போர் ஒரு வரலாற்றை அழித்து, இன்னோர் வரலாற்றை நிலை நிறுத்தப் பயன்படுத்தும் உத்தியாக உலக நாடுகளில் எங்கோ ஓர் முலையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் ஓர் பரிணாமம் தான் ஈழ மக்கள் வாழ்வினையும் ஈழப் போர் எனும் வடிவில் திசை மாற்றியிருக்கிறது. இந்தப் போர் பல உயிர்களைத் தன் பசிக்கு இரையாக்கியிருக்கிறது.
தாமாக விரும்பிப் போரில் ஈடுபட்டு இறந்தவர்கள்,
காலத்தின் கட்டாயத்தினால் போரில் தம்மையும் இணைத்துக் கொண்டோர்,
கட்டாய ஆள் சேர்ப்பினால் போரில் இணைத்துக் கொள்ளப்பட்டோர்,
கண் மூடித்தனமான, கோரமான தாக்குதல்களினால் போரில் கொல்லப்பட்டோர்,
இனவாதம் எனும் அடிப்படையில், ஒரு இனத்தினைப் பூண்டோடு அழிக்க வேண்டும் எனும் ஆணவத்தினால் கொல்லப்பட்டோர்,
எனப் இவ் ஈழப் போரில் உயிரிழந்தோரைப் பலவாறாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.
ஈழப் போரில் ஓர் சந்ததியின் விடுதலை நோக்கிய பயணத்தினை வேரோடு அறுக்க வேண்டும் எனும் நோக்கத்தின் காரணத்தால் இனம் தெரியாத முகமூடி மனிதர்களாலும், கண் மூடித்தனமான குண்டு வீச்சினாலும் கொல்லப்பட்டோர் தொகை தான் அதிகமாக இருக்கிறது. இந்தத் தொகை தான் இதுவரை சரியாகவும் கணக்கெடுக்கப்படாமல் இருக்கிறது.
தமிழர்கள் எனும் நாமம் கொண்ட அனைவரும், போர் என்னும் கொடிய அரக்கனின் கோரப் பசிக்கு இயல்பாகவே ஆளாகினார்கள். கண் முன்னே ஓர் உயிரினைக் கொல்வதும், ஏனையோரைப் பார்க்க வைத்து - அவர்கள் யாவரும் இதே வழியினை வருங் காலத்தில் பின்பற்றக் கூடாது எனும் நோக்கிலும் கதறக் கதறத்- துடிக்கத் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட பலரது எண்ணிக்கை இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை.
ஓர் போர் இடம் பெறும் பகுதியில். இன்றோ, நாளையோ நாம் உயிரோடு இருப்போமா அல்லது இல்லையா எனும் அச்ச உணர்வோடு வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பது அதனை அனுபவித்தவர்களுக்கே தெரியும். இந்தப் போரின் காரணமாக, பெற்றோரை- சகோதர்களை இழந்தோர், உடல் உறுப்புக்களை இழந்தோர் நடைப் பிணமாக, தேற்றுவார் இன்றி வாழ்வது தான் இன்றைய ஈழப் போர் எம்மிடம் விட்டுச் சென்ற எச்சமாக இருக்கிறது.
போர் இடம் பெற்ற பகுதிகளில் மீன் பிடித் தொழிலினைத் தம் ஜீவனோபாயமாக மேற் கொண்ட மீனவர்களின் வாழ்க்கை முறை எந் நாளுமே அச்சத்திற்குரியதாக இருந்திருக்கிறது. இரவில் கடலுக்குச் செல்வோர், மறு நாள் உயிரோடு திரும்புவார்களா எனும் அச்சம் இருந்த போதிலும், உயிரைப் பணயம் வைத்துப் பலர் மீன் பிடித் தொழில் மேற்கொண்டு தம் வாழ்க்கையினை நகர்த்தியிருக்கிறார்கள்.
இரவில் கடலுக்குச் சென்ற தன் தந்தை மறு நாள் காலையாகியும் திரும்பி வராது, கொல்லப்பட்டு விட,
தந்தை மீண்டும் வருவார் எனும் ஆதங்கத்தோடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கும் சிறுவர்களின் வாழ்வின் வலிகளை, யதார்த்த நிலமையினை, அவர்களின் மனங்களில் படிந்துள்ள எதிர்பார்ப்புடன் கலந்த எண்ண அலைகளைத் தாங்கித் தான் பெரும்பாலான தமிழ்ச் சிறுவர்களின் கடந்த கால வரலாற்று வாழ்க்கையானது நகர்ந்திருக்கிறது.
ஈழப் போர் விட்டுச் சென்ற தடயங்கள் எம் இனத்தின் மத்தியில் பல்வேறு வடிவங்களில் புதையுண்டு போயிருக்கின்றது. இழந்து போன வாழ்வினை மீளக் கட்டியெழுப்பி, மீண்டும் எம் பசுந் தேசங்களில் நடை போடலாம் என்று நினைக்கையில்- எங்கள் வயல்களெங்கும் தடயங்களாக இறந்த உயிர்களின் எலும்புகள் போடப்பட்டிருப்பது தான் நினைவிற்கு வந்து போகிறது.
இந்தத் தடயங்களை அழித்துப் புதிய தோர் வாழ்வினை மீளக் கட்டியெழுப்புவதற்கான திரு நாள் மீண்டும் வாராதா என்று தான் மனம் ஏங்கித் தவிக்கிறது.
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
போரின் கொடூரத்தால், தன் தந்தையின் அரவணைப்பினைத் தொலைத்த பிஞ்சு மனம் ஒன்றின் ஏக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் நிறைந்த உள்ளத்து உணர்வுகளைக் கவிதையாக்கிப் பாடலாகக் கோர்த்திருக்கிறார் கவிஞர் துளசிச் செல்வன் அவர்கள்.
அப்பாவே பாரதி போல மீசை வைச்ச அப்பாவே.... எனத் தொடங்கும் அப் பாடலின் பாடல் வரிகளையும், பாடலையும் உங்களுக்காக இங்கே இணைத்துள்ளேன்.
பாடல்: அப்பாவே பாரதி போல மீசை வைச்ச அப்பாவே..
பாடியவர்: குட்டிக்கண்ணன்
பாடல் வரிகள்: துளசிச் செல்வன்
பாடலுக்கு இசை: சிறீகுகன்
‘அப்பாவே பாரதி போல மீசை வைச்ச அப்பாவே
எப்போதும் நீயிருக்க ஆசை வைச்சேன் அப்பாவே
துப்பாக்கி போல் மனசு தூங்காமல் விழித்திருக்கும்
எப்போதும் உம் நினைவு கற்பனையில் விழித்திருக்கும்
(அப்பாவே பாரதி......)
மீசையிலே இழுத்து நெஞ்சு மயிர் பிடிச்சு
தோளிலே தூங்கியாட நானும் நினைச்சேன்
கடலினில் கேட்ட வெடியினால் துடித்து
கரையில் இருந்து நானும் பாடித் தவிச்சேன்!
(அப்பாவே பாரதி......)
பட்ட மரம் தானே கட்டு மரங்கள்
கட்டு மரம் மேலே பூத்த ஸ்வரங்கள்
வெட்டுப் பட்டுத் தானே ஓடும் சின்ன மரங்கள்
வெட்டுப் பட்டுத் தானே வாடும் சின்ன மரங்கள்
முட்டி மோதித் தந்ததாரு சோக வரங்கள்
சின்ன வயசில் நான் என்ன செய்தேன்
எந்தன் சிரிப்பை அவர்கள் ஏன் கொள்ளை செய்தார்
(அப்பாவே பாரதி...)
கடலினில் தானே எந்தன் கண்கள்
கண்ணுக்குள் வாழும் வற்றாக் கடல்கள்
உடலைக் கூடக் கண்ணில் நான் காணவில்லையே
கரையில் மீன்கள் வந்து கதை பேசவில்லையே
நாளைக்கு கடல் எங்கள் கையில் சேரும்
உந்தன் மேனிக்கு அலை வந்து பூக்கள் போடும்
(அப்பாவே பாரதி போல....)
’’சின்ன வயசில் நான் என்ன செய்தேன்
எந்தன் சிரிப்பை அவர்கள் ஏன் கொள்ளை செய்தார்... எனும் உணர்வுகளோடு இன்றும் ஈழத்தில் வாழும் பிஞ்சு மனங்களின் உணர்விற்கான பதிலை யார் தான் சொல்லப் போகிறார்களோ!!!
இப் பாடலைப் பாடிய குட்டிக் கண்ணன் அவர்களும் இன்றும் உயிரோடு இல்லை.....
|
1 Comments:
புதியதோர் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் இனிய திருநாள் விரைவில் வரும் நண்பா....
Post a Comment