கப்பல் மூலம் இராணுவத்தினருக்கு வந்த ஷெல்களைத் தந்திரமாகத் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தரையிறக்கிய புலிகள் அச் ஷெல்கள் அனைத்தையும் பயன்படுத்தி இராணுவத்தினர் மீது மழை போல எறிகணைகளைப் பொழிந்து தள்ளினார்கள். புலிகளின் ஆட்டிலறி அணிகள் மிக மிகத் துல்லியமாக ஷெல்களை இராணுவ முகாம்கள் மீது ஏவிக் கொண்டிருந்தனர். ”ஈழப் போரியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஓயாத அலைகள் மூன்றின் போது தான் புலிகளின் குரல் வானொலியானது நேரடி ஒலிபரப்பினூடாக கள முனை நிலவரங்களை உடனுக்குடன் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தது”. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது "பீரங்கி கைப்பற்றி ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்" தொடரின் இறுதிப் பாகமாகும்! தொடரின் கடந்த பகுதிகளைப் படிக்க இவ் Drop Down Menu இணைப்பில் கிளிக் செய்யுங்கள்.
புலிகளின் ஆட்டிலறி அணிகளின் வீரியத்தினை உலகினுக்கு உணர்த்திய சமராக இந்த ஓயாத அலைகள் மூன்று சமர் விளங்கியது. அத்தோடு கனகராயன் குளம் ஆட்டிலறி முகாம் தகர்ப்பின் பின்னர், புலிகள் வசம் மேலும் சில ஆட்டிலறிகள் கிடைத்தன. புலிகளின் அணிகள் கரும்புலிகளின் அணியினரோடு இணைந்து தள்ளாடி முகாம் மீது ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தினார்கள். 1999ம் ஆண்டின் மாவீரர் நாளிற்கு முன்பதாக (நவம்பர் 27) புலிகள் வசம் மன்னார் தள்ளாடி கூட்டுப் படை முகாம் வீழ்ச்சியுறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இறுதி நேரத்தில் பெருமளவான இராணுவத்தினர் மன்னார் தள்ளாடி கூட்டுப் படைத் தளத்தில் குவிக்கப்பட்டிருந்தமையால் தள்ளாடி முகாமினைக் கைப்பற்றுவதற்கான புலிகளின் முயற்சி கைவிடப்பட்டது.
புலிகளின் குரலில் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியின் போது தவபாலன் அண்ணர் "தள்ளாடி தள்ளாடித் தள்ளாடித் தீப்பற்றி எரிகின்றது!" என நையாண்டியாகச் சொல்லிய அந்த வசனங்கள் இன்றும் நினைவுகளாய் இருக்கின்றது. இந்த ஓயாத அலைகள் மூன்று சமரின் போது புலிகள் வன்னியின் புளியங்குளப் பகுதியிலிருந்து வவுனியா நகரப் பகுதிக்கும் ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். இதன் பின்னர் ஈழப் போரியலில் புலிகளின் ஆட் சேதங்களைக் குறைத்து - உயிரிழப்புக்களைத் தவிர்த்து எதிரிக்கு பேரழிவினைக் கொடுப்பதற்குச் சான்றாகப் புலிகளின் ஆட்டிலறிப் பீரங்கிப் படையணி கட்டியெழுப்பப்பட்டது.
ஓயாத அலைகள் படை நடவடிக்கையானது ஆனையிறவுப் படைத் தளத்தினைக் கைப்பற்றும் நோக்கில் வட போர் முனையினை நோக்கித் திசை திருப்பப்பட்ட போது ஈழப் போரியல் வரலாற்றில் முதன் முறையாக புலிகள் நெடுந் தூர வீச்செல்லை கொண்ட ஆட்டிலறி எறிகணைகளை பூநகரியிலிருந்து இலங்கை இராணுவத்தின் பலமான கோட்டையான பலாலி படைத் தளம் மீது ஏவத் தொடங்கினார்கள். இதன் பின்னர் ஆனையிறவில் கைப்பற்றப்பட்ட ஆட்டிலறிகளும் புலிகளின் கிட்டு பீரங்கிப் படையணியின் வளர்ச்சிக்கு வலுச் சேர்த்தது.
சமாதன காலத்தின் போது கணினியின் மூலம் துல்லியமான அளவீடுகளைப் பெற்று அச்சொட்டான இலக்குத் தவறாத எறிகணைத் தாக்குதல்களை நடாத்துமளவிற்கு கிட்டு பீரங்கிப் படையணி கேணல் பானு அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. யாழ் குடா நாடு மீதான படை நடவடிக்கை, கிழக்கு மாகாணத்தில் புளுகுணாவ முகாம் மீதான தாக்குதல், திருகோணமலைத் துறைமுகம் மீதான தாக்குதல், தீச்சுவாலை முறியடிப்புச் சமர், மற்றும் வவுனியா கூட்டுப் படைத் தளம் மீதான தாக்குதல்களின் பின்னணியில் கிட்டு பீரங்கிப் படையணியினதும், குட்டி சிறீ மோட்டார் அணியினரதும் பெரும் பங்களிப்பு இருந்திருக்கிறது. ஈழப் போரியல் வரலாற்றில் ஆமியிடமிருந்து ஆட்டிலறி கைப்பற்றி, ஆமியின் ஷெல்களைப் புலிகள் பகுதிக்குள் எடுத்து வந்து ஆமியின் தலையில் பொழிந்த பெருமையினை ஈழ மக்களும், புலிகளும் தலைவர் திரு.பிரபாகரன் காலத்தில் பெற்றிருந்தனர்.
கேணல் கிட்டு பீரங்கிப் படை, மற்றும் குட்டி சிறீ மோட்டார் படையணியின் பெருமைகளை எடுத்துக் கூறும் வகையில் புலிகளால் வரும் பகை திரும்பும் எனும் பெயரில் ஓர் பாடல் இசைத் தட்டு 2004ம் ஆண்டு வன்னியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
|
10 Comments:
மொத அலசல்
விஷயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி!
வணக்கம்
விறுவிறுப்பு - பகிர்வுக்கு நன்றி.
mmm
பதிவு விறு விறு சுறு சுறு பகிர்வுக்கு நன்றி மக்கா...!!!
வணக்கம், நிரூபன்!படித்தேன்,படிப்பேன்(தொடர்ந்து).
தொடந்துவருகிறேன் நிருபன்
நீங்கள் தொடருங்கள்
என்றென்றும் நிலைத்திருக்கும் முக்கியமான ஆவணமாக தங்கள் எழுத்துக்கள் இருக்கும் சகோ! தொடருங்கள்.
இலங்கை ராணூவத்திற்காக ஏற்றப்பட்ட 32000 மோட்டார் செல்களை அப்படியே முல்லையில் இறக்கியிருந்தார்கள் என அன்றூ தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்ப பொடியள் ஓய்வெடுக்கிறாங்கள் அடுத்தது மன்னாரில தொடங்கும் என்று அன்ரன் அண்ணாவின் நக்கல் பத்திரிகை செய்தியைத்தொடர்ந்து ஓயாத அலை 3 இலே அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தது மன்னார் தள்ளாடியைத்தான் ஆனாலும் முடியாமல் போயிற்று.. நன்றி நிரு நினைவுகளை மீட்டதுக்கு..
Post a Comment