ஆட்டிலறிப் பீரங்கிகளைத் தொட்டுப் பார்த்த தலைவர் வன்னியில் மக்கள் பார்வைக்காக வீதியால் இழுத்துச் சென்று மக்களுக்கு காண்பிக்குமாறு ஓர் சிறப்பு அறிவிப்பினை அப்போது போராளிகளுக்கு வழங்கினார். காட்டிலிருந்து பெற்ற குழைகளால் மறைக்கப்பட்டு வன்னியின் சில பகுதிகளில் பீரங்கிகள் இரண்டும் பொது மக்களின் பார்வைக்காக வலம் வந்தது.இப்போது புலிகள் கைகளிற்கு கிடைத்த புதிய ஆயுதத்தினை இயக்குவது;பராமரிப்பது முதலிய செயல்கள் போராளிகளுக்குப் புதியனவாகவே இருந்தது. அப்போது தான் புலிகள் அமைப்பின் பொறியல் - கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்த கேணல் ராஜூ (குயிலன்) அவர்களிடம் ஆட்டிலறிகளை இயக்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கப்பெறும் எனும் நோக்கில் ஆட்டிலறிகள் இரண்டையும் கையளித்தார்கள் புலிகள்.
அம்பலவாணர் நேமிநாதன் எனும் இயற் பெயர் கொண்ட கேணல் ராஜூ (குயிலன்) அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு மரபு வழிப் போராட்ட அமைப்பாக மாற்றம் பெறுவதற்கு அளப்பரிய பங்காற்றிய சிறந்த ஓர் வீரனாவார்.களமுனையில் இராணுவத்திடமிருந்து ஒவ்வோர் புதிய ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றிய போதும்; புதிய வாகனங்களைப் புலிகள் கையகப்படுத்தும் போதும் அவற்றினை எவ்வாறு இயக்குவது என்று அறிந்து கொள்ளும் நோக்கில் புலிகளால் முதலாவதாக களமுனைக்கு அழைத்து வரப்படுகின்ற நபர் இந்த ராஜூ தான். தொழில் நுட்ப அடிப்படையில் புலிகள் அமைப்பின் முதுகெலும்பே ராஜு அண்ணர் தான் என்று சொல்லுமளவிற்குச் சிறப்புப் பெற்றிருந்தார் கேணல் ராஜு. புதிய வெடி பொருட்கள் தயாரிப்பு, கடற் கலங்களை கடற் கண்ணி வெடி மூலம் தகர்க்கின்ற உத்திகள், மற்றும் பல வெளி நாட்டு இறக்குமதி ஆயுதங்களை எல்லாம் தன் அறிவின் மூலம் போராளிகளுக்கு இயக்குவது எப்படி என்று கற்பிக்கின்ற ஆளுமை பெற்றிருந்தார் ராஜு.
நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது உங்கள் நாற்று வலையில் வெளி வந்து கொண்டிருக்கும் "பீரங்கி கைப்பற்றி ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்!" தொடரின் இரண்டாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க இவ் DROP DOWN MENU இல் கிளிக் செய்யுங்கள். புலிகளின் மோட்டார் - பீரங்கிப் (ஆட்லறிப்) படைப் பிரிவின் வளர்ச்சி, கடற்கரும்புலிகளின் வளர்ச்சி, விக்ரர் கவச எதிர்ப்பு அணியின் வளர்ச்சி, மற்றும் புலிகளின் தொலைத் தொடர்பு வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக விளங்கியவர் கேணல் ராஜூ அவர்கள். ராஜு அவர்களிடம் கொடுக்கப்பட்ட ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டையும் வைத்து தனத்துத் தெரிந்த தொழில் நுட்பங்களின் அடிப்படையிலும், தன் வசமிருந்த "1864 Field Artillery Tactics" எனும் நூலின் அடிப்படையிலும் ஆட்டிலறிகளை இயக்குவது தொடர்பான அறிவினைத் தேடிப் பெற்றுக் கொண்டார். (இந் நூலை இறுதிக் காலம் வரை புலிகள் தம் பீரங்கிப் படைக்கான படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரியில் பேணிப் பாதுகாத்து வைத்திருந்தார்கள்).
இதே வேளை அமெரிக்கப் படைத் துறை உறுப்பினர்களால் எழுதப்பட்ட இந் நூலில் இருந்து புலிகள் வசம் வந்த இரண்டு ஆட்டிலறிகளையும் இயக்குவதற்குத் தேவையான போதியளவு அறிவினை ராஜூ அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாதிருந்தது. புலிகளின் அனைத்துலகத் தொடர்பு மையத்தினர் ஊடாகவும், புலிகளின் ஆயுதச் சந்தையில் அப்போது பெயர் பெற்றிருந்த கேபி அவர்கள் ஊடாகவும் சில தொழில் நுட்பங்களை ராஜூ அவர்கள் பெற விரும்பினார். இதற்கான ஏற்பாடுகளைப் புலிகள் அணியினர் அமைத்துக் கொடுக்கவே தென் கொரிய நாட்டிலிருந்து சில தரவுகளை கேபி அவர்கள் பெற்று புலிகளுக்கு வழங்கியிருந்தார்.தான் தேடிப் பெற்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் ஆட்டிலறி உந்து கணைகளை இயக்குவது தொடர்பான அறிவினைப் பெற்று இப்படித் தான் ஆட்டிலறிகளை இயக்க வேண்டும் என்பது தொடர்பில் ஓர் திட்டத்தினை வரைந்து கொண்டார் ராஜூ அவர்கள்.
இப்போது அடுத்த பிரச்சினை! ஆட்டிலறிகளை எப்போது, எப்படி இலக்குத் தவறாது இராணுவ நிலைகள் மீது ஏவுவது. புலிகள் வசம் முல்லைத் தீவில் கைப்பற்றப்பட்ட ஷெல்கள் (பீரங்கிச் செலுத்திகளுக்கான உள்ளுடன்) அண்ணளவாக 1200 மாத்திரமே இருந்தன. சிறு துளி வளம் என்றாலும் அவற்றினை விரயமாக்காது பெரும் பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கமைவாக முல்லைத் தீவில் கைப்பற்றப்பட்ட 101mm, 88mm எறிகணைகளை எப்படிப் படை முகாம் மீது ஏவுவது என்பது தொடர்பில் புலிகள் சிந்தித்தார்கள். கணிதத்தில் திரிகோண கணிதம் எனப்படும் (Trigonometric) முறையில் ஆட்டிலறிகளை ஏவுவதற்கான கணித்தல்களை மேற் கொள்ல வேண்டும். SinQ, COSQ, TanQ இவற்றின் உதவியில் தூரக் கணிப்புக்களை மேற் கொள்ள வேண்டும். இதற்குப் பொருத்தமான இருவரைப் புலிகள் தேர்வு செய்தார்கள். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்ற வளவன்.
மற்றையவர் பருத்திதுறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றவர். இவர்கள் இருவரும் கணித்தல்களை மேற் கொண்டு கொடுக்க,புலிகள் ஆட்டிலறிகளைப் பரிட்சீத்துப் பார்க்கத் தொடங்கினார்கள். முதலில் ஆட்டிலறி குழாயினை பூமிக்கு சமாந்தரமாக 0 (பூச்சியம்) பாகையில் வைத்து அடித்துப் பார்த்தால் அது நீண்ட தூரம் செல்லாது என்பது ஏற்கனவே ராஜூ அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்த காரணத்தினால் ஆட்டிலறிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதனை அறியும் நோக்கில் 0 பாகையில் வைத்து குறுந் தூரத்திற்கு அடித்துப் பார்த்தார் ராஜு அவர்கள். "என்ன அதிசயம்?" முதலாவது ஷெல் கோதினைப் பின் தள்ளி (பின் உந்தி விட்டு) முன் நோக்கிப் போய் விழுந்தது. ஆனால் அடுத்த ஷெல்லினைப் பரிசோதனை மேற் கொண்டவருக்கு ஒரு அபாயம் காத்திருந்தது. ஆட்டிலறிகளை ஏவும் போது ஷெல் முன் நோக்கில் செல்ல, பீரங்கிக் குண்டின் வெளிப்புறக் கோது பின் நோக்கித் தள்ளிக் கீழே விழும். பின் தள்ளும் கோது இப்போது பாரிய வெடியோசையுடன் வெடிக்கையில் ராஜு அவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் சிறிதளவு தூரம் தூக்கி வீசப்பட்டார்.
இவ்வாறு தன் உயிரையும் பொருட்படுத்தாது செயற்பட்டு, கருமமே கண் எனவாகி ஆட்டிலறிப் பீரங்கிகளைப் புலிகள் அமைப்பு இயக்குவதற்கு துணை நின்றார் ராஜூ அவர்கள். புலிகள் நன்கு பயிற்சி எடுத்த பின்னர் தான் எறிகணைக் குண்டுகளைப் படை நிலைகள் மீது ஏவுவது என்பதிலும், மக்களின் குடியிருப்புக்கள் மீது ஆட்டிலறி ஷெல்கள் வீழா வண்ணம் தாம் பீரங்கிகளை ஏவ வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார்கள். அதற்கு முன்பதாக வன்னிப் பகுதியினைக் கைப்பற்றி A9 நெடுஞ்சாலையினைத் திறந்து புலிகளைப் பூண்டோடு அழிப்பேன எனச் சபதமிட்டு சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் (1997ம் ஆண்டு) வன்னிக்குள் நுழைந்த படையினருக்கு ஓர் அதிர்சி வைத்தியம் கொடுக்க விரும்பினார்கள் புலிகள்! ஜெயசிக்குறு எனும் சிங்களச் சொல்லுக்கான அர்த்தம் வெற்றி உறுதி என்பதாகும்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவின் கணவர் விஜய குமாரதுங்கா நடித்த ஓர் சிங்களப் படத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது தான் இந்த ஜெயசிக்குறு எனும் படை நடவடிக்கைக்கான சொல்லாகும். ஜெயசிக்குறு எனும் பெயர் கொண்டு வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் வந்த படையினரைப் புலிகள் எதிர்த்து நின்று போர் செய்யும் போது, செய் அல்லது செத்து மடி எனும் பெயரிலான இன்னோர் நடவடிக்கையினையும் அப்போது இராணுவம் மன்னார்ப் பகுதியினூடாக ஆரம்பித்திருந்தது. செய் அல்லது செத்து மடி எனும் பெயர் தாங்கி வந்த படையினருக்கும், உலக நாடுகளுக்கும் புலிகள் ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள் அப்போது! அது என்ன என்று அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்! எதிர்பார்த்திருங்கள்!
|
13 Comments:
நண்பா உன் தளத்தில் எனக்கு தெரிந்து இப்பொழுது தான் முதல் கமென்ட் போடுகிறேன்...
exellent..
Vasithen
@சசிகுமார்//
அப்பிடியா...
நிறைய விஷயம் உங்ககிட்டே இருந்து தெரிஞ்சிட்டு இருக்கோம் சொல்லுங்க சொல்லுங்க...!!!
தொடருங்கள் சகோ ! எல்லாமும் புதியவை.கடைசியில் தொடருக்கான சஸ்பென்ஸ்.
வணக்கம் நிருபன்!
தொடருங்கள்.. தொடர்கிறேன்...
அணைவரும் ஏற்றுக் கொள்ளும்படி தெளிவான புரிதலுடன் கூடிய நாகரிகமான உண்மைகள்.
தெரியாத செய்திகளை விரிவாகத் தந்துள்ளீர்கள்!
வணக்கம் நிரூ தொடருங்கள் காத்திருக்கிறேன்
ஒருசெயலின் முடிவு எப்படியிருக்கும் என்று முன்கூட்டியே யாராலும் கணிக்க முடியாது அதுபோல் தான் ஈழத்தில் விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்தது...ஆனாலுங்கூட பிரபாகரனின் போராட்டங்கள்..வீரமரணம் எய்திய போதும் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.. அவர் மட்டுமல்ல...அவருடன் தோளோடு தோள் நின்ற அத்துணை பேருமே
நிருபன் வன்னிக்குள்ளே ஜெயிசிக்குறு ராணுவ நடவடிக்கை தொடங்கியது 1997 மே மாசம் 13 ம் திகதி என நினைக்கிறேன் ,திகதி சிலவேளை முன்ன பின்ன இருக்கலாம்.
கேணல் ராஜு என்பவர் ஜேர்மனியில் படித்த பொறியியலாளர் என்பது நான் கேள்விப்பட்டது உண்மை எனக்கு தெரியாது.
1996 இல் எமது வீட்டுக்கருகேதான் அப்போதைய விடுதலைப்புலிகளின் சிறப்புப்படையான "சிறுத்தைப்படையணி" க்கு கேணல் ராஜு அவர்கள் சிறப்பு பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார் ,அதில் இந்த எறிகணை பகுதியும் ஒன்று எமது வீட்டுக்கருகில் இருந்த அந்த வீட்டில் சுமார் 50 வரையான் சிறுத்தைப்படையினர் ஆட்லறி சம்மந்தமான, ஆயுத தொழில் நுட்பம் சம்மந்தமான கல்வி அறிவினை கேணல் ராஜு அவர்கள் புகட்டிக்கொண்டிருந்தார்.அன்றைய காலத்தில் அவர்கள் அனைவருக்கும் கராத்தே பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தவர் எனது நண்பனின் தந்தை.அவரின் சிபார்சிலும் அங்கே இருந்த ஒரு சில போராளிகளின் அன்பினாலும் அடிக்கடி அங்கே சென்றுவரும் வாய்ப்பு கிடைத்திருந்தது.அப்போது கேள்விப்பட்டதுதான் கேணல் ராஜு அண்ணா பற்றீய விடயம்.எதற்க்கு சரி பார்த்துக்கொள்ளுங்கள்
@தங்கராஜா கீர்த்திராஜ்
நன்றி நண்பா, ஆண்டில் சிறிய தவறு, திருத்தி விட்டேன். 1997ம் ஆண்டு என்பதே சரி.
Post a Comment