ஈழப் போர், பல துயரங்களை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் விடை காண முடியாத வினாக்களின் எச்சங்களாக எம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறது. ஈழப் போர்ச் சூழலில் வாழ்ந்த வயதானவர்களிடம் கூட, சில காட்சிகளை, சில கொடூரங்களைத் தாங்குகின்ற சக்தி இல்லாத போது, சிறியவர்களிடம் எப்படி இக் கொடூரங்களைத் தாங்கிக் கொள்கின்ற பக்குவம் வந்திருக்கும்? ஈழப் போரில் தம் கனவுகளை, எதிர்காலத்தைத் தொலைத்த பல மனிதர்களுள், சிறுவர்கள் தான் தம் வாழ் நாள் முழுவதும் ஆற்றுப்படுத்த முடியாத வடுக்களைத் தாங்கியவாறு இன்றும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஈழத்தின்(இலங்கையின்) வட கிழக்குப் பகுதிகளை அடிப்படையாக வைத்து வெளியாகிய பல குறும்படங்கள் போராட்டத்திற்கான பிரச்சாரக் கருத்துக்களைத் தம் மையக் கருத்தாகக் கொண்டிருந்தாலும், அத்தி பூத்தாற் போல, ஒரு சில படங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை, ஓர் இனத்தின் மீது போர் விட்டுச் சென்ற சாபங்களைத் தம் உள்ளக் கருத்தாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன.
வன்னிப் பகுதியில் வாழ்கின்ற பெரும்பாலான நடுத்தரப் பொருளாதார வர்க்கத்தினைச் சேர்ந்த குடும்பங்களின் ஜீவனோபாயத் தொழில் வயல் விதைப்பு, விறகு வெட்டி விற்றுச் சந்தைப்படுத்துதல், கடற்றொழில், விவசாயம் முதலியவையாகும். அன்றாடங்க் காய்ச்சிகளாகத் தம் காலத்தினைக் கடத்தும் ஒரு குடும்பத்தில் வாழுகின்ற சிறுமிக்கு, சமூகத்தில் உள்ள ஏனைய பெண் பிள்ளைகளைப் போன்று ஆசா பாசங்கள் இருப்பது இயல்பான ஓர் விடயம்.
ஆனால் பொருளாதாரச் சூழ் நிலைகளின் காரணமாகத் தன் ஆசைகளை நிறைவேற்றி விட முடியாது, அக் குழந்தையின் மன உணர்வுகள் எவ்வளவு பாடுபடுமென்பதையும், சிறுகச் சிறுகப் பணம் சேர்த்துத் தன் நீண்ட நாள் கனவினை நிறைவேற்றப் போகும் வேளையில்; மிதிவெடியில் கால் வைத்து தன் ஒரு காலினை இழந்த பின்னர் கனவுகளைக் காற்றில் பறக்க விட்டு, மனதில் உள்ள நினைவுகளோடு வாழுகின்ற சிறுமியின் உணர்வுகளைத் தாங்கி வெளிவந்திருக்கின்ற படம் தான் செருப்பு.
ராஜ்குமாரின் தயாரிப்பில். கௌதமனின் எண்ணம்-எழுத்துருவாக்கம் இயக்கத்திலும்,
ஞானதாஸின் இணைத் தயாரிப்பிலும்,
முரளியின் இசையிலும் வெளிவந்திருக்கும் படம் தான் ‘செருப்பு’.
கௌரி, பிரகலதா, வினோத், செல்லையா, டிலானி, ஆகியோர் ஈழத்து மண் வாசனையோடு கூடிய உணர்வின் மூலம் இக் குறும்படத்திற்கு உயிர்ப்பளித்துள்ளார்கள். விறகு வெட்டித் தன் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையினைத் தாங்கிக் கொள்ளும் தந்தை, அவருக்கு ஆதரவாய் இருக்கும் இல்லத்தரசி, தன் பிஞ்சு வயசுக்கேயுரிய கனவுகளோடு நடைபோடும் சிறுமி, அன்றாடங்காய்ச்சிகளாய் வாழும் இக் குடும்பத்திற்கு கடனாகச் சிறு தொகைப் பணத்தினைக் கொடுத்து விட்டு, அடிக்கடி கேட்டு நச்சரிக்கும் நாயகனின் நண்பன் இவர்களை வைத்து, தனது உயிர்ப்புள்ள, உணர்வின் வரிகள் பேசும் கதையினை நகர்த்தியுள்ளார் இயக்குனர் கௌதமன்.
இராணுவத்தினரால் தம் நிலப் பகுதி களவாடப்பட்ட(கைப்பற்றப்பட்ட) பின்னர், மீண்டும் தமது ஊர் புலிகளிடம் வந்து கொள்ள அங்கே சென்று குடியேறித் தமது வாழ்க்கையினை நகர்த்தத் தொடங்கும் ஓர் குடும்பத்தின் உணர்வுகளோடு காட்சிகள் விரிந்து கொள்கிறது. போர்ச் சூழலிலில், (புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்) வாழ்ந்த மக்கள் மீது இலங்கையின் அரச தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த பொருளாதாரத் தடையனாது, பல அத்தியாவசியப் பொருட்களை புலிகள் கட்டுப்பாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாத ஒரு சூழலினை ஏற்படுத்தியிருந்தது.
இத்தகைய சூழ் நிலையின் போது எமக்கு ஏதாவது ஆடம்பரப் பொருட்கள் தேவைப்படும் பட்சத்தில் யாராவது இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதியான தென்னிலங்கைப் பக்கம்(இலங்கையின் தலை நகர்ப் பக்கம்) செல்லுவோரிடம் சொல்லித் தான் எம் ஆசைப் பொருட்களை அதிஷ்ட ரேகை நம் பக்கம் இருக்கும் பட்சத்தில் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தன் பள்ளித் தோழி ஒருத்தி அழகிய செருப்பினை அணிந்திருப்பதனைப் பார்த்து, அவளிடம் எங்கே வாங்கினனீ? என்று ஆவலுடன் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நோக்கில் வினாவினைத் தொடக்க
‘என் மாமா கொழும்பிற்குப் போகும் போது வாங்கி வந்தது’ என்று சொல்லி, வறிய பொருளாதாரச் சூழலில் தன் காலத்தினைக் கடத்தும் சிறுமியின் கனவில் கைக்கெட்டாத கனவினை செருப்பு எனும் ஆசையாக விதைத்து விடுகிறாள் அவளின் பள்ளித் தோழி.
தந்தையார் விறகு வெட்டி விட்டு வீடு வரும் ஒவ்வோர் இரவும், அவரிடமிருந்து இரண்டு ரூபாய்க் குற்றிகளை வாங்கித் தன் தேங்காய் உண்டியலில் போட்டுச் செருப்பு வாங்குவதற்காகச் சேமித்து வைக்கும் பிஞ்சு மனம், தன் உண்டியலை எடுத்துப் பார்த்து,
‘இது எப்போது நிறைந்து கொள்ளும்’ எனும் ஏக்கம் கலந்த பார்வையினை வெளிப்படுத்தும் காட்சியானது வரும் சமயத்தில் உணர்வுள்ள அனைவரின் கண்களிலும் நீர் சொரியப் போவது நிச்சயம்.
கொடுத்த கடனை வாங்குவதற்காக வீடு தேடி வந்து நச்சரிக்கும் கடன்காரனின் செயற்பாடுகள், செருப்பு வாங்கி என் காலில் போட்டு அழகு பார்க்க மாட்டேனா என எண்ணும் சிறுமியின் உணர்வில் மண் தூவிச் செல்கின்றது.
காலுக்கு மருதாணிக் கோலமிட்டு அழகு பார்க்கும், சிறுமியின் உள்ளம்,
தன் தாயிடம்
‘அம்மா அப்படியே இந்தக் காலுக்கு ஒரு செருப்பு வாங்கிப் போட்டால் எப்படி இருக்கும்’ எனக் கேட்பதும்,
‘அப்படியே ஒரு கால் கொலுசும் வாங்கிப் போட்டால் எப்படி இருக்கும்? என்று அடுத்த வினாவினை முன் வைக்க,
தன் மகளின் ஆசையினை நிறைவேற்ற முடியாதவளாய் அந்தத் தாய் பார்க்கும் பார்வை இருக்கிறதே.. அதனைத் தாங்கிக் கொள்ளும் சக்தி உள்ளவர்கள் மாத்திரம் இந்தப் படத்தினைப் பார்க்க நுழையுங்கள்.
நீண்ட நாட்களாகச் செருப்பு வாங்கி அணிவிப்பதற்காகச் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தினைச் சந்தைக்குப் போகும் தந்தையிடம் கொடுத்து விட்டு, தன் தந்தையின் வரவினை எதிர்பார்த்துக் காத்திருந்து, அவர் வரும் வழியில் அவரை வழிமறித்து, தன் புதுச் செருப்பினை அணிந்து பார்க்க வேண்டும் எனும் ஆவலில் செருப்புப் பற்றிய கனவுகளோடு; மனதில் மகிழ்ச்சி பொங்க போர்ச் சூழல் காரணமாக கைவிடப்பட்ட காணியினூடு ஓடிச் செல்லும் சிறுமியின் காலினை மிதிவெடி பதம் பார்க்கின்றது. மிதிவெடியில் கால் வைத்து தன் ஒருகாலை இழந்த சிறுமி....இறுதி வரை செருப்பினைத் தன் இரு கால்களிலும் அணிந்து அழகு பார்க்க முடியாதவாறு ஏக்கங்களோடு நகரப் போகும் வாழ்க்கையினைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது செருப்பு.
இன்றும் போர்ச் சூழலின் பின்னரான ஈழத்தில் பல சிறுமிகள் தம் உடல் அவையங்களை இழந்து அங்கவீனர்களாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகின்றோம்?
பின்னணி இசையினை முரளி அவர்கள், வேண்டிய இடங்களில் ஏற்ற இறக்கங்கள் கொடுத்து, மென்மையான இசை கலந்து படத்திற்கேற்றாற் போல வழங்கியிருக்கிறார். ஈழத்தின் இடிந்து போன கட்டங்களையும், செம்புழுதித் தெருக்களின் தடம் மாறாத ஒற்றையடிப் பாதையினையும் காட்சிப்படுத்திக் காட்சியமைப்பினை கதை நிகழ் களத்திற்கேற்றாற் போல, நகர்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
செருப்பு: ஈழத்தின் இன்னல்களினூடே, தம் கனவுகளைத் தொலைத்த பிஞ்சு உள்ளமொன்றின் உணர்வுகளைச் சொல்லுகின்ற உயிர்ச் சித்திரம்.
மனதில் உணர்வுகளைத் தாங்கும் சக்தியுள்ளோர் மாத்திரம் இப் படத்தினைப் பார்க்கவும்.
15 நிமிடங்கள் நேர அளவை கொண்ட இக் குறும் படத்தினைப் பார்க்க,
இவ் இணைப்பினூடாகச் செல்லவும்.
|
11 Comments:
காலை வணக்கம் நிரூபன்!விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது எனினும் உங்கள் எச்சரிக்கை வேண்டாமே என்கிறது.முன் பகுதியையாவது பார்ப்போம்.
இயக்குநர் கௌதமன் மற்றும் குழுவினர்க்கு எமது வாழ்த்துகளும், வந்தனங்களும்..
ஈழம் பற்றிய கதைகளை கேட்பதற்கும், காணொளிகளை பார்பதற்கும் அசாத்திய மனதைரியம் தேவைப்படுகிறதே சகோ?
Enna meel pathivaa
படம் பார்த்துப் போட்டேன் நான் போனாவாரம்
உங்கட ஒளியுற்று வலையில் தான் .. ...மனசு ரொம்ப ரொம்ப கனத்துப் போச்சி ...
@Yoga.S.FR
காலை வணக்கம் நிரூபன்!விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது எனினும் உங்கள் எச்சரிக்கை வேண்டாமே என்கிறது.முன் பகுதியையாவது பார்ப்போம்.
//
பாருங்கள் ஐயா..
உணர்வுடன் ஒன்றித்தால் பிரச்சினை! கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி மீளவும் பாருங்கள்!
@பாரத்... பாரதி...
இயக்குநர் கௌதமன் மற்றும் குழுவினர்க்கு எமது வாழ்த்துகளும், வந்தனங்களும்..
//
நன்றி பாரதி அண்ணா
@பாரத்... பாரதி...
ஈழம் பற்றிய கதைகளை கேட்பதற்கும், காணொளிகளை பார்பதற்கும் அசாத்திய மனதைரியம் தேவைப்படுகிறதே சகோ?
//
உண்மை தான் நண்பா.
@yathan Raj
Enna meel pathivaa
//
அடப் பாவி...மாட்டிக்கிட்டேனா?
இது ரீமேக்கு!
@கலை
நன்றி சகோதரி
எம் மக்களின் வாழ்க்கை நீரோட்டங்களை வெளிக்கொணரும் குறும்படங்கள் வரவேற்கத்தக்கவை.. இந்த பதிவினூடு வெளிப்படுத்தியமைக்கு நன்றி நிரூ
Post a Comment