நீயும் நானும்
இரு வேறு துருவங்கள்
இரு வேறு துருவங்கள்
என்பதனை உணர
நீண்ட நேரம் எடுக்காது
என்பது உனக்கும்,
உனைச் சார்ந்தவர்களுக்கும் தெரியும்- ஆனாலும்
உன்னை விட்டால்
சார்ந்திருப்பதற்கு வேறு வழியில்லை
எனும் தோரணையில் ஒட்டியும் ஒட்டாமலும்
உன்னோடு உறவாடியபடி நான்!
என்னையும் உன்னையும் சூழ்ந்திருந்த
அரவணைப்புக்கள் எல்லாம் நீங்கி
நாங்கள் தனி மரங்களாகி,
முதன் முதலில் சந்திந்த போதே
உன் முகத்தில் கீறல் விழுந்த
கண்ணாடியைப் போல
உடைந்து தெறித்தன
ஓராயிரம் வினாக்கள்!
நீ வேறு நிறம்,
நான் வேறு நிறம்
நீ வேறு மொழி,
நான் பேசும் மொழி வேறு
எனும் ஆதியில் தொடங்கி
அடக்கி வைக்க முடியாத திமிர் கொண்ட
உன் முன்னழகின் பார்வைகளை(ப்) போல
என் பின் பக்கம் இருந்து
இனவாதம் பேசினாய்,
இலையான் ஒன்று
இரைகிறது என்றெண்ணி
உன்னை தட்டி விட்டேன்
ஆனாலும் நீயோ விடுவதாயில்லை
என்னைப் பின் தொடர்ந்தாய்,
உன் காலடிக்குக் கீழ்
நான் அடிமையாக இருக்க வேண்டும்
என்பதற்காய் தகாத வார்த்தைகள்
கொண்டு உரசிப் பார்த்தாய்
பொறுமையின் எல்லை வரை
நிற்பது ஆண்மைக்கு அழகல்ல
எனும் வகையில்
அகிம்சையில் இறங்கினேன்- ஆனால்
நீயோ என் மௌனத்தை கலைக்க
மந்த புத்தி கொண்டு
பாத்திரங்களை ஆயுதமாக்கி
அக்கினி(ப்) பார்வையோடு விசிறியெறிந்தாய்!
இனி உன்னோடு
ஒரு வார்த்தை உரைப்பினும்
உணர்வின்றிப் போகும் எம் உணர்வுகள்
எனும் எண்ணத்தில்
நானும் உன் வழியில் இறங்கினேன் - நீயோ
உன்னை விட(த்)
தாழ்ந்த சாதிக்காரன்
உனை ஆயுதம் கொண்டு
ஆதிக்கம் செய்து
அடக்கிட நினைப்பதாக
அண்டை நாட்டிலுள்ள உன்
உறவினர்களுக்கு தகவல் அனுப்பினாய்,
கெஞ்சினேன், சிரித்தாய்;
காலில் விழாக் குறையாய் பிரிவு கேட்டேன்
என்னை விடச் சிறியவன்
உனக்கேன் பிரிவு என
கேலி செய்து உதறி விட்டாய்
மீண்டும் இரங்கினேன்; படி இறங்குவாய் என;
நீயோ வாழ விரும்பின் அடிமையாய் இரு
வாழ்க்கை முழுதும் சேவகம் புரி
என வாசகம் உரைத்தாய்!!
நீண்ட நாள் பொறுமை கடந்தவனாய்
உன் வழியில் பதில் சொல்லி,
மௌனமாய் நீதிமன்றம் புகுந்தேன் தீர்வொன்றிற்காக,
நீயோ, நீதி மன்றினூடாக பொறிக் கிடங்கில் வீழ்த்தினாய்
இனியும் சேர்ந்து வாழ்தல் முறையில்லை என்றுணர்ந்து
விவாகரத்து கேட்டேன்
நீதிபதி சொன்னார்
’கொஞ்சக் காலம் எட்ட இருங்கோ,
இப்போதைக்கு இதற்கு சமஷ்டியே தீர்வாகட்டும்’ என்றார்
எந்தன் புத்தியோ இங்கே சறுக்கியது,
சமஷ்டி என்பது சதி என்றெண்ணி
முழுமையாய் பிரிவே
முதலில் வேண்டுமென்றேன்;
அடிப் பாவி
தனி மரமாய் நின்ற என்னை
உன் உறவுகள் துணையோடு
படு குழியில் வீழ்த்த நினைத்தாய்
உன் சதியை உனர்ந்தவனாய்
நிரந்தரப் பிரிவேதும் வேண்டாம்
’இடைக்காலப் பிரிவினை
தா எனக் கேட்டென்
நீதிமன்றம் உரைத்தது,
உன் முடிவில் மாற்றம் இல்லையாம்
இப்போதைக்கு எதுவுமே இல்லை;
நீண்ட மௌனத்தின் பின்
ஆற்றங்கரையிற்கு அருகாக வைத்து
ஒரு மாலை வேளை
உனைச் சீ(தீ)ண்டத் தொடங்கினேன்,
உனைச் சீ(தீ)ண்டத் தொடங்கினேன்,
மீண்டும் நீ என்னை எதிர்க்கும்
எண்ணத்தோடு உரு(க்) கொ(ல்)ள்ளத் தொடங்கினாய்,
இது தான் தருணம் என எண்ணி
எனை வீழ்த்த வந்தாய்
உன் உறவுகள் எல்லோரும்
உன் பக்கம் நிற்க
உன் பக்கம் நிற்க
நானோ(மோ) தனிமரமாய் நின்றேன்
ஆனாலும் முடிந்த வரை
உன்னோடு மல்லுக் கட்டினேன்
இறுதியில் நீ வேறு வழியின்றி
சூழ்ச்சி செய்தாய்
என் தலைமேல் நஞ்சு தூவிப் பார்த்தாய்
அது பலிக்கவில்லை
மெதுவாய் யோசித்தாய்
பதிலொன்று கிடைத்த நோக்கில்
பட்டினி போட்டாய்,
பட்டினி போட்டாய்,
அடியே பாதகத்தி,
அடுத்த வீட்டு அன்ரியின் துணையோடு
நீ என் அடுப்பில் நஞ்சைத் தூவினாய்
அது பற்றி எரிந்தது,
அணைக்க உதவி கேட்டேன்
அடியோடு உன்னை அழிப்பதே
தருணம் என வேரொடு கிள்ளினாய்,
நீ சூழ்ச்சிக்காரி என்றுணர்ந்தும் இன்றும்
உன்னோடு ஒட்டியும் ஒட்டாமலும் நான்.
என் காதல் இறந்து விட்டது
அது பல நாள் உன்னிடம்
பணிந்து கேட்டும்;
பதிலேதும் இன்றி சேற்றில் புதைந்து விட்டது!
இது ஓர் வசன கவிதையாகும்!
பொழிப்புரை / விளக்கம்: இலங்கை எனும் அழகிய திரு நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களும், சிங்கள மக்களும் பல்வேறு அடிப்படையில் வெவ்வேறான மக்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் தமிழர்கள் இன்று ஒட்டியும், ஒட்டாமலும் சிங்களவர்களுடன் பழக வேண்டிய நிலமை தோன்றிடுச்சு.
இரு தரப்பிற்கும் இடையான சமரசப் பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர், கீறல் விழுந்த கண்ணாடியின் சிதறல்களாய் ஆயிரம் வினாக்கள் இருவர் உள்ளங்களிலிருந்தும் தெறித்தன. நீங்களும், நாங்களும் வேறு வேறு இனங்கள் என சிங்களவர்கள் தமிழர்களை பல்வேறு விடயங்களில் பிரித்துப் பார்த்தார்கள். இந்த வேற்றுமைகளை தமிழர் தரப்பு சிறிய வண்டு ஒன்று ஒலியெழுப்புவது போல நினைத்து தட்டி விட்டது. ஆனாலும் சிங்களம் விடாமல் போர் செய்ய ஆரம்பித்தது. தமிழர்களை அடக்கி தமக்கு கீழ் அடிமைகளாக நடாத்த எத்தணித்தது.
இதனால் சிறுபான்மைத் தமிழர்கள் பொங்கி எழுந்து போராட ஆரம்பித்தார்கள். சிங்கள தேசம் இந்தியாவிடம் தன்னை தமிழர்கள் அடக்குவதாக கூறி உதவி கேட்டது. பின்னர் இரு நாடுகளும் இணைந்து சூழ்ச்சி வலை பின்னி தமிழர்களின் தார்மீகப் போராட்டத்தினை அழிக்க ஆரம்பித்தது. தமிழர்கள் பல வழிகளிலும் போராடினார்கள். அஹிம்சையில் கூட இறங்கி மன்றாடினார்கள். இறுதியில் ஆயுத வழியினை தெரிந்தெடுத்தார்கள். ஆனால் சிங்கள தேசம் தமிழர்களை பல நாடுகளின் துணையுடன் புதைத்து விட்டது! இதனால் எங்கள் இரு தேசத்திற்கும் இடையிலான காதல் சேற்றில் புதைந்து விட்டது என இக் கவிதை பொருளுணர்த்தி நிற்கிறது.
இக் கவிதையில் தமிழர்களையும், சிங்களவர்களையும் ஆண் பெண்ணாக உருவகப்படுத்தி காதல் ஒன்று பிரிவினையில் முடிந்தது எப்படி எனும் பொருள் மறைமுகமாகவும், தமிழர்களின் போராட்டம் எவ்வாறு சிதைவடைந்தது என்பதை நேரடியாகவும் சுட்டி எழுதியிருக்கிறேன்.
நண்பர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இப்போது பொழிப்புரையினைச் சேர்த்திருக்கிறேன்.
|
11 Comments:
இது சிலேடை வகையா? சிறுவயதில் படித்தது...
லேபில்கள் (Labels: அரசியல், அவலம், இனத்துவேசம், ஈழம், கவிதை, நிகழ்வுகள், பிரிவினை, போர், மொழி) உதவி இல்லாவிட்டால் எல்லோருக்கும் புரிவது கடினம் சகோதரம்...
அருமை என்று ஒற்றை வார்த்தையோடு கருத்து போட மட்டுமே என்னால் முடியும் . தங்களின் படைப்பினை விமர்சிக்க அறிவு ரொம்பவே குறைவு நண்பா .
குறியீட்டுக் கவிதை,சங்கடப்படுத்துகிறது.
@ரெவெரி
இது சிலேடை வகையா? சிறுவயதில் படித்தது...
லேபில்கள் (Labels: அரசியல், அவலம், இனத்துவேசம், ஈழம், கவிதை, நிகழ்வுகள், பிரிவினை, போர், மொழி) உதவி இல்லாவிட்டால் எல்லோருக்கும் புரிவது கடினம் சகோதரம்...
//
இது சிலேடை இல்லை அண்ணா,
வசன கவிதை,
மறைமுகமாக எளிதில் புரியும் வண்ணம் சில விடயங்களைச் சொல்லியிருக்கேன்!
தற்போது பொருள் விளக்கத்தினை கவிதையின் கீழ் எழுதியிருக்கிறேன்.
@Mahan.Thamesh
அருமை என்று ஒற்றை வார்த்தையோடு கருத்து போட மட்டுமே என்னால் முடியும் . தங்களின் படைப்பினை விமர்சிக்க அறிவு ரொம்பவே குறைவு நண்பா .
//
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நண்பா.
தற்போது கவிதையின் பொருளை எளிமையாக விளக்கியிருக்கிறேன்.
தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பா.
@shanmugavel
குறியீட்டுக் கவிதை,சங்கடப்படுத்துகிறது.
//
மன்னிக்கவும் அண்ணா,
இப்போது பதிவின் கீழ் பொருள் விளக்கம் கொடுத்திருக்கிறேன்.
வணக்கம் நிரூபன்!பெருமூச்சு ஒன்றே இப்போதெல்லாம் என்வசம்.பார்க்கலாம்,கடவுள் கண் திறக்கிறாரா?என்று!
யோகா ஐயா,
உங்கள் பேவரிட் பதிவினை கீழே இணைச்சிருக்கேன்!
கேட்டுப் பாருங்க.
அவ்வ்வ்வ்வ்
@???????
நீங்கள் வசன நடையில் எழுதியது தெரியும் சகோதரம்...
ஆனால் மறைமுகமாக எழுதுவதை 'சிலேடை' என்று சொல்வாங்கன்னு நினைக்கிறேன்...
புலவரிடம் / முனைவரிடம் கேட்டுப்பார்க்கிறேன்...
இருபொருள் தரும்படி அழகாகப் பேசுவதை ‘சிலேடை’ என்று அழைப்பார்கள்ன்னு நினைக்கிறேன்...
விளக்கம் தரும் முன்பே ஓரளவு யூகித்தேன்...
நல்லாயிருந்தது கவிதை...
நிலை மாறும் விரைவில்...
@ரெவெரி
சிலேடை எனப்படுவது
இரு பொருள் தரும் வண்ணம் ஒரு சொல்லில் பேசுவது,
இன்பம் கட்டிலா உன் தேக கட்டிலா?
இது கவியரசரின் சிலேடை!
தூதுவளங்காய் வெண்ணிலாவே,
மாதுளங்காய் வெண்ணிலாவே - அத்திக்காய் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே பாடலில் வரும் வரிகள் அவை,
வாரும் இரும்படியும்,. இதுவும் சிலேடை!
இது தொடர்பாக விரிவான ஓர் பதிவினை வெகு விரைவில் எழுதுகிறேன்.
Post a Comment