காலப் பெரு வெளியின் கனத்த இருள் நிறைந்த பக்கங்களைக் கடந்தவர்களாய் இன்று பெரு மூச்சு விட்டு, எமக்கான ஏதும் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் மகிழ்ச்சியோடு வாழ்வதாக நடிக்கப் பழகி விட்டோம். நமக்கான தீர்வோ, நாம் எதிர்பார்த்த எண்ணங்களுக்கான ஒரு பிடி நிலமோ கிடைக்கவில்லை என்றாலும், ஆட்சியாளர்களின் போலி நாடகத் திரை முன்னே நாம் இப்போதும் சந்தோசமாக இருப்பதாக காண்பிக்கப்படும் வேளையில் பணம் வாங்காது உடலை விற்கும் விபச்சாரி போல் எம் பங்களிப்பினையும் செய்யத் தொடங்கி விட்டோம். கந்தகத் துகள் செறிந்துள்ள எங்கள் காற்றும் இப்போது சுத்தம் செய்யப்பட்டு சிங்களத் தமிழ் கலந்து வரும் வடக்கு நோக்கிய வசந்த காற்றாக மாற்றம் பெற்று விட்டது.
நீண்டு வளர்ந்த பெரு ஆல மரமாக அகலக் கிளை பரப்பி அந்நியரின் அடக்கு முறையினை அழித்தொழித்து ஆண்ட பரம் பரை நாம் என அண்ணனின் நிழலின் கீழ் வாழ்ந்திருந்த காலமெல்லாம் இன்றும் கண் முன்னே நிழலாக நடமாடிக் கொண்டிருக்கிறது. இழப்புக்களின் மத்தியிலிருந்து இனித் தான் எமக்கான புதிய பயணங்கள் தொடங்கப் போகின்றது எனச் சூளுரைத்து ஒவ்வோர் தடவையும் நாம் துவண்டு போகாத படி எம் விடுதலைக்குரிய பயணத்தினை வேலுப்பிள்ளையின் தவப் புதல்வன் முன்னெடுத்தான். இன்றைய வாழ்வில் நாம் இன்னல்களை நீக்கி நாளைய எம் சந்ததியின் முக மலர்ச்சிக்காக எம் உயிரைக் கொடுத்து மானத்தை நிலை நாட்டுதலே வீரத் தமிழனுக்கு அழகனெ அவன் போதித்த விடுதலை மூச்சு ஆறி அடங்கி முள்ளி வாய்க்கால் சேற்றில் அமிழ்ந்து விட்டதென்றா நாம் அடங்கிப் போய் விட்டோம்?
சிறுகச் சிறுகச் சேர்த்து எம் தேசத்தைப் பொலிவுறச் செய்வதற்காக ஒவ்வொர் துறைகளையும் மெரு கூட்டிய மேதகு சிந்தனையாளன் அவன். நாளை நமக்கான தனியரசு கீழ் வானில் தோன்றும் வேளை வரும் என அவன் மட்டும் சிந்தித்திருக்கையில் எம்மில் சிலர் எமக்கான பொருளீட்டும் வாழ்வில் குறியாக இருந்தோம். விடுதலைக்கான பாரத்தினை ஓர் தலை முறை சுமக்கையில் வீரர்களை வளர்த்தெடுக்கும் வேள்வி மனிதர்களாக பின் தளமிருந்து உதவிகள் செய்தோம். பேருக்கு விடுதலைக்கு நானும் பங்களிப்பு நல்கினேன் என ஊருக்கு ஊர் மைக் பூட்டி உரத்த குரலெடுத்துப் பாடாத குறையாக எம்மைப் பற்றி நாமே சுய தம்பட்டம் அடித்து மகிழ்ந்தோம். இருக்கின்ற போது வராத இறையாண்மை பற்றிய எண்ணங்களும், சிந்தனைகளும் இறந்திட்ட பின்னர் வருவது தானே இயல்பு!
நாங்கள் பூமியில் தோன்றிய அத்தனை மனித இனங்களிலும் வித்தியாசமானவர்கள். மறத்தில் சிறந்தவர்கள் தமிழர்கள் எனப் பலர் கூறினாலும் எமைப் போன்ற பலரின் உள்ளத்தினுள்ளே விடுதலை நெருப்பு என்பது விலை கொடுத்தும் வாங்க முடியாப் பொருளாகத் தான் புதைந்து போயிருந்தது. விரைவில் விண்ணைத் தொடும் படையணியாக விடுதலைப் புலிகள் வளர்ந்திருக்கையில் "அட இனி இங்கே யார் வந்தாலும் இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்" எனும் நம்பிக்கையில் எட்ட இருந்து விடுதலை கிட்டிட உதவி செய்தோம். போராட்டத்திற்காய் உயிர் கொடுங்கள் எனப் பிரச்சாரப் போர் செய்கையில் வேராக நாமிருந்து விழுதுகள் நீங்கள் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்க போராட்டப் பணி செய்கின்றோம் எனச் சொல்லி பெரு மூச்சு விட்டோம்.
மூன்று வேளையும் மூக்கு முட்ட உண்டோம். மிச்சம் மீதியாய் கண் முன்னே இருக்கும் காசையெல்லாம் ஒன்று திரட்டி கந்தனுக்கும், கர்த்தருக்கும், கடவுளர்கள் எமையெல்லாம் காப்பார்கள் எனச் சொல்லி அர்ச்சனைகள் செய்து ஆரத் தழுவி எம் பண வலிமையினை இதனூடாக என்றாலும் பிறர் அறிந்து கொள்ளலாம் எனும் நோக்கில் செயற்பட்டோம். எம் கண் முன்னே இருக்கும் காலக் கடவுளர்களை கவனிக்கப் பலர் மறந்து விட்டோம். ஓராயிரம் பேருக்காய் தம் உயிரை உருக்கப் புறப்பட்டோரை ஒரு சிலர் கவனிக்கையில் இன்னும் சிலரோ கவலையேதுமின்றி கால் மேல் கால் போட்டு கரிகாலன் படை நடத்தி களத்திடை புகுந்து படைகளை கொன்று விரட்டுவான் என கதை பேசிக் கொண்டிருந்தோம்.
இன்று எல்லாம் முடிந்து விட்டதே! எம் அருகே யாரும் இல்லையே என கண்ணீர் வடிக்கின்றோம். தன் வலிமை இதுவென்று உலகே உய்த்தறிய முடியா வண்ணம் வன்னியில் செந்தமிழர் வீரத்தை நிலை நாட்டிட வல்லை மைந்தன் வல்ல தமிழ் தலைவன் முயற்சி செய்கையில் இன்னலுற்ற வேளையிலும் இறைவனாய் நீங்கள் எமைக் காப்பீர்கள் என நம்பி இருந்து விட்டு, நாளைய பொழுதில் போரில் எம்பிக் குதித்தெழ முடியாதவாறு புலிகள் சேனை எம் நம்பிக்களைச் சிறகுகளை உடைத்து விட்டதென நீலிக் கண்ணீர் வடிக்கின்றோம். கந்தகம் சுமந்து, கரிய புலிகளென உருவெடுத்து மறவர்கள் தமை நோக்கி வந்திடும் பகையினை எதிர்த்து நிற்கையில் எம்மில் சிலர் எம் வாசற் கதவுகளுக்கு பொன்னால் மினுக்கல் பூசி அந் நாளில் அழகு பார்த்தோம். துயிலுமில்லம் கட்டத் துட்டுக் கொடுங்கள் என்றால் பயின்று பாடமாக்கிய கதை பேசி எட்டப் (தூரப்) போயிடுவோம்.
தங்கைகளும் தம்பிகளும் களத்திடை வேகையில் தங்க முலாம் போட்ட பென்னம் பெரிய செயினும், சிங்கப்பூர் சங்கிலிகளும் எம் கழுத்துக்களை அலங்கரித்திருந்தன. போராட வாருங்கள் என்று கேட்கையில் ஊரோடு பிரிந்து செல்லுதலே சிறந்தது என உற்றாரை உறவினரை அழைத்துக் கொண்டு உலகத்தின் திசை நோக்கிப் பறக்கத் தொடங்கினோம். புலிகளை எமக்கான விடுதலையின் தளகர்த்தர்கள் என திடமாக ஒரு சந்ததியினர் நம்பி இருக்கையில் இன்னோர் சந்ததியோ புலிகளை வைத்து பல விதமாகப் பிழைப்பு நடத்தலாம் என திட்டங்கள் போட்டு செயற்படுத்த தொடங்கினார்கள். கண்ணை மூடி கடவுளே எனச் சொல்லி, விண்ணில் பறந்து விரைவாக ஓர் நாட்டை அடைந்ததும் புலிகளால் பிரச்சினை எனச் சொல்லி கேஸ் அடித்து புலிகளின் பெயரால் அகதி வீசா பெற்றவர் பலர்.
புலிகளின் பெயரால் தானும் தன் குடும்பமும் வாழ வேண்டும் என நினைத்து அகதி வீசா அடித்த பலரும் தாம் அகதியாக வந்தோம் எனச் சொல்வதேயில்லையாம். காரணங் கேட்டால் (Skilled Immigration) இஸ்கில் இமிக்கிரேசன் விசாவில் இதமாய் வெளி நாடு வந்தோர் என இங்கிதமான வார்த்தை ஜாலம் கொண்டு பூசி மெழுகி ஓர் பதிலும் சொல்கின்றார்கள். வல்லமை தந்த பெரும் தலைவன் வழியில் ஈழம் வெல்லுவோம் என மக்கள் பலர் வன்னியில் வீறு கொண்டு எழுந்திருக்கையில் தொல்லை மேல் தொல்லைகள் சூழ்ந்து கொண்டது. ஆனாலும் இன்னல்களை எல்லாம் ஈழத்தை அடைவதற்கான இலகு வழிகள் என மன்னவன் மாற்றுவான் எனும் நம்பிக்கையில் வன்னி மக்கள் பின் தொடர்ந்தனர். ஆனால் வன்னியை விட்டுப் போனோர் மன்னவன் மூர்க்கத்துடன் சிங்களப் படையினை எதிர்பான் என தாளலயப் பாடல் பாடுவது எங்கனம் நியாயமாகும்?
கட்டியெழுப்பிய வீடு கண் முன்னே உடைந்து நொருங்கும் எனவோ, கரிகாலன் தொட்டிலிலிருந்து அழகு பார்த்து பருவ வயதினை எய்தும் வரை வளர்த்தெடுத்த புலிச் சேனை சிறு நிலம் தன்னுள் முடக்கப்பட்டு முற்றாக துடைத்தழிக்கப்படும் எனவோ யாருமே நினைக்கவில்லை. நாளைய விடி காலைப் பொழுதில் நல்ல சேதி வரும் என ஒவ்வோர் இடங்களையும் விட்டுப் பின்னகர்ந்து போகையிலும் உறுதி தளராதவர்களா உரம் கொண்ட வார்த்தைகளை உதிர்த்த போதெல்லாம் சிரித்தோம்! சிறகு விரித்துப் பறந்தோம்! மெய் மறந்து ஆடினோம். சுதந்திரக் காற்றினைச் சுவாசிப்பதற்கான நாட்கள் வெகு தொலைவில் இல்லை என புயல் போலச் சுழன்றடித்தோம். இமாலயப் பலம் பெற்று புலிகள் சேனை வன்னியில் தலை நிமிர்கையில் சமாதான காலத்தின் பின் ஆமி வந்தால் சங்காரம் நிஜமென சந்தோச கீதமிசத்தோம்.
இன்று எல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டு எச்சங்கள் ஏதுமற்ற பொட்டல் வெளியில் சூனியப் பேய்களால் சுத்தமாக மறைக்கப்பட்ட சுடு காடாக காட்சி தருகின்றது. வல்லமை நிறைந்த வழிகாட்டியின் தலமையில் நல்லோர்கள் பலர் வாழ்ந்தார்கள் என்பதற்கான காட்சிகள் மாத்திரம் எம் மனத் திரையில் ஓடிக் கொண்டிருக்கின்றது. புதையுண்டு போனாலும் எச்சங்களை நாம் அனைவரும் ஆராய்ச்சி செய்தென்றாலும் எம் சந்ததிக்கு காட்டிடத் தோண்டி எடுப்போம் அல்லவா? ஆனால் ஆண்ட பரம்பரையின் அடிச் சுவடே தெரியா வண்ணம் ஆதிக்கப் பேய்கள் தீ மூட்டி அல்லவா அழித்திருக்கின்றன. இனி எவற்றைத் தோண்டி எடுக்க முடியும்? விதையாக குழிகளினுள் விதைக்கப்பட்டோர் எல்லாம் நாளை முளையாக எழுவார்களே எனும் அச்சத்தினால் தானே துயிலும் இல்லங்கள் கூட துடைத்தழிக்கப்பட்டன.
தமிழரை வேரோடு அழிக்க நினைப்போருக்கு இருக்கும் அச்சம் கூட இன்று தவப் புதல்வனை நம்பிய பலருக்கு இல்லாமல் போனது தான் வேடிக்கை. இனி எவற்றினையும் நேரில் தரிசிக்க முடியாதவர்களாய் இன்றும் அவர் நினைவுகளைச் சுமந்தபடி மனக் கண் முன்னே மறவர் தம் நினைவுகள் படமாய் விரிய நினைத்த வரம் இன்னும் கிடைக்கலையே தாயே என நினைந்துருகின்றோம். கார்த்திகை மாதம் மாவீரர் தினம் என்றால் ஒவ்வோர் தடவையும் அவர்கள் கேட்காத தருணங்களில் கூட புதிய புதிய கள முனை வெற்றிச் சேதிகளைப் பரிசாக கொடுத்து தமிழர் தம் பலத்தினை நிரூபித்துக் காட்டினோம்.ஜூலையில் கரும்புலிகள் நாளென்றாலும் சரி, புரட்டாதியில் தியாகி திலீபனின் நினைவு நாள் என்றாலும் சரி ஒவ்வோர் வருடங்களிலும் ஒவ்வோர் தினங்களின் போதும் புதை குழியினுள் வாழும் ஈழத்திற்காய் விதையான விருட்சங்களின் மேல் தூவும் மலர்களோடு மறவர்களின் வீரச் சேதியினையும் இணைத்தல்லவா தூவி அஞ்சலி செய்தோம்!
கொற்றவையே! கொடியோரை அழிக்கையில் வீரத்தின் உறைவிடமாய் துணையிருந்த பொற் கொடியே! இன்று அவர்கட்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என ஏங்கித் தவிக்கின்றோம். நன்றாய் இருக்கும் என நாம் எண்ணிய நல் வாழ்வு வெடி வைத்த மலைக் குன்றாய் உடைந்த பின் நாமெல்லாம் துரோகத்தின் பால் தூசுகளாக இழுத்து ஒட்ட வைக்கப்பட்டு விட்டோம். இப்பொழுது அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? மீண்டும் தமிழன் சிதறிப் போகக் கூடாது எனும் ஒற்றுமையான வாழ்வைத் தானே! அந்த ஒற்றுமை நிறைந்த வாழ்வினை யார் காணிக்கையாக கொடுக்கப் போகின்றோம்? அவர்களின் கனவுகளும் ஆறடி நிலத்துள் புதைந்து விட்டதாக மறந்து விடப் போகின்றோமா? திசையெட்டும் சிதறி உருக் கொண்ட சேனையின் உணர்ச்சிகளுமா இன்று மௌனித்துப் போய் விட்டது/
காலச் சுமையில் கனத்த இருள் கிழித்து நீளப் பாய்ச்சலில் நிலங்களை மீட்டு தாளக் கதி போட்டு எமையெல்லாம் ஆட வைத்த அந்த வாழ்வின் வரலாற்றினை இனி எப்படிப் பெற்றுக் கொள்வோம்? ஆழக் கடல் அலைக்கும் தமிழர் தம் வீரத்தை பறை சாற்றி நீண்ட பயணம் சென்று ஈழத்தை ஆண்ட மறவர் வீரத்தை மனங்களில் மட்டும் இருத்தினால் போதுமா? எம் சந்ததிகள் அறியும் வண்ணம் ஓர் வரலாற்று காவியமாய் எழுதிடக் கூடாதா? செந்தமிழ் இனம் எனச் சொன்னாலே அது சிறுத்தையின் பிள்ளைகள் வாழ்ந்து வெங்களம் ஆடிய பூமியென இருந்த வரலாறு இன்று சிங்களம் கலந்த சங்கமப் பாடலால் சிதறடிக்கப்படுகின்றது. சங்கிலியன், எல்லாளன், பண்டார வன்னியன், குளக்கோட்டன் எனச் சரித்திர நாயகர்கள் வரிசையில் பிரபாகரன் பிள்ளைகளையும் நினைவு கூர்ந்து கொண்டே எம் வாழ்வை முடித்திடுவோமா? இல்லை காலப் பரிமாணத்தில் எம் ஈழக் கனவிற்கு அர்த்தம் கொடுப்போமா?
செந் தமிழ் மொழியின் செழுமை அழித்திட இன்று சிங்களக் கலப்பு எம் விருப்பமின்றி இடம் பெறுகையில் எம் தமிழர் எனச் சொல்லும் எட்டப்பர்கள் கொஞ்சிக் குலாவி ஆதிக்க வாதிகளுடன் கட்டி அணைத்து மகிழ்ந்து கவலை மறந்து பாடுகின்றார்கள். இன்னும் சில நாட்களில் தமிழர் வீரம் முளையோடு கிள்ளி எறியப் படாதிருக்கிறதே எனும் உணர்வோடு சிங்களம் வலிந்து எம் மாதுகள் மீது கட்டாய இனக் கலப்பைச் செய்யவும் கூடும். எம் சந்ததி ஒன்று தன் வரலாற்றை சமர் களத்தினூடாக எழுதி வாழ்ந்த அடையாளத்தை தந்து விட்டுச் சென்று விட, இன்னோர் சந்ததி நாம் எம் வம்சங்களை சிங்களக் கலப்பிற்கு ஆளாக்கி விட்டு அவர்களோடு சிரித்து உறவாடி மகிழப் போகின்றோமா?
நாடுகள் தோறும் தமிழர் தம் வீரம் பொய்த்துப் போகவில்லை என இன்னுமா நம் வயிறினை வளர்க்க நிதி சேகரிக்கின்றோம்? காடுகளில் இருந்து புலிகள் பாய்வார்கள் என கண் கட்டி வித்தை செய்தா எம் சுயத்தை வெளி நாடுகளில் நிரூபிக்கப் போகின்றோம்? விடுதலையின் பயணத்தைச் சுமந்து முள் வேலிக்குள் சொல்லெணா வதை பட்ட மக்கள் பலர் இன்று தம் வாழ்வைத் தொலைத்து நிற்கிறார்கள். அவர் வாழ்வு சிறக்க புலிப் பெயரால் சேர்த்த பணங்களை வாரி இறைத்திட வழிகளைக் காணப் போகின்றோமா? இல்லை இனியும் எம் சுயமே வாழ வேண்டும் எனும் ஆணவத்தோடு போலி நாடகமாடி பொருளீட்டி பணம் சேர்த்து நம் சொந்த வாழ்வை மக்கள் பணத்தில் செழிப்புறச் செய்யப் போகின்றோமா?
அந்தோ! அவர்கள் சொல்வதாச்சும் உங்கள் காதுகளில் வீழ்கிறதா? சொந்த நிலம் இழந்து, துன்பம் தமைச் சூழ்ந்த வேளையிலும் பிரபாகரனை நம்பிப் பின் தொடர்ந்த மக்கள் பலர் இன்று வெந்து போய் தம் வாழ்வை வேரூன்றச் செய்ய முடியாது நொந்துமே வாழ்கின்றார்கள். புலிகளை வைத்துப் பிழைப்பு நடாத்தப் போகின்றோமா? இல்லை புலம் தனில் இருந்து ஈழ நிலம் தனில் வாழும் எம் உறவுகளின் வாழ்வு சிறக்க வாரி வழங்கப் போகின்றோமா? என்ன தான் ஈழ மக்கள் இரந்து பேசினாலும் இனி எம் காதுகளில் ஏதும் ஏறாது என எம் தமிழ்ச் சாதியை மறந்து வாழப் போகின்றோமா? இல்லை அவர் தம் வாழ்க்கையை உணர்ந்து நாம் பணி செய்யப் போகின்றோமா? காலமே! புலிகள் பெயரை வைத்துப் பிழைக்கும் ஈனரே! உங்கள் முன் இப்போது ஓர் வரலாற்று வாய்ப்பு. சோர்ந்து போன தமிழ்ச் சாதியின் சொந்த வாழ்வையாவது மீளக் கட்டியெழுப்பலாமே!
பிற் சேர்க்கை: இப் பதிவில் உள்ள படங்கள் யாவும் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
|
18 Comments:
மிகவும் மனதைப் பிழிகின்றது நிரூபன்.
என்னன்னு சொல்ல கஷ்டமாக இருக்கு
உண்மைதான்....நாங்கள் நினைத்ததுக்கு மாறாக அல்லவா அங்கு நடந்துள்ளது...
புலிகளை அனைத்து மக்களும் ஆதரித்துருந்தார்கள் என்று தவறாக நினைத்திருந்தோம் உம் பதிவை படிக்க படிக்க...புரிகின்றது
வணக்கம் நண்பரே நல்ல ஒரு பதிவை தந்திருக்கிறீங்க பாராட்டுக்கள்
// புலிகளை வைத்துப் பிழைப்பு நடாத்தப் போகின்றோமா? இல்லை புலம் தனில் இருந்து ஈழ நிலம் தனில் வாழும் எம் உறவுகளின் வாழ்வு சிறக்க வாரி வழங்கப் போகின்றோமா? என்ன தான் ஈழ மக்கள் இரந்து பேசினாலும் இனி எம் காதுகளில் ஏதும் ஏறாது என எம் தமிழ்ச் சாதியை மறந்து வாழப் போகின்றோமா? இல்லை அவர் தம் வாழ்க்கையை உணர்ந்து நாம் பணி செய்யப் போகின்றோமா? //
புலிகளை வைத்து பிழைப்பு நடத்தும் நம்ம தமிழர்கள் இதை உணரவேண்டும்.
நண்பரே இதில் கவலை அளிக்கும் விடயம் என்ன என்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதாவது உதவி செய்வோம் என்று நினைக்காமல்.
மீண்டும் புலிகள் வருவார்கள் தனித்தமிழீழம் கிடைக்கும் என்று கதைபேசி் சிலர தங்கள் பிழைப்பை நடத்துகின்றார்கள.இவர்கள் எல்லாம் யுத்தம் நடந்த போது ஓடி ஒளிந்த கோழைப் பசங்க......
அதைவிட அண்ண என்றைக்கும் தனிநாடு கிடைச்சால் தான் அதை ஆழுவேன் என்று சொன்னது இல்லை ஈழம் கிடைத்தால் தகுதியானவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தான் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போராளிகளை பராமரிக்கும் பணியில் இறங்கிவிடுவேன் என்று சொல்லியிருந்தார் இதை அனைத்து மக்களும் அறிவர்.
இப்ப யுத்தம் எல்லாம் ஓய்ந்து விட்டது இப்ப யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தேவை அமைதியான வாழ்க்கை அதைவிட அவர்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியில் கட்டி எழுப்ப வேண்டும்
ஆனால் இப்ப பாருங்கள் சிலர் புலம்பேர் தேசத்தில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசு என்கின்றார்கள் அதற்கு பிரதமர் தேர்வு வேறு என்ன கொடுமை இதனால் ஈழத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பிரயோசனம்...
ஈனப்பிறவிகள் பிரபாகரன் என்ற பெயரை சொல்ல கூட தகுதி இல்லாத ஜந்துக்கள்தான் இப்படி புலிகள் கதை பேசி ஈழத்து தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம்
அரசியல்வாதிகள் பிழைப்பே அதுதான்..
போஸ்ட் போடும் டைமிங்க் மாறிடுச்சு போல?
நீங்க அரசியல்வாதிகள திட்டுரீங்களா இல்லை தமிழர்கள் அனைவரையும் திட்ரீங்களா???
வெவ்வேறு பார்வைகள் ஒரு நிகழ்வின் பல பரிணாமங்களைக் கொண்டு வரும். அந்த வகையில் உங்கள் பார்வை புதிய பரிணாமத்தை தருகிறது.
ஈழம் கடந்த தமிழீழ அரசு என்பது பற்றி - கோபம் வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உங்கள் கருத்து என்ன. இங்கே தமிழகத்தில் சிலர் அதற்கான ஆதரவு பற்றியும் பேசுகிறார்கள். நிரூபன்தான் விளக்க வேண்டும். தனிப் பதிவு எதுவும் உண்டா?
வணக்கம், நிரூபன்!.....................................................................(சொல்ல எதுவுமில்லை)
படித்துவிட்டு மனது வலிக்கிறது ஐயா!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
கண்ணில் கண்ணீர் தாரைத்தாரையாக வழிகிறது மக்கா....
@DrPKandaswamyPhD
மிகவும் மனதைப் பிழிகின்றது நிரூபன்.
//
நன்றி ஐயா.
@மனசாட்சி
என்னன்னு சொல்ல கஷ்டமாக இருக்கு
//
இவற்றையெல்லாம் கடந்து வந்தது தான் ஈழத் தமிழனின் இன்றைய வாழ்வு பாஸ்.
நிரூ...நிறையவே சொல்கிறீர்கள்.தலை குனிந்து நிற்பதைத் தவிர ஒன்றும் சொல்ல வரவில்லை !
சரியான சவுக்கடி நிரூபன், ஆனால் படிக்க படிக்க குற்ற உணர்ச்சியே மேலோங்குகிறது..... வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை!
கவிதை போல அழகிய தமிழில் எழிலான எழுத்தில் எழுதி இருக்கிறிர்கள் சகோ, ஆனாலும் அதை ரசிக்க முடியாமல் ஏனோ சோகம் மேகமாய் மனதை ஆக்கிரமிக்கிறது.
Post a Comment