Friday, December 16, 2011

அவலச் சாவினுள்ளே அழிந்து போன சந்ததியின் அழுகை குரல்!

ஆனையிறவின் உப்பளக் காற்றில்
கரைந்து போன 
உதிரங்களின் சுவாசத்தில் 
பிறந்திருந்தது, எங்களுக்கான 
ஒரு வசந்த காலப் பொழுது

ஒரு கும்மிருட்டை(க்)
குதூகலத்துடன் தரிசித்த
பெருமையில் 
பேருவகை கொண்டிருந்தோம், 
மிக நீண்ட நாட்களின் பின்னர்
கந்தகத்துகள்களினால் நிறைந்திருந்த
எங்கள் காற்று மண்டலத்தில்
நறுமணம் பரவத் தொடங்கியது,
இறந்து போன உயிர்களின் 
எலும்புகளைப் புணர்ந்து
பசியாற வேண்டும் என்பதற்காய்
காமப் பிசாசுகள்
ஈட்டிகளுடனும், வேல்களுடனும்
பின்னாலிருந்து குத்துவதற்காய்
கூக்குரலிட்ட படி 
கலகலவெனச் சிரித்து மகிழ்ந்தன,

இவை எல்லாவற்றிற்கும் நடுவில்
எங்களுக்கெல்லாம் 
காதலி கிடைத்ததை 
கொண்டாடி மகிழ்ந்ததாய் ஞாபகம்!

மாவிலாறின் கரையிருந்து 
அவளின் மார்பில் 
ஈட்டி பாய்ந்தது, 
புணர்ந்து மகிழ்ந்த
எங்கள் கலவி 
நாட்களின்;
கனவுகளின் 
இதமான வெப்பச் சூட்டில் 
கவலைகளைத் தொலைத்த
நினைவுடன் இருக்கையில்
எங்கள் வயல்களெங்கும்
பெரு நெருப்பு
மிளாசி எரியத் தொடங்கியது,
குற்றுயிராய்த் துடிக்கும் அண்ணா, 
குண்டு பட்டு குடிசையினுள்
ஓலமிடும் அப்பா
அணைக்க முடியாது சுவாலையுடன்
பற்றியெரும் வீடு
கையில் அகப்பட்ட பொருட்கள்
கவலைகளோடு
காப்பாற்ற முடியாதவராய் 
அவலத்துடன் ஓடத் தொடங்கும்
அப்பாவிகளின் அலறல் ஒலி
இதனைக் கேட்காதவராய்
மேலிருந்து கீழ் பார்த்து 
இதுவே எம் இலக்கு
என போடப்படும் குண்டுகள்,
இத்தனைக்கும் நடுவே
எங்கள் வசந்தம் 
கற்பழிக்கப்பட்டது, 

அவலக் குரல் ஆகாயத்தை
எட்ட முடியாத படி
போடப்பட்டிருந்தன வேலிகள்
சானிட்டரி நாப்கினுக்கு 
பதிலாக சாரங்கள் ஏதுமின்றி
தீட்டில் குளித்து(க்)
கருகத் தொடங்கின
எங்கள் உறவுகளின் 
தொடைகள்!

மீண்டும் 
அம்பலவன் பொக்கணை
அரையுயிரோடு இருக்கும்
தம்பியின் உயிர்- 
என்னை விட்டு விட்டு 
நீங்கள் ஓடுங்கள் என
அழுதபடி விடை கொடுக்கும்
தம்பி,

கையில்
அகப்பட்ட பொருட்கள்
நகைகளை மட்டும்
நிலத்தின் கீழ் வைக்கும் 
எண்ணத்தைக் கைவிட்டு
உயிர் பாதுகாப்பிற்காய்
உறைவிடம் தேடும் 
உருக்குலைந்த குச்சித் தடிகள்,
முட்கம்பி வேலிகள், 
முகம் கழுவும் வேளையில்
மூக்கை மட்டும் தண்டிக்கும்
மலத்தின் வாசம்
வாழ் நாளின் தொடக்க 
காலமிருந்து அடுக்கத் தொடங்கிய
’கூப்பனுக்குப்’ பதிலாக
இங்கு மட்டும்
வாசிக்கப்படும் பெயருக்கான காத்திருப்பு,

எரிந்து போன வயல்களில்
பயிர் செய்வதற்கு 
உரமாக உறவுகளின் எலும்புகள்
பயிர் செய்யும் எண்ணம் ஏதுமின்றி
நாட்கள் நகர்கின்றன
வெருளிகள் மட்டும் 
தலையில் சட்டியுடன்
இப்போதும் எங்கள் தோட்டங்களில்
உலா வருகின்றன!

இதுவரை சொல்லப்படாத
வரலாறுகளின் வெளியீடாக
தினம் ஒரு புத்தன் 
தெருவெங்கும் பிறப்பெடுக்கிறான்!
இதே வரிசையில் 
இப்போது முறிகண்டிப் பிள்ளையாரின் கீழ்
கண்டெடுக்கப்பட்ட எச்சமாய்
கையுயர்த்திச் சிரிக்கிறது
சித்தார்த்தனின் சிலையும்!

சொல் விளக்கம்:
கூப்பன் எனும் சொல்: ரேசன் கார்ட், அல்லது, நிவாரண உணவினைப் பெறுவதற்காக சங்க கடையில் அடுக்கப்படும் அட்டை. 

11 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம்,நிரூபன்!////வெருளிகள் மட்டும்
தலையில் சட்டியுடன்
இப்போதும் எங்கள் தோட்டங்களில்
உலா வருகின்றன!////

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

எழுத்தெல்லாம் கண்ணீர் கொட்ட வைக்கிறது...!!!

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

கவிதையாகட்டும்...
கட்டுரையாகட்டும்...
பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை மனக்கண்ணில் காட்சிபடுத்துகின்றன.

Anonymous said...
Best Blogger Tips

மீள் பதிவு! ,வாசிச்ச நினைவு ஆழமாய் இருக்கு...

சசிகுமார் said...
Best Blogger Tips

வருத்தப்பட வைக்கிறது...

shanmugavel said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்,
மனதை என்னவோ செய்கிறது!

திண்டுக்கல் தனபாலன் said...
Best Blogger Tips

படித்தவுடன் மனதை நெகிழச் செய்தது.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில் :
"நீங்க மரமாக போறீங்க..."

சம்பத்குமார் said...
Best Blogger Tips

//அவலக் குரல் ஆகாயத்தை
எட்ட முடியாத படி
போடப்பட்டிருந்தன வேலிகள்
சானிட்டரி நாப்கினுக்கு
பதிலாக சாரங்கள் ஏதுமின்றி
தீட்டில் குளித்து(க்)
கருகத் தொடங்கின
எங்கள் உறவுகளின்
தொடைகள்! //

வலிகள் நிறைந்த வரிகள்

வாசித்து முடிக்கையில் கண்ணில் நீர்த்துளிகளை தடுக்க முடியவில்லை

ஆகுலன் said...
Best Blogger Tips

மனது வலிக்கிறது....

சரியில்ல....... said...
Best Blogger Tips

ஆழமான கருத்துக்கள் கவனமீர்க்கின்றன.... நிரு, வழக்கம் போலவே பதிவு அட்டகாசம்... (மீள் பதிவு?)

yuvatirupur said...
Best Blogger Tips

புத்தம் தெரிந்தவர்களுக்கு
இக்கவியின் அர்த்தம்
வெறும் சத்தமாக கேட்பதின்
நியாயம் என்ன?
அழுகுரழும்,வலியின் காரணமாக
எழும் ஓயாத எம் தமிழர் கதறலும்
இக்கவியின் வார்ததைகளில்...உள்ள
ஒவ்வரு வார்ததையும் எம்மை
மீளாத் துயரத்திலும்,
எதுவும் செய்யமுடியாத
என்னை(எங்களை)வெட்கி
தலைகுனிய வைக்கின்றன...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails