சின்னஞ் சிறு வயதில் எமது ஆர்வக் கோளாறின் காரணமாக சில புதிய செயல்களைச் செய்ய ஆரம்பிப்போம். எம் ஆர்வக் கோளாறின் காரணமாக நாம் செய்யத் தொடங்கும் செயல்களில் சில நன்மையில் முடியும். சில செயல்களோ தீமையில் முடிந்து கொள்ளும். அத்தோடு தீராத வலிகளையும், தழும்புகளையும் தந்து எம் பால்ய வயதின் ஆறா வடுவாக எம் வாழ்வோடு கூட வந்து கொண்டிருக்கும். இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பது போல எமக்குள்ள கல்வி மீதான ஆர்வமும், பிற விடயங்களை அறிய வேண்டும் எனும் தூண்டுதல்களும் பதின்ம வயதுகளில் தான் ஊற்றெடுக்கும். இவை எல்லாம் போனால் வராது என்பது போல மீண்டும் வராத பொழுதுகளாகப் போய் விடும்.
படத்தின் மையக் கதைச் சுருக்கம்:
ஒரு வருடத்திற்கு முன்பதாக தன் தந்தை கார் விபத்தில் இறந்து விடத் தன் தாயின் அரவணைப்பில் வசிக்கத் தொடங்குகின்றான் பதின்ம வயதினை உடைய கல்லூரி மாணவனான Kale Barchts. ஓர் நாள் கல்லூரியில் ஸ்பானிஷ் பாடத்தினைக் கற்றுக் கொண்டிருக்கும் போது வகுப்பறையில் குட்டித் தூக்கம் போட்டு விடுகின்றான் Kale. ஸ்பானிஷ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர் Kale அவர்களின் தூக்கத்தினைக் கலைக்கும் நோக்கில் கையில் அகப்பட்ட பொருள் ஒன்றினை அவனது முகத்திற்கு நேரே எறிந்து விட, தூக்கம் கலைந்து எழுந்த இப் ப்டத்தின் நாயகனை வாத்தியாரும் மாணவர்களும் சேர்ந்து வகுப்பறையில் தூங்கியதற்காக கிண்டல் செய்கிறார்கள்.
இவ்வாறு கிண்டல் செய்ததால் கோபமடைந்த Kale அவர்களுக்கும், ஸ்பானிஷ் வாத்தியாருக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கமானது ஸ்பானிஷ் வாத்தியாரின் வாயிலிருந்து திடீரென நாயகனின் தந்தையினைப் பற்றியும், அவனது பிறப்புப் பற்றியும் இழிவாகப் பேசும் வண்ணம் வார்த்தை வடிவில் வந்து உதிர்கின்றது. வயசுப் பசங்களுக்கு கோபம் வருவது அதிகம் என்பதால் தன் தந்தையினை இடித்துரைத்த வாத்தியாரின் மூக்கினை உடைத்து விடுகின்றான் இப் படத்தின் நாயகன் Kale. இறுதியில் நீதிமன்றம் வரைக்கும் மூக்குடைப்பு விவகாரம் சென்று பதின்ம வயதில் கொலை வெறியோடு வாத்தியார் மீது தாக்குதல் நடாத்தியதற்காக மூன்று மாதங்கள் Kale இனை வீட்டுக் காவலில் வைத்திருக்கும் தண்டனையினைப் பெற்றுக் கொடுக்கின்றது.
இந்த மூன்று மாதங்களும், வீட்டை விட்டு சிறிதளவு தூரத்திற்கு அப்பால் கெயில் அவர்களால் நடமாட முடியாதவாறு காலில் அலாரம் ஒன்றினை பொலீஸார் பூட்டி விடுகின்றார்கள். இதனால் வெளியே எங்கும் போகாதவாறு வீட்டினுள்ளே தஞ்சம் புகுந்து விடுகின்றான் கெயில். இந்த வேளையில் கெயில் படும் பாடிருக்கே! அப்பாடா! ஒரு பக்கம் காமெடியும், மறு பக்கம் வேதனையும் கலந்தது!கெயில் அவர்கள் தன் நாட்களை வீட்டுக் காவலில் கழித்து வருகையில் தான் கை வசம் இருக்கும் பைனாகுலர் மூலம் தன் அருகேயுள்ள வீடுகளைத் தன் வீட்டிலிருந்து திருட்டுத் தனமாக நோட்டம் விடத் தொடங்குகின்றான். இவ்வாறு நோட்டமிடும் சந்தர்ப்பத்தில் தன் வயதினை ஒத்த ஓர் இளஞ் சிட்டினையும் கண்டால் கெயில் மனம் இருப்புக் கொள்ளுமா?
நாயகியின் அறிமுகம்:
அப்புறம் என்ன? தன் வீட்டிற்கு எதிரே குடியிருக்கும் இப் படத்தின் நாயகி ஆஷ்லி கால்ர்ஸனைக் கண்ட நாள் முதல் தொடங்கிய ஈர்ப்பானது நாட் செல்ல (Ashley Carlson) மீதான ஒரு தலைக் காதலாகவும் மாற்றமுறுகின்றது. திருட்டுத் தனமாக தன் கைவசம் உள்ள பைனாகுலர் மூலம் அடுத்தாத்து பெண்ணை ரசிக்கத் தொடங்கும் கெயிலிற்கு ஓர் அதிர்சியூட்டும் விடயமாக அமைந்து கொள்ளுகின்றது தொலைக்காட்சியில் அவன் பார்த்த செய்தியும், தன் பக்கத்திற்கு வீட்டினுள் நுழையும் காரும் - அக் காரினைச் செலுத்தும் மனிதரின் இயல்புகளும். அப்புறம் என்ன? தன் வீட்டிற்கு அருகே இருக்கும் படத்தின் வில்லன் Robert Turner மீதும், அவரது நடத்தைகள் மீதும் சந்தேகம் கொண்டு அவரையும் தன் பைனாகுலர் ஊடாக தீவிரமாக கண்காணிக்க தொடங்குகின்றான் கெயில்.
இவ்வாறு கண்காணித்து வரும் சந்தர்ப்பத்தில் தான் அடுத்த வீட்டுப் பைங்கிளி நம் மீது ஆசை கொண்டு பேசாதா? என அலை பாய்ந்து கொண்டிருந்த கெயிலின் நடத்தைகளை கையும் களவுமாகப் பிடிக்கும் நோக்கிலும், அவன் பைனாகுலர் ஊடாக பார்ப்பதனைக் கண்டு கெயிலின் வீட்டிற்கு நேரடியாக வந்து விடுகிறாள் ஆஷ்லி. பைனாகுலர் ஊடாக பார்ப்பது பற்றி முரண்பட்டுக் கொண்டிருந்த வாலிப உள்ளங்கள் இரண்டும் அருகேயுள்ள வில்லன் வசிக்கும் வீட்டில் இடம் பெறும் வழமைக்கு மாறான நடத்தைகளையும், அலறல் ஒலிகளையும் செவிமடுக்கின்றார்கள். இதன் பின்னர் படத்தில் விறு விறுப்பிற்குப் பஞ்சமே இல்லை.
வில்லன் அறிமுகம்:
தமக்கு அருகே இருக்கும் வில்லன் ஓர் சீரியல் கொலையாளி என்று அறியாதவர்களாக, அந்த வில்லனின் நடவடிக்கைகளை அறியும் நோக்கில் இரகசிய வீடியோ காமெரா ஊடாக படம் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்குகின்றார்கள் கெயிலும், ஆஷ்லியும் கெயிலின் நண்பனும். சீரியல் கொலையாளி யார் யாரைக் கொலை செய்கின்றார்?ஏன் தொடர் கொலைகளை நிகழ்த்துகின்றார்? அதனைப் படத்தின் நாயகனும்,நாயகியும், கண்டறிந்தார்களா? அல்லது கொலைகளைத் தடுத்தார்களா? ஆகிய வினாக்கள் உங்கள் மனங்களில் எழுந்தால், அது பற்றி அறிய வேண்டும் என ஆவல் மேலிட்டால் நீங்கள் கண்டிப்பாக Disturbia படத்தினைப் பார்க்க வேண்டும்.
படம் பற்றிய சுருக்க குறிப்பு:
2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்த இக் ஹாலிவூட் திரைப்படத்தினை D.J. Caruso அவர்கள் இயக்கியிருக்கின்றார். Christopher Landon அவர்கள் இப் படத்திற்கான திரைக் கதையினை எழுத்துருவாக்கம் செய்திருக்கின்றார். Dream Works Pictures & Paramount Pictures இன் வெளியீட்டில், The Montecito Pictures நிறுவனத்தின் தயாரிப்பில் இத் திரைப்படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். கதா நாயகன் Kale Barchts ஆக , Shia Labeouf அவர்களும், நாயகி Ashley Carlson ஆக நடிகை Sarah Roemer அவர்களும், இவர்களுடன், David Morse, Carrie Anne Morse, ஆகிய ஹாலிவூட் நட்சத்திரங்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இப் படத்திற்கான இசையினை விறு விறுப்பிற்குத் தளர்வு ஏற்படா வண்ணம் Geoff Zanelli அவர்கள் வழங்கியிருக்கின்றார். படத்தில் விறு விறுப்பிற்கு பஞ்சமில்லா வண்ணம் கதையினை நகர்த்தியிருக்கின்றார் கிறிஸ்தோபர் லான்டன் அவர்கள்.
கவர்சி விரும்பிகளின் கண்களுக்கு சாமி குத்தம் ஏற்படா வண்ணம் நாயகியினை நாயகன் பைனாகுலர் ஊடாக திருட்டுத் தனமாக ரசிக்கும் காட்சிகளும், நாயகி நீச்சல் உடையில் நீந்தி மகிழும் காட்சிகளும், படத்தின் இறுதியில் வைத்த வாயினைப் பிரித்தெடுக்காது இரண்டு நிமிடங்களுக்கு மேலாக நிகழும் முத்தக் காட்சிகளும் இப் படத்தில் பரிசளிக்கப்பட்டிருக்கின்றது. திரிலிங் விரும்பிகளுக்கு ஏற்ற படம், Torrent இல் மிகத் தெளிவான குவாலிட்டி கொண்ட படமாகவும் கிடைக்கிறது. விரும்பின் நீங்கள் தரவிறக்கிப் பார்க்கலாம்.
Disturbia: விறு விறுப்பிற்குப் பஞ்சமில்லாத இளசுகளின் அதிரடி!
|
16 Comments:
பர்கவேனும் போல் உள்ளது... கடைசியாக சொன்னது இன்னும் அருமை.....
உடனே பாக்கணும்யா... தரவிறக்கம் செய்வதற்கு லிங்க் குடுத்தா புண்ணியமா போகும் நிரூபா....
Leave your comment
அன்பிற்கினிய சொந்தங்களே, என்ன
இங்கே பின்னூட்டம் போடப்
போறீங்களா?/////
யோவ், இன்னாயா இது சின்னப்புள்ள தனமா இருக்கு கேள்வி.....
நல்ல விமர்சனம்தான்யா ஆனா படம் பார்க்கதான்யா நேரமில்ல..!! இதெல்லாம் பார்க்க உனக்கு எப்பிடி நேரம் இருக்குது என்று ஆச்சரியமாவும் பொறாமையாவும் இருக்கு..!!
நிரூபன்...
இப்படம் ஹிட்ச்ஹாக் இயக்கத்தில் வந்த ரியர் விண்டோடோவை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலை ஹிட்ச்ஹாக்கின் பரம ரசிகன் என்ற முறையில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
படம் பார்க்க வேண்டும் போல இருக்கிறது..
அந்த மாதிரியான எழுத்துக்கள்..
நன்றி மற்றும் பாராட்டுக்கள்,,
நண்பரே நலமா ? கணினியில் அதிகம் அமருவதில்லை ,நேரமின்மையால் அருமையான விமர்சனம்
த.ம 4
என்னது கால்ல சங்கிலியா...கால்கட்டுக்காக இருக்குமோ...ஹிஹி விமர்சனம் நல்லா இருக்குய்யா!
@உலக சினிமா ரசிகன்
இப்படம் ஹிட்ச்ஹாக் இயக்கத்தில் வந்த ரியர் விண்டோடோவை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலை ஹிட்ச்ஹாக்கின் பரம ரசிகன் என்ற முறையில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
//
அண்ணே, இது புது தகவலாக இருக்கே.
ஆங்கிலப்படம் பார்க்கப்போறேன்னு சாட்டுனபோதே நினைச்சேன் ஹி ஹி விமர்சனம் வரப்போகுதுன்னு ஹா ஹா ஹா ஹா...
படம் நல்லாயிருக்கும்கிறீங்க....பார்ப்போம்!
பார்த்து விடலாம் நிரூபன்...
ஏற்கனவே கேட்டது போல
இணைப்பு கிடைத்தால் சொல்லுங்கள்.
உங்கள் விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது.
இப்படித்தான் இருக்கணும் விமர்சனம்,பார்க்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டிவிட்டு விட்டது.
நிரூ...படவிமர்சனத்தை மட்டும் போட்டுக் கோவம் வரப்பண்ணாதேங்கோ.லிங்கையும் தாங்கோ !
விமர்சனம் அருமை. படம் பார்க்கவில்லை பார்க்கோனும்,பார்க்க வேண்டிய படப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது
Post a Comment