சந்நிதி முருகனின் தேர்த் திருவிழா பக்தி பூர்வமாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாக மக்கள் வெள்ளம் தூக்குக் காவடிகள், பாற் காவடிகள் (பால் செம்பு), முள்ளுக் காவடிகள் சகிதம் வீதியை நிறைத்திருந்தது. இப்போது வல்லை வெளி இராணுவ முகாமிற்கு அருகே வந்து விட்டோம். இன்று மக்கள் வெள்ளம் இந்த வீதியில் அலை மோதுவதால் கமெரா கையிலிருந்தால் ஒரு தொகைப் படங்களைச் சுட்டுத் தள்ளியிருக்கலாம். ஆமிக்காரனுக்கும் எங்கள் மீது சந்தேகம் வந்திருக்காது. எல்லாம் என் நேரம் என நொந்து கொண்டு (முகாமின்) மப்பினை வரைவோம் என நினைத்து என் பொக்கட்டினுள் பேனையும் கொப்பி ஒற்றையும் (நோட் புக் பேப்பர்) இருக்கும் எனும் நினைப்பில் கையை விட்டேன்! ஜீன்ஸ் துணி தான் என் கையில் முட்டியது.
இங்கே நீங்கள் படித்துக் கொண்டிருப்பது உங்கள் நாற்று வலையில் வலம் வந்து கொண்டிருக்கும் "சே! அவளை அப்படி அணுகியிருக்க கூடாது!" நெடுங் கதையின் முதற் பாகத்தின் தொடர்ச்சியாகும். முதற் பாகத்தினைப் படிக்காது தவற விட்டோர் இவ் இணைப்பினூடாக முதற் பாகத்தினைக் கிளிக் செய்து படிக்கலாம். "அடக் கடவுளே ஒரு பொட்டையைச் சைட் அடிக்கும் போது மெய் மறந்தால் கமெரா, நோட் புக் எல்லாவற்றையும் சேர்த்தா சுடுவார்கள் பாவிகள்!" என நொந்து கொண்டேன். கொஞ்சம் தயக்கத்துடன் "ஐயா அண்ணை, உங்களிடம் ஒரு கொப்பி பேப்பரும், பேனையும் இருந்தால் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். "ஏண்டாப்பா ஒரு றெக்கி எடுக்க வாற ஆளாக நீ இருந்து கொண்டு அதுக்குத் தேவையான சாமான்கள் எல்லாம் இல்லாமல் வந்திருக்கிறாய். இப்ப நீ யாருக்கு கீழ வேலை செய்கிறாய்?நகுலனுக்கு கீழையோ இல்லை தீபனுக்கு கீழையோ" என்று கேட்டார். நான் "இப்போ நகுலன் மாஸ்டருக்கு கீழே வேலை செய்கிறேன்" என்று சொன்னேன்.
"உனக்கு கடமை உணர்ச்சி என்பது சிறிதளவும் இல்லை. ஆளின்ர அளவுக்கு உன்னோட விளையாட்டுப் புத்தி இன்னமும் உன்னை விட்டுப் போகவில்லை. நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தில ஆமிக் கட்டுப்பாட்டுக்குள் வழி நடத்த யாருமின்றி தன்னிச்சையாகவே தரவுகள் சேகரிச்சனாங்கள்"என்று சொல்லியவாறு அண்ணையின் படம் பொறிக்கப்பட்ட சிறிய பொக்கற் டயறியினையும் பேனையினையும் ஐயா அண்ணை தந்தார். இப்போது ஆமிக் காம்பின் சென்ரி பொயின்ற்கள் இருக்கும் திசையினை சனக் கூட்டத்தின் மறைவிலிருந்து நோட் பண்ணினேன்.எனக்கு வேண்டிய எல்லாத் தகவல்களையும் சேகரித்துக் கொண்டேன். ஐயா அண்ணையுடன் சென்று சந்நிதி கோவிலடியில் கச்சான் வாங்கிக் கொண்டு கெருடாவில் பக்கத்திற்குச் சென்று வல்வெட்டித்துறை (நெற்கொழு கிழக்கு) வீதியூடாக ஐயா அண்ணையின் பேஸிற்கு வந்தேன். கொஞ்ச நேரம் ஐயா அண்ணையுடன் பேசி விட்டு, மாலையானதும் யாழ்ப்பாணம் நோக்கித் திரும்பினேன்.
என்னுடன் தங்கியிருக்கும் ஏனைய போராளி நண்பர்களும் தம் பணியினை முடித்து நாம் தங்கியிருந்த வீட்டிற்குத் திரும்பினார்கள். அப்போது சிகப்பு நிற MD 90 மோட்டார் சைக்கிளில் நகுலன் மாஸ்டர் வந்திறங்கினார். நகுலன் மாஸ்டர் வந்திறங்கி ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின்னர் "முகில் இங்கே வாங்கோ" என்று அழைத்தார். அப்பவே எனக்குள் நெஞ்சு திக் திக் என்று அடிக்கத் தொடங்கியது. "வணக்கம் அண்ணை! நல்லா இருக்கிறீங்களே?" என்று கேட்ட எனக்கு நகுலன் மாஸ்டரின் முக பாவனை அடுத்ததாக அவர் என்ன கேட்கப் போகின்றார் என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டியது. "முகில் நான் கொடுத்த வேலைத் திட்டங்கள் எல்லாம் எப்படி?" எனக் கேட்டார் நகுலன் மாஸ்டர். நான் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காது உடனடியாகப் பதில் சொன்னேன். "அண்ணை கவலைப் படாதேங்கோ. வாற கிழமை கண்டிப்பாக எல்லா விடயங்களையும் கொடுத்திடுவேன்". அடுத்த கேள்வியைக் கேட்டார் நகுலன் மாஸ்டர்.
"இன்னொரு முக்கியமான விசயம் உன்னோட கதைக்க வேண்டும். நீ என்ன இங்க பேஸில இருக்கிற பொடியங்களை இரவில நித்திரை கொள்ள விடுறாய் இல்லையாம்?" ஓயாமால் ரேடியோவில அறிவிக்கிற மாதிரி அறிவிக்கிறது. புலிகளின் குரலில் பொடியள் செய்தி கேட்கிற நேரத்துக்கு நீயும் சம நேரத்தில செய்தி வாசிக்கிறது. இதென்ன வேலையடாப்பா? சும்மா குரு குருத்தான் மாதிரி பொடியளின் நித்திரையைக் குழப்பாமல் விருப்பம் என்றால் சொல்லு. நானே ஜவான் அண்ணையிட்டக் கதைச்சு உன்னைக் கொண்டு போய் புலிகளின் குரலில் சேர்த்து விடுகிறேன்" எனச் சொன்னார் நகுலன் மாஸ்டர்."அண்ணே அதெல்லாம் இருகட்டும். இப்போதைய நிலமையில எனக்குத் தரப்பட்ட வேலையை முடிக்காமல் எப்படி ரேடியோவில சேர முடியும்?" என கேட்டேன். அதைப் பற்றி நீ கவலைப் பட வேண்டாம். நான் பாவலனிடம் சொன்னேன் என்றால் உன்னோட வேலைய அவன் புயலிடமோ இல்லை ரவியிடமோ பிரிச்சுக் கொடுப்பான்.
கவலையை விடு. நீயும் அடிக்கடி கலை பண்பாட்டுக் கழகப் பக்கம் போய் புதுவையருக்கும் தொல்லை குடுக்கிறாய். உனக்கு விருப்பம் என்றால் சொல்லு. இப்பத் தான் பொன் காந்தனும் பிரச்சினைப் பட்டுக் கொண்டு தேசியத் தொலைக் காட்சிப் பக்கம் கிளம்பிப் போனவன்" என்று இன்னும் என் ஆர்வத்தினை அதிகரிக்கச் செய்தார்.எனக்கோ அளவில்லா மகிழ்ச்சி. ஆனாலும் விருப்பம் இருக்கிறது மாதிரி நேரடியாகக் காட்டிக் கொண்டு வானொலி அறிவிப்பாளர் ஆக வேண்டும் எனச் சொன்னால் ஏதாவது இடக்கு முடக்காகி விடும் என்பதால் பம்மிக் கொண்டிருந்தேன்.என் மன உணர்வினைப் புரிந்து கொண்ட நகுலன் மாஸ்டர்; "இன்னைக்கு நீ இங்கே தங்க வேண்டாம். என் கூட வா" என கூப்பிட்டார். "ஆகா இன்னைக்கு ஏழரை தான்"என நினைத்துக் கொண்டு அவர் கூட மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன். அமைப்பின் முதன் நிலைத் தளபதி, ஒரு ட்ரெயினிங் மாஸ்டர் அதுவும் MD 90 தனில் ஏன் பயணிக்க வேண்டும்? ஏனைய போராளிகள் Pulsar, Passion Plus, CD 100 வகை மோட்டார் சைக்கிகளில் வலம் வருகையில் இவர் மட்டும் ஏன் இவ்வாறு எளிமையாக இருகிறார்?
நகுலன் மாஸ்டரிடமே இதற்கான காரணத்தினைக் கேட்டு அறியலாம் என்று பல தடவை நினைத்ததுண்டு. ஆனாலும் சில நேரங்களில் சில விடயங்களுக்கான பதில் மௌனமாக அமைந்து கொள்வதால் அப்படியே விட்டு விட்டேன். போராளிகள் மனங்கள் எளிமையானது என்பதற்கு அப்பால் ஒரு காவலரனில் சக போராளிகளுடன் அளவளாவிக் கொண்டு தேநீர் அருந்தும் போது இராணுவத்தினரின் ஆட்டிலறி (ஷெல்)எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்ததால் தன் சக தோழன் உயிரிழந்து கொண்ட சோக நினைவலைகளின் காரணமாக அன்று முதல் தேநீர் அருந்தாது விட்ட ரவி பற்றி அப்போது தான் அறிந்திருந்தேன். ஒவ்வொருவரின் எளிமைக்குள்ளும், வித்தியாசமான நடவடிக்கைகளுக்குள்ளும் சில காரணங்கள் மௌனங்களாகப் புதையுண்டிருக்க வாய்ப்பிருக்கும். அந்த மௌனங்களைச் கசியச் செய்ய மனமில்லாதவனாக மோட்டார் சைக்கிளில் செல்கையில் எனை மோதித் தழுவும் யாழ்ப்பாண வாடைக் காற்றினைச் சுவாசித்தவனாக நகுலன் மாஸ்டருடன் சென்று கொண்டிருந்தேன்.
"உன்னைக் கொஞ்ச நாளா நோட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இன்னைக்கு உனக்கு ஒரு பெரிய தண்டனை கொடுக்கப் போகின்றேன் என ஆரம்பித்தார் நகுலன் மாஸ்டர்..............அடுத்த பாகம் இன்று இரவு வெளியாகும்.
அரும்பத விளக்கம்/ சொல் விளக்கம்:
பொட்டை: பொண்ணு/ பிகர்.
றெக்கி: வேவு / புலனாய்வுத் தகவல் திரட்டுதல்.
பேஸ்: போராளிகள் முகாமை பேஸ் அல்லது வேஸ் என்று சொல்லுவார்கள்.
கதைச்சு: பேசி அல்லது டீல் செய்து.
பிற் சேர்க்கை: இக் கதையில் வரும் முகில் எனப்படும் முகிலரசன் நான் அல்ல. ஆனால் இக் கதையினை நகர்த்த வேண்டிய நோக்கில் இங்கே முகிலரசன் கதையினை எழுதுவது போன்ற பாவனையில் இச் சிறுகதையினை எழுதியுள்ளேன்.இக் கதையும் ஓர் நிஜத்தின் பிரதிபலிப்பாகும்! இக் கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் கற்பனையல்ல!
|
7 Comments:
ME THE FIRST?
உண்மைக்கதையா பாஸ்?
நல்லா இருக்கு!
ம்ம்ம்...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!
>> இக் கதையில் வரும் முகில் எனப்படும் முகிலரசன் நான் அல்ல.
hi hi ஹி ஹி இப்போ புரிஞ்சுடுச்சு
இரவுக்காய் காத்திருக்கிறேன்..!!
வணக்கம் சகோ!
கொஞ்சம் பிஸி.கமெரா என்று இருக்கிறதே? பேச்சுவழக்கா?
@shanmugavel
வணக்கம் சகோ!
கொஞ்சம் பிஸி.கமெரா என்று இருக்கிறதே? பேச்சுவழக்கா?//
இல்லை அண்ணே, கமெரா என்பது காமெரா.....போட்டோ புடிக்கும் மெசின். அதனையும் பதிவில் விளக்கமாக சொல்லியிருக்க வேண்டும், தவற விட்டு விட்டேன்! மன்னிக்கவும்.
வணக்கம், நிரூபன்!ஆப்பு விழப் போகுது,கவனம்!(இனிக் கவனமா இருந்து என்ன செய்யிறது?கொன்பேர்மாயிட்டுது!)
Post a Comment