில்லை
ஆனால் வெள்ளை வான் பற்றிய அச்சம் மட்டும்
இன்னும் எங்கள் உணர்வுகளில்,
கடத்த வாறவங்கள் ஏன் வெள்ளை வானிலை வாறாங்கள்
கறுப்பு வானிலை வந்தால் தானே
சகுனம் நல்லாய் இருக்கும்; இப்படி
வாய் திறக்கும் அம்மம்மா
கிழவி சும்மா அலட்டாமல் இரு பாப்பம்
இஞ்சை வந்தாங்கள் என்றால் தான் தெரியும் என்று
மெதுவாய் பதிலளிக்கும் என் தங்கை
ஊர் முழுக்க நிசப்தம், நிரம்பிய அமைதி
மீண்டும் உயிர் குடிக்கும் போதையோடு
இரத்தப் பசி நிரம்பிய தெரு நாய்கள் மட்டும் வீதியில்,
மௌனங்களோடு கழியும்
இரவுகளாக யாழ் நகரத்து இராத்திரிகள்
இப்போது புலரத் தொடங்குகின்றன
அடுத்த வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டாலும்
கதவைத் திறக்க வேண்டாம்
எல்லோரும் தூங்குங்கோ
என்ற படி உறங்கச் செல்லும் அப்பா
’ஐயோ என்னட்டை ஒன்றும் இல்லை,
என்னை விடுங்கோ,
எங்களிட்டை காசில்லை எனக் கதறும்
பக்கத்து வீட்டு பரமேசு அன்ரியின்
அழுகுரலைக் கேட்டபடி
இயலாதவனாய் தூங்கப் போகிறேன் நான்....................??
|
11 Comments:
நிரூபன்...என் ஊர்க்காற்றைக் கண்டதும் ஓடி வருக்கிறேன்.காற்றில் கை அசைத்துச் சுகமாய் இருக்கவும் வேண்டிக்கொள்கிறேன் சகோதரா.
உங்கள் வரிகள் ஏன் தமிழனாய்ப் பிறந்தோம் என்கிற கேள்வியை திரும்பவும் திரும்பவும் கேட்க வைக்கிறது.இதே நேரத்தில் இங்கிருந்து 2/3 வாரத்துக்கு லீவு எடுத்து வரும் சிலர் “அங்க இப்ப நல்ல அமைதி.சனமெல்லாம் சந்தோஷமாயிருக்கு.ஆமிக்காரங்கள் நல்ல சிநேகிதமா பழகுறாங்கள்.”
இப்பிடி இப்பிடியெல்லோ இங்க கதை பரப்பிக்கொண்டு திரியுதுகள்.இப்ப எப்பிடி இருக்கிறம் எண்டு மட்டுமே யோசிச்சுக் கதைக்குதுகளோ என்னமோ எங்கட எதிர்காலம், எதிர்காலச் சந்ததி வாழ்க்கை என்ன..எப்பிடி ?
வலியில்லா வதைகளை அனுபவிக்கிறியள்.எங்கட ஊரின் பெயர்கள் மாத்துறாங்கள்.
கலாசார சீரழிவு எண்டு எத்தனை அநியாயம்....யார் தட்டிக் கேக்க.ஏதோ..சுகமா இருந்து கொள்ளுங்கோ...அதுமட்டுமே சொல்ல மனசு வருது !
ஆறு மணி ஆகிட்டுது!! எத்தனையோ நினைவுகளை மனதிற்குள் கொண்டுவருகின்றது!
வாழ்த்துக்கள்.
நெகிழ்ச்சி..... சில ஏக்கங்களுடன். கவிதை யதார்த்தம். வாழ்த்துக்கள் தொடருங்கள்
இதை படிச்சிட்டு மனசே சரி இல்லை நிருபன்...என்னாலே அந்த வலியை உணரமுடியுது..என்ன வாழ்க்கை இது..ம்ம்...
அன்பு நிரூபன்,
////
ஊர் முழுக்க நிசப்தம், நிரம்பிய அமைதி
மீண்டும் உயிர் குடிக்கும் போதையோடு
இரத்தப் பசி நிரம்பிய தெரு நாய்கள் மட்டும் வீதியில்,
மௌனங்களோடு கழியும்
இரவுகளாக யாழ் நகரத்து இராத்திரிகள்////
இந்த வரிகளைப் படிக்கும் பொழுது கிளறும் கோபமும் அடங்காமல் வெளியே வரமறுக்கும் கண்ணீரும் எழுத்தில் சொல்லிவிட முடியவில்லை. வாழும் காலம் என்பது பிரபஞ்ச வயதுகளில் மிக சொற்ப காலங்கள்தான். சுதந்திரம் இறைவன் உருவாக்கிய தூக்குக் கயிறு. இறந்தால் கிடைக்கும் என்பது ஈழவனுக்குக் கொடுத்துவிட்ட சாபம்.
அவ்வப்போது சொல்லிக் கொள்வதுண்டு,,
தயவு செய்து யாரும் தமிழராய் பிறந்து தொலையவேண்டாம் என்று!!!
வருக, வருக என என் உளம் மகிழ அனைத்துப் பதிவர்களையும் வரவேற்கிறேன், சகோதரி ஹேமா உங்களின் முதலாவதும், மிக நீண்டதுமான கருத்துரைகளுக்கு மனமார்ந்த நன்றிகள். இவ் இடத்தில் இடம் பொருள் ஏவல் பார்த்துக் கருத்துரைக்க வேண்டும் எனும் இலக்கிய மரபிற்கமைவாகவும், எம் முன்னோர் வாக்கிற்கமைவாகவும் என்னால் இவற்றை மட்டுமே சொல்ல முடியும்.
’தட்டிக் கேட்க ஆளில்லா இடத்தில்.... சண்டப் பிரசண்டனாம். இவ் மொழியை இவ் இடத்தில் நினைவூட்டுவதுடன் எங்களின் காலங் கடந்த ஞானத்தையும் நினைத்து நாங்கள் இப்போது வெட்கித் தலை குனிகிறோம் என்பதை மட்டும் தான் என்னால் இயம்ப முடிகிறது.
மேலும் கருத்துரைக்க என் தோழர்களனா ஜனா, றமேஸ், ஆதவா ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
காலத்தை கண்ணடி போல் பிரதிபலிக்கிறாய்!!!
ஆறு மணி ஆனதும் முதுகு கூசும் அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்து அவசரமா வீட்ட போன கால்லாம் திரும்பி வந்திடுது
6 மணி என்றதுமே பல நினைவுகள் வரகிறத உண்மை தான்..
கடைசிப் பந்தி அற்புதம். வாழ்த்துக்கள்.
Post a Comment