Saturday, December 24, 2011

வன்னிக் காடுகளில் துலங்கும் எண்ணச் சிதறல்கள்!

மல்லாவி மத்திய கல்லூரியின் மயில்வாகனம் மண்டபம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. கண்களில் நீர் சொரிய உணர்ச்சிப் பெருக்கோடு மக்கள் குழுமியிருந்தனர். தன் மன உணர்வுகள் யாவற்றையும் ஒன்று திரட்டி விடுதலை வீரர்களின் பெருமையினையும், தியாகத்தினையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான் சுடரவன். 
"மானத்தின் திருநாள் கார்த்திகையே! மாவீரத்தின் பெரு நாள் கார்த்திகையே! கார்த்திகை மாதம் கறுப்பு. இந்த கார்த்திகை மாதம் நெருப்பு! கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்! அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம்!" என மாவீரர் பெருமை சொல்லும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவி வரிகளை தன் சிறப்புரைக்கு வலுச் சேர்க்கும் வகையில் உள்ளடக்கிப் பேசிக் கொண்டிருந்த சுடரவனின் கண்களின் பார்வையானது நெஞ்சிலே கொதித்துக் கொண்டிருந்த தீப்பிளம்பிற்குச் சத்தமிடாது விடை கொடுத்தவாறு ஓரிடத்தில் போய் நிலை கொண்டது. 

குவியப் புள்ளிகளை ஒன்று திரட்டி கார் மேகக் குழல் வண்ணம் கொண்ட கண் இமைகளின் பார்வைப் புலனிற்கு வேகம் ஊட்டி பிருந்தாவின் மை விழியில் போய் சுடரவனின் மெய் விழிகள் இரண்டும் முட்டி மோதின. தன் ஆசை மச்சாளை இன்றைக்கு இவ் இடத்தில் சந்திப்பேன் என கனவிலும் கூட நினைக்காதவனாகத் தன் பார்வைப் புலன்களினூடே சொற்களைத் தொலைத்துத் தன் பேச்சினை முடித்தான்.மாவீரர்களின் பெற்றோர்களது மதிப்பளிப்பு நிகழ்வு நிறைவு பெற்றதும் ஓடோடிச் சென்று பிருந்தாவின் அருகிலே நிற்கலானான். அவள் உள்ளத்தின் உணர்வைப் புரிந்து கொண்டவனாக; "என்னை மன்னித்துக் கொள்ளும் பிருந்தா!" என அக்கம் பக்கம் யாராச்சும் பார்க்கிறார்களா எனப் பார்த்து விட்டு மெல்லிய ஸ்வரத்தில் மென்மையாய் உரைத்தான்.

"ஏன் உங்களுக்கு என் மேல அன்பு இல்லாத காரணத்தினால் தானே என்னையும் மதிக்காது, என் காதலையும் நேசிக்காது என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாது இயக்கத்திற்கு ஓடிப் போனனீங்க" எனச் சீழ் படிந்த புண்ணை மொய்த்து இரைச்சல் ஒலியெழுப்பும் கொசுப் போல காதினுள் சிணுங்கினாள். "இன்று மாலை லீவில வீட்டிற்கு வருவேன், கண்டிப்பாக உன்னைச் சந்திக்கனும், நிறைய விடயங்கள் பேசனும். கண்டிப்பாக வந்திடு" எனக் கூறிவிட்டு தற்காலிகமாகப் பிருந்தாவிடமிருந்து பிரிந்தான் சுடரவன்.

மாலை நேரம். யானைகள் கூட்டமாக வந்து கொத்தம்பியா குளத்தில் நீர் அருந்தி விட்டுச் ஓசைப் படாமல் மெதுவாகச் செல்லும் நேரம். பாலியாற்றுப் பாலப் பக்கம் ஆள் அரவமற்று கூட்டம் குறையத் தொடங்கும் இளம் மாலைப் பொழுது. இளையவர் - காதலர்கள் என தம் மனம் விட்டு மகிழ்ச்சி பொங்கிடப் பேசி மகிழ்வதற்கேற்ற இனிய பொழுதாய் இயற்கைச் சூழல் இசைந்திருக்கும் வேளையில் சுடரவன் பிருந்தாவின் வருகைக்காய் காத்திருந்தான். "நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை.நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை" எனப் பாடிக் கொண்டிருக்கனும் போல அவனுக்குத் தோன்றியது. 
பாடியவாறு இருந்தான். தன் பார்வைப் புலனுக்குள் எங்காவது ஓர் திசையிலிருந்து பிருந்தா ஒட்டிக் கொள்கிறாளா என ஏக்கம் கொண்டு காத்திருந்தான். லுமாலா சைக்கிளின் பெடலில் மெதுவாக கால்களை ஒட்டி வைத்து இறுக்கி மிதித்து, கூந்தலோ காற்றினில் ஆட்டம் காண அவனை நாடி வந்தாள். அழுகையுடன் பேச்சினை ஆரம்பித்தாள். "பிருந்தா ஏன் அழுறீங்க? நான் என்ன வேணுமென்றே செய்தனான்? காலத்தின் கட்டாயம் இப்படி என்னையும் ஓர் போராளியாக ஆக்கி விட்டது. உங்க கூட முதல் நாள் மாலை பேசி விட்டு உங்களுக்கு சொல்லாது இயக்கத்திற்கு போனது என்னோட தவறு என்று நீங்க நினைச்சால் நான் என்ன செய்ய முடியும்? எனக்கு இப்பவும் உங்கள் மேல காதல் இருக்கு. ஆனாலும் தாயகத்தின் மேலான காதல் குறையவில்லை. 

என்றைக்கு ஓர் நாள் எங்களின் நிலம் விடிகிறதோ! அப்போது நானும் மகிழ்ச்சிக் கடலில் உங்களைத் தேடி வந்து என்னோட அம்மா அப்பா - அதான் உங்க அத்தை மாமாவிடம் பேசி உன்னைத் திருமணம் செய்வேன் எனச் சிரித்தபடி சொன்னான். அவளோ வேதனையில் துடித்தாள். வன்னியில் வளம் நிறை சோலைகளில் சுடரவனும் தானும் சுக ராகம் பாடி மகிழ்வதாக கண்ட கனவுகள்; அவனுடன் வாழ்ந்து தன் அன்னை மண்ணில் மகிழ்ந்திருப்பதாக கட்டிய கோட்டைகள் யாவும் உடைந்து விடுமோ என அஞ்சினாள். திடீரென ஓர் சொல் அம்பினைத் தொடுத்தாள். "அப்போ நீங்க சண்டைக்கெல்லாம் போக மாட்டீங்க இல்லே?” 

சுடரவன் மனதுக்குள் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு "நான் சண்டைக்குப் போற ஆளா? உமக்கு என்னோட மூஞ்சியைப் பார்த்துமா தெரியலை?" எனக் கேலி செய்தான். இருவரும் தம் மீது காதல் எனும் நெருப்பு பற்றிக் கொண்டதைப் பகிர்ந்து கொண்டார்கள் போது இருந்த மன நிலையினை மீட்டிப் பார்த்தார்கள். செஞ்சோலைப் படுகொலைகளும், பச்சிளம் குழந்தைகள் உடல் துடி துடித்து இறந்த நிகழ்வுகளும் தன்னையும் போராட்டக் களத்தில் பங்கெடுக்க வேண்டும் எனும் உணர்விற்கு உந்துதலாய் அமைந்ததாக வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்தான் சுடரவன். பொழுது இருட்டிக் கொண்டிருந்தது. மாலைக் கருக்கல் நீங்கி இரவுப் பொழுதினை இயற்கை அன்னை அணைத்துக் கொள்ளும் நேரத்தில் சுடரவனை விட்டுப் பிரிய மனமில்லாதவளாக இறுதியாக ஒரேயொரு கேள்வியினைச் சின்னக் குழந்தை போன்று செல்லமாய் கேட்டாள் பிருந்தா. 
"அப்போ எப்ப நீங்க மீண்டும் போறீங்க என்று கேட்டாள்?" அவன் மௌனமாய் சில விநாடிகள் தலை தாழ்ந்து விட்டு பதிலுரைத்தான்.
"இப்போது வன்னிக் களமுனை நிலமை உங்களுக்குத் தெரியும் தானே. அவர்கள் எப்போது அழைத்தாலும் தான் போக வேண்டும்" எனக் கூறி கண்களிலிருந்து நீர் துளிகள் எட்டிப் பார்க்கையில் விடை பெற்று வீடு வந்து சேர்ந்தான். அடுத்த சந்திப்பில் சுடரவனைக் கண்டு சுகம் விசாரிக்க முடியலையே எனும் ஏக்கம் மனதை வாட்ட தவித்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. சில மாதங்களின் பின்னர் ஒரு நாள் காலை புலிகளின் குரல் வானொலியின் செய்தி அறிக்கையினைத் தொடர்ந்து இடம் பெற்ற வீரச் சாவு அறிவித்தலைக் கேட்டு அதிர்ச்சியுற்றாள். வீட்டுக் கதவினைத் தாழ் போட்டு விட்டு விம்மி அழுதாள். 

காலத்தின் கட்டளைக்கு அமைவாக களப் பணியில் தன் காதலன் உயிர் துறந்து விட்டானே எனும் சேதி மனதை வாட்ட கொஞ்ச நாள் வாடிப் போயிருந்தாள். சில தினங்களின் பின் அவளது ஊரான யோகபுரத்திற்குப் பரப்புரைக்காகப் போராளிகள் சிலர் வந்திருந்தார்கள். மக்களோடு மக்களாக அவளும் போய் நின்றாள். அப்போது கவிஞர் புதுவை இரத்தினதுரையின் "தாய் நிலத்தை காதலிக்கும் தளிர்கள் இருக்கும் வரை, பாய் விரித்து எம் தேசம் படுக்காது" எனும் கவிதையினைக் கேட்டும் மனம் இரங்காதவளாக, ஆட்சேர்ப்பிற்காக போராளிகள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பிரச்சாரத்தினால் கூட ஆட் கொள்ளப்படதாவளாக அவன் நினைவில் மூழ்கியிருந்தாள். சுடரவன் இல்லாத வேளையில் தாய் நிலத்தின் மீது பற்றுக் கொள்ள வேண்டிய காதலோ, நீங்கா இடமாய் நெஞ்சில் நிழலாடும் காதலன் மீது இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்தது.

நாட்கள் நகர்ந்தன. காலவோட்ட மாற்றத்தில் வன்னி மண் தன் வாசலினுள் நுழைந்த பகை வீரர்களை விருப்பமின்றி வெறுப்புடன் உள் வாங்கிக் கொண்டிருந்தது.பல தடவை புலிகள் ஆட்சேர்ப்பு நிகழ்த்துகையிலும் மௌனமாய் இருந்தவள் தன் பெற்றோரை எறிகணை வீச்சில் பலி கொடுத்த பின்னரும் ஆதரவுக் கரம் நீட்ட யாருமே இல்லாதவளாக தனித்திருந்தாள். போராட்டத்தில் இணைய மனமின்றி இறுமாப்போடு இருந்தாள். புலிகள் வசமிருந்த பிரதேசங்கள் யாவும் இராணுவத்தினர் வசம் வீழ்ச்சியுற்றதைக் கண்ணுற்றுக் கூனிக் குறுகிப் போனாள். மக்களோடு மக்களாக தன்னையும் பாதுகாக்கும் நோக்கில் இராணுவத்தினரின் சொற் கேட்டு இராணுவக் கட்டுப் பாட்டுப் பக்கத்திற்குள் நடந்தாள். 
அவமானம், வெட்கம், கண் முன்னே நிகழ்ந்த அவலங்கள் யாவும் அவன் நினைப்பிற்குப் பதிலாக மனத் திரையில் நிழலாடிக் கொண்டிருக்கையில் தனக்கு அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதைக் கூட அறியாதவளாக நடக்கத் தொடங்கினாள். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் உள்ள அகதி முகாமினுள் செல்வதற்காக மக்களோடு மக்களாக நின்றவளின் அருகே இராணுவ வீரன் ஒருவன் வந்து கொச்சைத் தமிழில் சொன்னான் "ஒயா லக்ஸன நங்கி. ( நீங்க ரொம்ப அழகனா தங்கை) எனச் சொல்லி நேரே போகுமாறு சைகை காட்டினான். பிருந்தா சுற்றிவர கறுப்பு நிறத் துணி கொண்டு (படங்கு) கொண்டு அடைக்கப்பட்ட கூடாரத்தினுள் நுழைந்தாள். 

அவள் மனம் மீண்டும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் "தாய் நிலத்தை காதலிக்கும் தளிர்கள் இருக்கும் வரை! பாய் விரித்து எம் தேசம் படுக்காது" எனும் வரிகளை அசை போடத் தொடங்கியது. கவிஞர்களும் கவிதைகளும் காலத்தால் அழிவதில்லை! 

இணைய வலையினூடே இதயங்களை இணைத்திருக்கும் வலைப் பதிவினூடாக இணைந்திருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! மலரும் புதிய ஆண்டில் எம் வாழ்வு வளம் பெற்று எமைச் சூழ்ந்துள்ள தீவினைகள் யாவும் விலகி மேன்மை நிலவி உலகெங்கும் சாந்தி நிலவிட வாழ்த்துவோம்! 

வலைப் பதிவுகளூடாக உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பதிவர்களின் மற்றுமோர் புது முயற்சி இது. உங்கள் மனங்களைக் கொள்ளை கொள்ள, உங்கள் உள்ளங்களுக்குள் புதிய சில மொழிச் சொல்லாடல்களை அறிமுகப்படுத்திட இந்தப் பதிவர்கள் கரங் கோர்த்துள்ளார்கள். இது பற்றி நீங்களும் அறிய வேண்டும் என ஆவலா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

21 Comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Best Blogger Tips

அருமை.
இனிய நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள் .

வாழ்க தமிழ்.

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ நிரூபன்,
இனிய நத்தார் வருட மற்றும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

ad said...
Best Blogger Tips

வணக்கமையா.
நத்தார் வாழ்த்துக்கள்.
நல்ல மீட்டல்.ஆனால்... முடிவற்று கேள்விக்குறியோடு நிற்பதுபோலுள்ளதே? தொடர் பதிவா?அல்லது தொக்கிநிற்கும்படி எழுதப்பட்டுள்ளதா?

சுதா SJ said...
Best Blogger Tips

உங்களுக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள் :)

சுதா SJ said...
Best Blogger Tips

பாஸ் உங்க சிறுகதை மனசை ஏதோ செய்யுது பாஸ்... :(

ரெம்ப உருக்கிட்டீங்க......... சுடரவன் மனசுக்கேயே நிக்கிறான் பாஸ் :((((

சுதா SJ said...
Best Blogger Tips

இப்படி எத்தனை எத்தனை ஈழக்காதல்கள் !!!!!! நினைக்கவே ரெம்ப கஸ்ரமாய் இருக்கு பாஸ் :(

ஆகுலன் said...
Best Blogger Tips

முடிவு ஏதோ சொல்லாமல் சொல்கின்றது...கவிஞ்சரின் கவிதை அருமை...

ஆகுலன் said...
Best Blogger Tips

இனிய நத்தார்தின நல் வாழ்த்துக்கள்..

ஹேமா said...
Best Blogger Tips

வாசித்து முடிந்தபின்னும் அந்தச் சூழலை விட்டு வெளியில் வரமுடியவில்லை.எத்தனை கேள்விக்குறியான வாழ்கைகள் எம் ஈழத்தில் !

நிரூபன் said...
Best Blogger Tips

@எஸ்.பி.ஜெ.கேதரன்

நல்ல மீட்டல்.ஆனால்... முடிவற்று கேள்விக்குறியோடு நிற்பதுபோலுள்ளதே? தொடர் பதிவா?அல்லது தொக்கிநிற்கும்படி எழுதப்பட்டுள்ளதா?
//

இல்லை நண்பா, முடிவினை வாசகர்களின் சிந்தனைக்காக விட்டிருக்கிறேன்.

ஒயா லக்ஸன நங்கி என்று சொல்லியவாறு ஆமிக்காரன் கறுப்பு நிறத் தரப்பாளினால் அடைக்கப்பட்ட கூண்டினுள் அழைத்தான்...
அப்புறம் என்ன நடந்திருக்கும் என்பதனை நான் சொல்லாமலே நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா என்ன?

திண்டுக்கல் தனபாலன் said...
Best Blogger Tips

அருமை! வாழ்த்துக்கள்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

ம.தி.சுதா said...
Best Blogger Tips

அறிந்த கதைக்களம், பாத்திரப் பெயர்கள்.. முடிவினூடே பெரும் அழுத்தம்... இவை என்றுமே மறக்க முடியாதது தானே..

Unknown said...
Best Blogger Tips

தாய்தேசமா...?காதலியா....?என்கின்ற மனப் போராட்டத்தில் தனித்தேசம் என்கிற கனவு வெற்றிபெறுகிறது....அவன் என்ன ஆனான் எரிகுண்டுகளுக்கு பலியானானோ?அவள் என்ன ஆனாள்...?இராணுவத்தினரின் பசிக்கு இரையானாளோ...?வாசகர் சிந்தனைக்கு விட்டுவிட்டீர்கள்...யாராவது ஒருவரின் நிலையை கூறியிருந்தால் இன்னும் கனக்கும்..கண்ணீர் உவக்கும் என்று விட்டுவிட்டிர்களா...?வன்னி மண்ணில் இது போன்ற எத்தனை காதல் கதைகள்....உறங்குகின்றதோ....

முத்தரசு said...
Best Blogger Tips

வணக்கம்

நத்தார் (கிறிஸ்துமஸ்) நல்வாழ்த்துக்கள்

MaduraiGovindaraj said...
Best Blogger Tips

ஏன் உங்களுக்கு என் மேல அன்பு இல்லாத காரணத்தினால் தானே என்னையும் மதிக்காது, என் காதலையும் நேசிக்காது என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாது இயக்கத்திற்கு ஓடிப் போனனீங்க"
no advt

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

மனதை என்னவோ செய்கிறது..... எத்தனை எத்தனை தியாகங்கள்.....!!

shanmugavel said...
Best Blogger Tips

ஆம் சகோ! கவிஞர்களும் கவிதைகளும் காலத்தால் அழிவதில்லை.

சித்தாரா மகேஷ். said...
Best Blogger Tips

அனைத்து உறவுகளுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

கோகுல் said...
Best Blogger Tips

கதையாகப்படிக்கும் போதே மனம் கசிகிறது,
உண்மையில் இது போன்ற பல நிகழ்வுகள் சொல்லப்படாமல் ஒளிந்துகொண்டும்,வாழ்ந்த்துகொண்டும் இருப்பதை நினைக்க
சோகம் பிழிகிறது.

Unknown said...
Best Blogger Tips

இதுதான் யதார்த்தம். :-(

மன்மதகுஞ்சு said...
Best Blogger Tips

நிதர்சனமான காட்சிகளை கண் முன் திரையிட்டு நினைவு படுத்தி அந்த பெண்ணின் பாத்திரத்தில் எம்மையும் உள்ளடக்கி முகத்தில் செருப்பால் அறைந்திருக்கிறாய் நிரு.. உண்மைதான்.. எமது சொந்தம் ,எனது குடும்பன் என்றூ இருந்தவர்களில் நானும் ஒருவந்தான்.. பரப்புரைகளை வலது காதால் கேட்டு இடது காதால் வெளியேற்றியவர்களில் நானும் ஒருவன். களமறிந்து படையல் செய்யாமல் காதல் புரிந்து வெளியேறிய ஒரு தமிழன் என்று சொல்ல வெட்கப்படும் ஒரு அகதி... என் உறவுகளையே தொலைத்ததால்..

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails