ஈழப் போரியல் வரலாற்றில் முதன் முறையாக கள முனைச் செய்திகளை நேரடியாகத் தொகுத்து வழங்கும் நோக்கில் தமீழ விடுதலைப் புலிகள் நேரடி ஒலிபரப்பினை, முழு நேர போர்க் காலச் சிறப்பு வானொலி ஒலிபரப்பினைச் செய்த காலப் பகுதி அது. ஆம் 1999ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் மூன்று படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, கள முனைச் செய்திகள் புலிகளின் குரல் வானொலியின் போர்க் காலச் சிறப்பு ஒலிபரப்பினூடாக உடனுக்குடன் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. என்ன தான் சிறப்பு ஒலிபரப்பினூடாகச் செய்திகளைக் கேட்டாலும், மனம் அடங்குமா? இரவாகி விடிந்து எழும்பும் போது நள்ளிரவில் என்ன நடந்திருக்கும் என்பதனை அறிய மனம் ஆவல் கொண்டது.
அதிகாலை 5.30 மணிக்குப் பின்னர் வானொலிப் பெட்டியின் அலை வரிசையினைத் திருகிக் கொண்டிருந்தேன். சிற்றலை வரிசையில் (SW) ஓர் வானொலி ஒலிபரப்பு என் சிந்தையினைச் சிதறடித்தது. தூய தமிழில் போர்க் காலச் செய்திகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்த நாள் எப்போது அறிய வேண்டும் எனும் தேவை அப்போது என்னுள் உருவாகவில்லை. நாட் குறிப்பிலும் குறித்து வைக்க வேண்டிய தேவை எனக்கு எழவில்லை. ஆதலால் வானொலியை மாத்திரம் கேட்பதில் கவனம் செலுத்தினேன். "அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ் - உறவுப் பால நிகழ்ச்சிகள்" எனும் அடை மொழியோடு என்னுள் அந்த வானொலிச் சேவை ஒட்டிக் கொண்டது.
அது தான் "International Broadcasting Corporation Tamil" எனும் ஆங்கிலப் பதம் கொண்டதாகவும் தமிழில் சுருக்கமா IBC Tamil என அழைக்கப்படும் வானொலியாகவும் பிற் காலத்தில் தமிழர்களிடையே பிரபல்யம் பெற்றிருந்தது. அக் காலத்தில் காலையில் எழுந்ததும் காலை 5.30 நிமிடங்கள் ஆகிறது என்றவுடன் சிற்றலை ஒலிபரப்பில் ஐபிசி தமிழைக் கேட்டிட மனம் ஆவல் கொள்ளும். மிகவும் தெளிவான, வழுவற்ற தமிழ் உச்சரிப்பு. கம்பீரம் நிறைந்த அறிவிப்பாளர்கள் குரல் என ஓர் ஒரு மணி நேரச் சிற்றலை ஒலிபரப்பினூடாக என்னுள் ஒட்டிக் கொண்டது ஐபிசி.
காலையில் "அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ் - International Broadcasting Corporation Tamil" என்ற நிலைய கலையக இசையுடன் ஆரம்பமாகும் ஒலிபரப்பு, பின்னர் "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும், எடுத்த காரியம் யாவினும் வெற்றி எனக் கூறி" , ஐபிசி என நிறைவிற்கு வரும். அதன் பின்னர் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பார்கள். பிரித்தானியாவில் 24 மணி நேரமும், லண்டனிலிருந்து அஷ்ராப் செய்மதி வாயிலாக இலங்கை இந்திய, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஒலிபரப்பாகும் ஐபிசி தமிழின் உறவுப் பால நிகழ்ச்சி இது எனும் S.K.ராஜனின் குரலும், அதனைத் தொடர்ந்து அறிவிப்பாளர் S.P.ஈஸ்வரதாசனின் குரலும் கணீரெனக் காதுகளில் தேன் பாய்ச்சும்.
அறிவிப்பாளர்கள் S.K.ராஜன், S.P.ஈஸ்வரதாசன், செல்லத்துரை நாவரசன், கௌசி ரவிசங்க, பராபிரபா, எனப் பல திறமையான அறிவிப்பாளர்கள் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்கள். காலையில் உறவுப் பாலச் செய்திகளும், அதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து அப்துல்ஜபார் வழங்கும் இந்தியக் கண்ணோட்டமும், ஆய்வாளர் தராகி சிவராம், அல்லது இக்பால் அத்தாஸ் வழங்மும் அரசியல் ஆய்வும் ஒவ்வோர் நாளும் தவறாது ஒலிபரப்பாகும். ஊரோடு உறவாக, மாவீரர் கானம், மாவீரர் நினைவு என காலத்திற்கேற்றாற் போல பல தரமான செய்திகளை தாயக கள நிலவரங்களை உணர்ந்து ஐபிசி தமிழ் உறவுப் பாலம் எனும் நிகழ்சியூடாகப் பகிர்ந்து வந்தது.
செய்திகளில் இலங்கை வானொலி வரலாற்றிலும் சரி, ஈழத்திற்காக ஒலித்த வானொலி வரலாற்றிலும் சரி, தமிழர்களின் வானொலி வரலாற்றில் BBC தமிழோசைக்கு அடுத்த படியாக நேரடித் தொலைபேசிச் செய்தி அறிக்கையினையும், நேரடிக் கருத்துப் பகிர்வுகளையும் அறிமுகப்படுத்திய பெருமை ஐபிசி தமிழையே சாரும். வவுனியாவிலிருந்து கனகரவி, மட்டக்களப்பிலிருந்து ஜி.நடேசன், வன்னியிலிருந்து விவேக், யாழ்ப்பாணத்திலிருந்து நிமலராஜன் என ஐபிசி தமிழிற்கு ஈழத்திலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட நேர்த்தியான செய்திகளைப் பல ஊடகவியலாளர்கள் வழங்கியிருந்தார்கள்.
ஈழத் தமிழர்களின் வரலாற்றில் முதன் முதலாக புலிகளின் குரல் வானொலியின் செய்தியறிக்கையினை அகிலமெங்கும் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் கேட்கும் வண்ணம் ஒலிபரப்பிய பெருமையும் ஐபிசி தமிழினையும், அதன் உறவுப் பால நிகழ்ச்சியினைப் படைத்த அறிவிப்பாளர்களையுமே சாரும். ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக ஒரு மணி நேர உறவுப்பாலம் எனும் ஒலிபரப்பினூடாக ஈழம், மற்றும் இந்தியாவில் வாழ்ந்த மக்களின் இதயங்களில் ஐபி தமிழ் குடி கொண்டிருந்தது. ஆரம்ப காலத்தில் அதிகாலை 5.30 தொடக்கம், 6.30 மணி வரை ஒலித்த உறவுப் பால நிகழ்ச்சி பிற் காலத்தில் "சூரிச் மாநகர சிகரம் வாணிப நிலையத்தாரின்" விளம்பர அணுசரணையுடன் இரவு 08.30 மணிக்கு அரை மணி நேரச் செய்தியறிக்கையினையும் தாங்கி வந்தது.
2008ம் ஆண்டின் பின்னர் ஐபிசி தமிழின் உறவுப் பாலத்தை கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றைய காலத்தில் உறவுப் பாலமெனும் நிகழ்ச்சி முற்று முழுதாக நிறுத்தப்பட்டு விட்டதாக நண்பர்கள் கூறக் கேட்டேன். ஆனாலும் இன்றும் பிரித்தானியாவிலிருந்து அகிலமெங்கும் 24 மணி நேர ஒலிபரப்பாக ஐபிசி தமிழ் இணையமூடாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. பிரித்தானியாவில் Narrow Band ஊடாகவும் தமிழர்களின் இல்லமெங்கும் ஐபிசி தமிழ் ஒலித்துக் கொண்டிருக்கிறது. போர்க் காலத்தில் இலங்கை, இந்திய மக்களிடையே தாயகச் செய்திகளைப் புலத்திலிருந்து தரமான செய்தித் தொகுப்பாகத் தொகுத்து தந்த பெருமை, ஐபிசி தமிழையே சாரும்.
தமிழர் தாயக நிலமைகளைத் தெளிவுற உரைத்த காரணத்தினால் ஐபிசி புலிகளின் ஊது குழல் என இலங்கையின் அரச ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஐபிசித் தமிழும் சமாதான காலத்தில் உறவொலி என்றோர் இசைத் தட்டினை வெளியிட்டுத் தன்னைத் தூற்றும் நபர்களை ஆச்சரியப்பட வைத்தது. ஐபிசி தமிழின் பணி மேலும் தொடரட்டும்!
உறவுகளே..இந்தப் பதிவின் எழுத்து நடையில் ஓர் கொஞ்சம் வேறுபாடு உள்ளது. அது என்ன என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
|
24 Comments:
வணக்கம்,நிரூபன்!அந்த ஐ.பி.சி இப்போ........................சீ...வேண்டாம்.என்ன பெரிய எழுத்து நடை வேறுபாடு?அறுத்துறுத்தி ஈழ நடை(நடை என்ன பெரிய நடை,சிவாஜி,ரஜனி யிடம் பார்க்காத நடையா?,ஹி!ஹி!ஹி!)யில் எழுதியிருக்கிறீர்கள்!
ஐபீசியின் சேவை இன்றைய காலத்தில் முக்கிய மாக ஐரோப்பிய வானொலி நேயர்களை இன்றும் நேசிக்க வைக்கின்றது அதுவும் பாராபிரபாவின் குரல் ஒரு இனிமையானது!
உண்மையில் இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சியை முதலில் அறிமுகம் செய்தவர்கள் நான் அறிந்த வகையில் சகோதர மொழி வானொலி சிரச வாகும் அதன் பின்பு அவர்களின் சக வானொலி சக்தி அவுஸ்ரேலியா ,மற்றும் கனேடியா கீதம் வானொலியோடு தாயகத்துக்கு உறவுப்பாலம் போட்டார்கள் அப்போது ஞாயிறு மாலையில் இலங்கை நேரம்6 மணியில் இருந்து செய்தார்கள் லோசன், ரவூப் இதனை தொகுத்தார்கள் துரதிஸ்ரம் பின் நிறுத்திவிட்டார்கள்!
அவுஸ்ரேலியாவில் இருக்கும் வானொலியோடு சக்தி உறவுப்பாலம் அன்நாட்களில் தாயக உறகளை பலரை இணைய வைத்தது நிஜம்!
சூரியன் எப்.எம் கூட இந்த உறவுப்பாலத்தைச் செய்து இருந்தது வெள்ளையன் ,முகுந்தன் என அதில் அழைப்பை இணைத்து நேயர்ளை உள்வாங்கிய நிகழ்ச்சி அதன் பின்பு தான் ஐபீசியின் பார்வை இவர்களின் வடக்கு நோக்கி இருந்து இருக்கும் என நான் நினைக்கின்றே்ன்! நிரூபனே! நான் கேட்ட வகையில்!
உறவுப்பாலம் பலரை நேசிக்க வைத்தது என்பது நிஜம் அதன் உணர்ச்சிகள் வார்த்தையில் வடிக்க முடியாது ! துரதிஸ்ரம் இப்போது அதிகம் இணைய் வானொலிகள் வரவு ஐபீசியின் சில ஊதுகுழல் நிகழ்வால் பலர் கேட்காமல் விட்ட நிகழ்வையும் மறுப்பதற்கு இல்லை!
நிரூபனின் எழுத்து நடை மாற்றக்கூடாது! இப்படித்தான் அவரின் எழுத்து இருக்கும் என்று தெரிந்த பின் மாற்றச் சொல்வது சினிமா பாணியாகும்!ம்ம்ம்
@Yoga.S.
வணக்கம் யோகா ஐயா,
நலமாக இருக்கிறீர்களா?
நல்லதை மட்டும் சொல்லியிருக்கிறேன். கெட்டவற்றை இன்னோர் பதிவில் சொல்கின்றேன்.
எனக்கு இந்த ஊதுகுழல் வேலை எல்லாம் தெரியவரவில்லையே... என்ன பண்ண?
@தனிமரம்
அருமையான வரலாற்று நினைவூட்டலுக்கு நன்றி சகோதரா,
தொடக்க காலத்தில் இன்பத் தமிழ் ஒலி பாலசிங்கம் பிரபாகரனும், சக்தி வானொலியும் இணைந்து உறவுப் பாலம் எனும் நிகழ்ச்சி செய்தார்கள்.
பின்னர் சின்னப்பூ எனும் நிகழ்ச்சியும் சக்தியில் வலம் வந்தது.
வணக்கம் நிரூ.எழுத்துநடையில் ஒரு ஒழுங்கும் அழகும் பிசிறில்லா வார்த்தைகளும் மாறித்தானிருக்கிறது.நீங்கள்தான் எழுதியிருக்கிறீங்கள்.வேறு யார் !
ஐபிசி தான் நான் சுவிஸ் வந்த காலத்திலிருந்து என் உயிர்தோழிபோல தோழன்போல மொத்த உறவுமே அவன்தான் என்பேன் எனக்கு.
நான் அறிந்தவரை ஐபிசி யில் சுமதி சுரேசன்,யசோதாவும் முக்கியமானவர்கள்.மற்ற எல்லா அறிவிப்பாளர்களையும் ஞாபகப் படுத்திய நீங்கள் ஐபிசி வானொலியை...நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த ஏ.சி.தாசீசியஸ் அவர்களை நிச்சயமாக நினைவில் கொண்டு வந்திருக்கவேண்டும்.ஏன் தவறவிட்டீர்களென்று
தெரியவில்லை !
நாடகத்தின் தந்தையினை உறவுப் பாலம் நிகழ்ச்சியினுள் சேர்க்க வேண்டிய தேவை இல்லை என நினைத்து எழுதவில்லை அக்கா.
ஐபிசி தமிழின் வரலாறு எழுதுமளவிற்கு எனக்கு ஐபிசியின் அனைத்து நிகழ்ச்சிகளும் பரிச்சயம் இல்லை.
நான் ஐபிசியில் பத்தாண்டுகளாக கேட்ட உறவுப் பாலத்தினைப் பற்றியே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.
நிரூ இது பதிவோடு கொஞ்சம் வேறுபட்டாலும் இதுவும் ஒரு தகவல் முதலில் சிரச தொடங்கிய உறவுப்பாலம் நிகழ்ச்சிக்கு இத்தாலியில் இருந்து தான் நேயர்களை அதிகமாக ஞாயிறு இரவு 10 மணியில் இருந்து உள்வாங்கினார்கள் அப்போது மத்தியகிழக்கில் இருந்து தாயகத்துக்கு அழைக்க முடியாத தொலைபேசி வசதி இல்லாதவர்கள் கூட இத்தாலிக்கு அழைத்து அதன் மூலம் தாயக் உறவுகளுக்கு தம் உணர்வைப்பகிர்ந்து கொண்டதுக்கு முதல் களம் கொடுத்தது அந்த உறவுப்பாலம் தான் இதன் செயல் அதன் உணர்வை என்னால் எப்போதும் மறக்கமுடியாது!1995 இல் நடந்தது!
இந்த செயலுக்கு எல்லாம் மூல காரணம் வசந்தராஜா ஆகும் இவர்தான் ரூபாவவாஹினியின் கட்டுப்பாட்டாளராக இருந்தவர் சந்திரிக்கா ஆட்சியில் இது வரலாறு பாஸ்!சந்திரிக்காவின் நண்பர் என்று அவரை !ம்ம்ம
Nall eluththu nadai thodarunkal
ஓஹோ!......நடைய மாற்றிவிட்டிங்க!
புரிகின்றது ஒன்றும் சிரமம் இல்லை!
இப்போது ஐரோப்பாவில் இயங்கும் வானொலிகளுக்குள் தரமானதும், தனித்துவமானதுமானதுமான வானொலி என்றால் அது ஐ பி ஸி தான்!
அதே உறவுப்பாலம், அந்த செய்தி அறிக்கைக்கான ஆரம்ப இசை, அனைத்துமே இப்போதுமே காதில் ஒலித்தபடியே உள்ளது!
ஐ பி சி க்கு எனது வாழ்த்துக்கள்!
வணக்கம் பாஸ் எப்படி சுகம்?
உறவுப்பாலம் நிகழ்சியை மீள் ஞாபகம் செய்தது சிறப்பு
நல்ல பகிர்வு. உங்கள் மூலமாக உறவுப் பாலம் குறித்து அறிந்து கொண்டோம்.
வானொலி ஒலிபரப்பிலும்,குரல் வளத்திலும் ஈழத்தமிழே ஓங்கி ஒலித்தது,இன்னும் ஒலிக்கிறது.ஜொலிக்கிறது.
காலையில் 5.20 க்கு கடிகாரத்தில் அலாரம் வைத்து சிற்றலையில் தெளிவான அலைவரிசையை சரி செய்து "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும், எடுத்த காரியம் யாவினும் வெற்றி " என்பதை அதிகாலையில் கேட்கும்பொழுது ஒரு புத்துணர்ச்சியையும் ஒரு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது... இணையதளங்கள் எங்களுக்கு அறிமுகமில்லாத அந்தக்காலத்தில் தாயக செய்திகளை எம் போன்ற பாமரர்களுக்கு அளித்தது ஐபிசி வானொலியே... 2009 ன் பின்னர் தனியாரிடம் விற்கப்பட்டது என்பதை கேட்டபொழுது மனதுக்குள் அழுகையே வந்தது... எசு.கே,ராசன், பரா காந்தன், பராபிரபா இன்னும் பலரின் குரலை இனிய தமிழில் கேட்கவே மனதிற்குள் ஒரு மகிழ்வை ஏற்படுத்திய காலம் அந்தக்காலம்...
இப்பொழுது இக்குழுவினர் அனைத்துலக உயிரோடை தமிழ் என்ற பிரித்தானியா வானொலியில் பணியாற்றுவதாக கூறினர்.. ஏனோ இணையத்தில் அவ் வானொலிகளை கேட்க என் மனம் மறுக்கிறது.
நலமா சகோதரம்?
நமக்கு iபோன் app தான் எல்லா தமிழ் வானொலியையும் தரும்...
எழுத்து நடை தெரியலை...
நெறைய எழுதுங்கள்...நேரம் கிடைக்கும் போது...
தூய தமிழ் முயற்சி போலும்.வாழ்த்துக்கள்
உறவுப்பாலம் தமிழர்களும் உன்னத தமிழில் எந்த தவறுமின்றி சிறப்பாக இருந்தது.
இப்பொது இது தானா ஐபிசி தமிழ் என்று நினைக்குமளவிற்கு சிதறிப்போய்க்கிடக்கின்றது.ஐபிசி தமிழுக்கு மக்களால் கிடைத்த உன்னதமான பெயரை பயன்படுத்தி அதே மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் வானொலி தன செயல்களை முடுக்கியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
தனியார் ஒருவரின் கைக்கு இரகசியமாக கிடைத்த அந்த வானொலி அந்த நபரின் தனிப்பட்ட விடயங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றமை அவதானிக்கபடுகிறது.ஆனால் அதை பொது நலம் சார்ந்தது போல் செய்வதாக காட்ட முனைந்து மக்களை ஏமாற்றுகிறார்.உண்மையில் இப்படியாக ஐபிசி தமிழ் சிதறுண்டு மக்களையும் மக்களின் தமிழ் உணவு எண்ணங்களையும் சிதைக்க முழுவீச்சோடு செயற்படும் இந்த காலகட்டத்தில் ஐபிசி தமிழுக்கு பழைய புகழ் பல்லவி பாடி எழுதியிருக்கின்றமை அவர்களுக்கு மக்கள் மத்தியில் இன்னுமொரு பிரபலத்தை செய்வதாகவே அமையும்.இந்த பிரபலம் தான் இன்று வரை வைத்திருந்து எமது மாவிரர்களின் கனவுகளைக்கூட சிதைக்க முனைகிறது அந்த கூட்டம்.நீங்கள் குறிப்பிட்ட எந்த தமிழ் உணர்வு அறிவிப்பாளர்களும் அதன் செயற்பாடுகளுக்கு சிறிதாகக்கூட ஆதரவு கொடுக்கமாட்டார்கள்.அவர்கள் அனைவரும் தனியாரின் கைக்கு கிட்டிய பின் விட்டு விலகியிருப்பதாகக்கூட செய்திகள் வெளியாகியிருந்தது
இடையிடையே அந்த தனியாரான தனி நபரே பிரதான செய்திகளில் அறிக்கை விடுவார்.தேசியத்தலைவர் போல் அவர் இருக்கின்றார் என்று எல்லாம் வாழ்த்துக்கள் சொல்லும் படி உத்தரவு பிறப்பிப்பார்..எந்த ஊடகத்தில் அப்படி நடந்தது?
ஐபிசி தமிழ் உறவுப்பாலம் என்று நிகழ்ச்சிகளையும் அறிவிப்பாளர்களையும் காலம் கடந்தும் நினைவுகூரும் அளவிற்கு பெருமை கூறும் அளவிற்கு இருப்பை உறுதி செய்து வளர்த்துவிட்டது ஒரு தனி நபரின் புகழ் பாடுவதற்குத்தானா என்பதுதான் இப்போது கேட்க வேண்டிய கேள்வி.அதைவிடுத்து பழைய விடயத்தை சொல்லாமல் தற்காலம் சில நேரம் அதே செய்திகளை கேளுங்கள்.அதே நிகழ்ச்சிகளை கேளுங்கள்.தமிழ கொள்ளும் நாகரிகத்தமிழ கேளுங்கள்.நிகழ்ச்சிகளின் தரத்தை பாருங்கள்.உசுப்பேத்தும் படியாக பேசும் ஏமாற்றிகளை பாருங்கள்.ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்றாலும் அந்த தனியாரான தனி நபர் புகழை சொல்லும் அறிவிப்பாளர்களின் தரக்குறைவை பாருங்கள். நீங்கள் நாங்களால் கேட்ட ஐபி தமிழ் எப்போது கிடைக்கும் என்ற தமிழுணர்வு ஏக்கம் எங்களுக்கும் உங்களுக்கும் வரும்.
உறவுப்பாலம் தமிழர்களும் உன்னத தமிழில் எந்த தவறுமின்றி சிறப்பாக இருந்தது.
இப்பொது இது தானா ஐபிசி தமிழ் என்று நினைக்குமளவிற்கு சிதறிப்போய்க்கிடக்கின்றது.ஐபிசி தமிழுக்கு மக்களால் கிடைத்த உன்னதமான பெயரை பயன்படுத்தி அதே மக்களை ஏமாற்றும் முயற்சிகளில் வானொலி தன செயல்களை முடுக்கியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
தனியார் ஒருவரின் கைக்கு இரகசியமாக கிடைத்த அந்த வானொலி அந்த நபரின் தனிப்பட்ட விடயங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றமை அவதானிக்கபடுகிறது.ஆனால் அதை பொது நலம் சார்ந்தது போல் செய்வதாக காட்ட முனைந்து மக்களை ஏமாற்றுகிறார்.உண்மையில் இப்படியாக ஐபிசி தமிழ் சிதறுண்டு மக்களையும் மக்களின் தமிழ் உணவு எண்ணங்களையும் சிதைக்க முழுவீச்சோடு செயற்படும் இந்த காலகட்டத்தில் ஐபிசி தமிழுக்கு பழைய புகழ் பல்லவி பாடி எழுதியிருக்கின்றமை அவர்களுக்கு மக்கள் மத்தியில் இன்னுமொரு பிரபலத்தை செய்வதாகவே அமையும்.இந்த பிரபலம் தான் இன்று வரை வைத்திருந்து எமது மாவிரர்களின் கனவுகளைக்கூட சிதைக்க முனைகிறது அந்த கூட்டம்.நீங்கள் குறிப்பிட்ட எந்த தமிழ் உணர்வு அறிவிப்பாளர்களும் அதன் செயற்பாடுகளுக்கு சிறிதாகக்கூட ஆதரவு கொடுக்கமாட்டார்கள்.அவர்கள் அனைவரும் தனியாரின் கைக்கு கிட்டிய பின் விட்டு விலகியிருப்பதாகக்கூட செய்திகள் வெளியாகியிருந்தது
இடையிடையே அந்த தனியாரான தனி நபரே பிரதான செய்திகளில் அறிக்கை விடுவார்.தேசியத்தலைவர் போல் அவர் இருக்கின்றார் என்று எல்லாம் வாழ்த்துக்கள் சொல்லும் படி உத்தரவு பிறப்பிப்பார்..எந்த ஊடகத்தில் அப்படி நடந்தது?
ஐபிசி தமிழ் உறவுப்பாலம் என்று நிகழ்ச்சிகளையும் அறிவிப்பாளர்களையும் காலம் கடந்தும் நினைவுகூரும் அளவிற்கு பெருமை கூறும் அளவிற்கு இருப்பை உறுதி செய்து வளர்த்துவிட்டது ஒரு தனி நபரின் புகழ் பாடுவதற்குத்தானா என்பதுதான் இப்போது கேட்க வேண்டிய கேள்வி.அதைவிடுத்து பழைய விடயத்தை சொல்லாமல் தற்காலம் சில நேரம் அதே செய்திகளை கேளுங்கள்.அதே நிகழ்ச்சிகளை கேளுங்கள்.தமிழ கொள்ளும் நாகரிகத்தமிழ கேளுங்கள்.நிகழ்ச்சிகளின் தரத்தை பாருங்கள்.உசுப்பேத்தும் படியாக பேசும் ஏமாற்றிகளை பாருங்கள்.ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்றாலும் அந்த தனியாரான தனி நபர் புகழை சொல்லும் அறிவிப்பாளர்களின் தரக்குறைவை பாருங்கள். நீங்கள் நாங்களால் கேட்ட ஐபி தமிழ் எப்போது கிடைக்கும் என்ற தமிழுணர்வு ஏக்கம் எங்களுக்கும் உங்களுக்கும் வரும்.
Post a Comment