இந்தப் பதிவில் இடம் பெறப் போகும் சம்பவங்களின் அடிப்படையில் தற்போது சிறையில் உள்ள போராளிகள்; மற்றும் இச் சம்வத்தோடு தொடர்புடைய பொது மக்களின் பெயர்கள் யாவும் மாற்றப்படுகின்றது. இப் பதிவில் இடம் பெறும் கதாபாத்திரங்களில் ஒரு சிலரின் பெயரினை மாத்திரம் நீங்கள் நிஜப் பெயர்களூடாக அல்லது சிறப்புப் பெயரினூடாகத் தரிசிக்கலாம். ஏனையோரின் பெயர்களை இங்கே மாற்றியிருக்கிறேன்.
ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!
பாகம் 03:
பாகம் 03:
இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.
இனி இரண்டாவது பாகத்தின் தொடர்ச்சியாக............
வவுனியா, மற்றும் மன்னார்ப் பகுதியில் உள்ள இராணுவத்தினர் வன்னி மீதான முற்றுகை பற்றிச் சிந்திக்கா வண்ணம் குழம்ப வேண்டும்; அச்சத்தில் உறைய வேண்டும் என முடிவு செய்த புலிகள் தமது தாக்குதற் பிரிவில் உள்ள சிறப்புப் போராளிகளை அழைத்து உளவுப் பிரிவு அல்லது வேவுப் பிரிவோடு ஒருங்கிணைத்து வன்னியில் 2006ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் இறுதி நாட்களில் ஒரு திட்டத்தினைத் தீட்டத் தொடங்கினார்கள். அந்தத் திட்டம் தான் வவுனியாவில் உள்ள இராணுவத்தினரின் உறக்கத்தினைச் சீர்குலைக்கும் திட்டமாகும்.
வவுனியா மாவட்டத்தின் இயல்பு நிலையினைச் சீர்குலைக்கும் திட்டம் எனவும் இதனைக் குறிப்பிடலாம். வவுனியாவில் உள்ள இராணுவ முகாம்கள், காவலரண்கள், வன்னிப் பகுதியினை நோக்கி வவுனியா நகரின் மையப் பகுதியான ஜோசேப் முகாமிலிருந்து ஓமந்தையூடாக இடம் பெறும் விநியோகங்கள்,மற்றும் இராணுவத்தின் வீதிச் சோதனை நடவடிக்கைகளைச் சீர்குலைக்க வேண்டும் என்பது தான் புலிகளின் தலமைப் பீடத்தின் திட்டமாக அமைந்திருந்தது. ஏற்கனவே வவுனியா மாவட்டத்தின் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தவரும், பல களமுனைகளில் தன் வீர சாகசங்களை நிரூபித்துக் காட்டியவருமான அமலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவர்களிடம் வவுனியாவில் இடம் பெறும் அதிரடித் தாக்குதல்கள், மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளிற்குத் தலமை தாங்கும் பொறுப்பு வழங்கப்படுகின்றது.
அமலனிற்கு அடுத்த பதவியில்,இந்தத் தாக்குதல்களையெல்லாம் ஒருங்கிணைக்கும் நோக்கில் விமலனை துணை அதிகாரியாக அறிவித்து இருபதிற்கும் மேற்பட்ட சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகளினையும் இணைத்து வன்னிப் பகுதியில் உள்ள நட்டாங்கண்டல் காட்டுப் பாதையூடாக வவுனியா நோக்கி அனுப்பி வைக்க முடிவு செய்கின்றார்கள் புலிகள். வழமையாகவே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் புலிப் போராளிகளுக்கு பிறருக்கு இவர்கள் புலிகள் தான் எனச் சந்தேகம் வரா வண்ணம் தண்ணி அடித்தல், சிகரட் அடித்தல், முதலிய வசதிகள் தற்பாதுகாப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தாலும், இம் முறை தலமைப் பீடம் மேற்படி வசதிகளைப் போராளிகள் அனுபவித்து மகிழலாம் என நேரடியாகவே கூறியிருந்தது.
இப்போது புலிகள் எதிர் நோக்கும் அடுத்த பிரச்சினை. தமக்குப் பொருத்தமான தங்குமிடம், மக்கள் ஆதரவு உள்ள பகுதியினைத் தெரிவு செய்வதேயாகும்.
ஒவ்வோர் ஐந்நூறு மீட்டருக்கும் ஒரு ஆமி எனும் வகையில் வவுனியாவில் இராணுவத்தினர் தமது பலத்தினைப் பெருக்கி இருக்கும் சூழ் நிலையில், முற்று முழுதாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியினுள் பொது மக்கள் ஆதரவினை எதிர்பார்ப்பதென்பது முடியாத காரியம். அதே வேளை மக்கள் ஆதரவின்றி மாற்றானின் கட்டுப்பாட்டில் உள்ள மண்ணினுள் போய் தம் நகர்வுகளை மேற்கொள்ள முடியாதென்பதும் புலிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. அடுத்த விடயம் வவுனியாப் மாவட்டம் தமிழ் - முஸ்லிம்- சிங்கள இன மக்கள் கலந்து வாழும் ஒரு Multicultural பிரதேசமாகும். இங்கே யார் இராணுவத்தின் உளவாளி, யார் புலிகளின் ஆதரவாளர் எனக் கண்டறிவதும் கொஞ்சம் சிரமமான விடயமாகும்.
இப்போதைய தெரிவு மக்கள் ஆதரவு உள்ள இடத்தினை அதுவும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடமாக எட்டப்பர்களின் நடமாட்டம் இல்லாத இடமாகத் தெரிவு செய்வதாகும். புலிகளோடு வன்னிப் பகுதியில் 1999ம் ஆண்டு வரை ஒன்றாக இருந்த - பல கள முனைகளில் பின் தள உதவிப் பணிகள் செய்த, எல்லைப் படையாகி எழுச்சி கொண்டு ஆயுதப் பயிற்சி பெற்ற மக்கள் அதிகம் செறிந்து வாழும் இரண்டு பிரதேசங்களைத் தமக்கு கடந்த காலங்களில் கிடைத்த ஆதரவுகளை அடிப்படையாக வைத்துப் புலிகள் தெரிவு செய்தார்கள். அவ் இரு பிரதேசங்களும் வவுனியா நகரின் மையப் பகுதியிலிருந்து அண்ணளவாக ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. அப் பிரதேசங்கள் கூமாங்குளமும்;உக்குளாங்குளமாகும்.
அதே வேளை இராணுவம் அப் பிரதேசங்களை நோக்கி நகர்வுகளை மேற்கொள்ளப் போகின்றது; புலிகளைப் பிடிப்பதற்காகச் சுற்றி வளைப்புத் தேடுதல் வேட்டையினை நடாத்தப் போகின்றது எனும் தகவல்களையெல்லாம் முன் கூட்டியே அறிந்து கொள்ளும் நோக்கில் ஒரு முஸ்லிம் இராணுவ வீரனையும், இன்னோர் தமிழ் பொலிஸ் உயர் அதிகாரியினையும் புலிகள் ஏற்கனவே தமக்கான தகவல் வழங்குனர்களாக ஒழுங்குபடுத்தி வைத்திருந்தார்கள். இப்போது புலிகள் வவுனியாவிற்குள் நுழைவதற்கும், தமது நகர்வுகளை தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் வேண்டிய முன்னேற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டன.
அமாவாசை இருட்டில் காட்டில் உள்ள விலங்குகளினைப் பற்றிய அச்சங்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு, புலிகள் வன்னியிலிருந்து நட்டாங்கண்டல் ஊடாக முன்னகர்ந்து மூன்று முறிப்பினை அடைந்து மூன்று முறிப்பில் இருந்து பறையனாலங்குளம் வீதியூடாக நகர்ந்து பின்னர் மன்னார் வவுனியா வீதியினைக் குறுக்கறுத்து (Crossing Road) கூமாங்குளத்தினுள் நுழைய வேண்டும். பறையனாலங்குளம் வீதி வழியே வந்து மன்னார் வவுனியா வீதியினைக் Cross பண்ணிச் செல்வது தான் கொஞ்சம் சிரமமானது. காரணம் இவ் வீதியின் ஏனைய இரு பக்கங்களும் பற்றைக் காடுகளால் நிரம்பியிருந்தாலும், வீதியில் இராணுவ நடமாட்டங்கள் அதிகமாக காணப்படும்.
இதே பறையனலாங்குளம் வீதியினூடாக 2006ம் ஆண்டின் இறுதிப் பகுதியில்; ஒரு முறை புலிகள் வவுனியாவில் தமது அமைப்பிற்கு ஆட்களைத் திரட்டி வன்னி நோக்கி நகர்த்தும் போது இராணுவத்திடம் மாட்டிக் கொண்டதால் 16 அப்பாவிப் பொது மக்களின் உயிரினை ஸ்தலத்திலேயே இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. புலியணிகள் வெற்றிகரமாக ஊடுருவி தமது ஆயுதங்கள் சகிதம் கூமாங்குளத்தினை அடைந்தன. புலிகளை வரவேற்று புலிகளின் ஒவ்வோர் செயற்பாடுகளுக்கும் ஆதரவளிக்கும் நோக்கில் உக்குளாங்குளமும், கூமாங்குளமும் தன் பேராதரவினை வழங்கத் தொடங்கியது. அங்கிருந்த மக்களில் பெரும்பாலானோர் புலிகளுக்கு உணவு வழங்கி ஆதரவளிப்பதற்குப் போட்டி போடத் தொடங்கினார்கள்.
மக்கள் ஆதரவுள்ள எந்தவொரு விடுதலை அமைப்பும் நிலைத்து வாழும் என்பதற்கு சான்றாக, கூமாங்குளமும், உக்குளாங்குளமும் குட்டி வன்னி என இராணுவத்தினரால் அழைக்கப்படுமளவிற்கு சிறப்புப் பெறுகின்றது. வவுனியா நகருக்குச் சென்று வருவோரின் அடையாள அட்டையினைச் சோதனை செய்யும் இராணுவத்தினர் உக்குளாங்குளம், கூமாங்குளம் எனும் முகவரியில் வசிக்கும் மக்களிடம் "நீங்கள் இருக்கும் இடம் சின்னக் கிளிநொச்சி", "குட்டி வன்னி" என நையாண்டி கலந்து புலிகள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதில் முனைப்புக் காட்டினார்கள்.
புலிகளின் நடமாட்டம், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் மக்கள் ஆதரவோடு சுதந்திரமாகத் தொடர்ந்தது. பட்டப் பகலில் ஆயுதங்களோடு புலிகள் உக்குளாங்குளம், கூமாங்குளம் வீதிகளில் நடமாடத் தொடங்கினார்கள். புலிகளின் ஒளிவீச்சு, மற்றும் தாக்குதல் வீடியோ நாடாக்கள் - சீடிக்கள் அங்கே வாழ்ந்த பொது மக்கள் வீடுகளில் இரகசியமான முறையில் ஓடத் தொடங்கியது.புலிகள் தமது தேவைகளுக்காக பொருட்களைக் கொள்வனவு செய்யும் நோக்கில் உக்குளாங்குளம் சிவன் கோவிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ளா சிவகரனின் மளிகைக் கடையினை தெரிவு செய்திருந்தார்கள்.
மக்கள் இலவசமாகப் பண்டங்களை வழங்கியதோடு, புலிகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். இராணுவம் அப் பிரதேசத்தைச் சுற்றி வளைத்து மறு நாள் தேடுதல் வேட்டையில் ஈடுபடப் போகின்றது எனத் தகவல் கிடைத்தாலே போதும்; இரவோடு இரவாக புலிகள் பொது மக்கள் போல வேஷமிட்டு, குறிப்பிட்ட அப் பிரதேசத்திலிருந்து விலகிச் சென்று வேறு பகுதிகளில் தங்கி நின்று, பின்னர் இராணுவம் அப் பகுதியினை விட்டுச் சென்றதும் மீண்டும் வந்து நிலையெடுத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். வவுனியாப் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கிடைத்த அனைத்து அதி நவீன வசதிகளும் புலிகளுக்கு அப் பகுதியில் கிடைத்தது.
CDMA தொலைபேசியினை வவுனியாவில் அப்போது தொலைத் தொடர்புச் சேவையில் பிரபல்யமாக இருந்த சன்டெல் நிறுவனத்திடமிருந்து பொது மக்கள் பெற்றுப் புலிகளுக்கு வழங்கினார்கள். இதே வேளை மறு புறத்தில் வவுனியாவிலிருந்த வணிகர்கள் 2007ம் ஆண்டின் நடுப் பகுதி வரை மக்கள் வங்கியூடாகப் பணத்தினை வைப்புச் செய்து, தமது பண டிப்போசிட்டுக்கு ஆதாரமான இரகசிய பின் நம்பர்களை தொலைபேசியூடாக கிளிநொச்சியில் அமைந்திருந்த புலிகளின் வருவாய்த் துறைப் போராளிகளிடம் வழங்கிக் கொண்டிருந்தார்கள். புலிகள் வவுனியாவிலிருந்த இராணுவத்தினருக்கு தலையிடி கொடுக்கத் தொடங்கினார்கள்.
இரவானதும் ஒரு முகாமினை நான்கு பக்கத்தாலும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி விட்டு ஓடி ஒளிக்கத் தொடங்கினார்கள். புலிகளைத் தேடி இராணுவம் வலை விரித்தது. உக்குளாங்குளம், கூமாங்குளம் ஆகிய பகுதிகளுக்கு சமாந்தரமாக வடக்குப் பகுதியில் அமைந்திருந்த வேப்பங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடாத்தி அம் முகாம் இராணுவத்தினருக்கும் அச்சத்தினைக் கொடுத்தார்கள்.வழமையாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் இடம் பெறும் தாக்குதல்கள் ஒரு சில நிமிடங்களில் போராளிகளின் உயிர்ப் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு முடிவடைந்து விடும்; ஆனால் வவுனியாவில் இடம் பெற்ற தாக்குதல்கள் அனைத்தும் 20 நிமிடங்கள் வரை நீடித்து இராணுவத்திற்கு அதிக இழப்பைக் கொடுக்கும் சிறப்புத் தாக்குதல்களாக மாற்றம் பெற்றிருந்தன.
இந் நேரத்தில் இராணுவம் புலிகளை வலை வீசித் தேடும் முயற்சியில் களைத்துப் போயிருக்கும் போது, "தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி" எனும் வாக்கிற்கமைவாக சத்திய வரதன் எனப்படும் தமிழ்ப் புலனாய்வாளார் தன் பணியினைத் தீவிரமாக்கினார்.
யார் இந்த சத்தியவரதன்? வவுனியாவில் புலிகளின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருந்தது? வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் வன்னிக் கள முனையினை இலங்கை இராணுவம் எப்போது திறந்தது? வவுனியா இராணுவ முகாமில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய மத்திய அரசு இலங்கை அரசிற்கு வழங்கிய ரேடர்கள் மீது புலிகள் எப்படித் தாக்குதல் நடத்தினார்கள்? இத்தகைய விபரங்களை அறிய வேண்டுமா? அடுத்த பாகம் உங்களை நாடி வரும்! அது வரை காத்திருங்கள்!
|
14 Comments:
வணக்கம் பாஸ்,
கடந்த பகுதியையும் இப்பத்தான் வாசிச்சேன்!
நடந்தவற்றை அறியச்செய்யும் உங்கள் தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
map களுடன் படிப்பதற்கு இன்னும் அருமையாக இருக்கிறது, இனி இதே பாணியை தொடரவும்
வணக்கம் நண்பர் நிரூபன்..
மறைக்கப்பட்ட பல செய்திகள்
உங்கள் பதிவின் மூலம் வெளிச்சமாகிறது..
இரவு வணக்கம்,நிரூபன்.நேரில் பார்ப்பது போலிருக்கிறது.மாவீரர் மாதத்தில் வீரம் செறிந்த தொடர் படிப்பது மாவீரர்களுக்குச் செலுத்தும் அஞ்சலி!
அருமையான படப்பிடிப்பு நிரூபன்,தொடருங்கள்.
வணக்கம் நிரூபன்
அருமையான விளக்கத்தோடு தொடரை கொண்டு செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்..
சரித்திரமாகிவிட்ட கதைகள்.நல்லாயிருக்கு நிரூ !
நிரூ பாஸ் தொடர் மிக நன்று....
பல உண்மைகள்..
முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்..
பதிவு நன்றாக இருக்கு... ஆனால், கிழக்கு போரை ரொம்ப சீக்கிர்மா முடித்து விட்டீர்கள். எனக்கு தெரிந்து, சாம்ப்பூரில் புலிகளுக்கு மிகப் பெரிய அழிவும், முகமாலையில் ஆமிக்கு மிகப் பெரிய அழிவும் ஏற்பட்டது.
மூதூரில் புலிகள், அனைக்கட்டை மறைத்து, மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து, மூதூர் மக்களை விரட்டியடித்து, ஊரையே சூரையாடியதை ஏன் சொல்லவில்லை
தண்ணீரை தடுத்து ஆரம்பித்த யுத்தம்,
கிளி நொச்சி தண்ணீர் தாங்கியை குண்டு வைத்து தகர்த்து, ஒரு மிகப் பெரிய அனை கட்டையும் குண்டு வத்து தகர்த்த புலிகளின் முடிவும் கடைசியில் தண்ணீரிலேயே முடிந்தது.
செமையா உண்மைகள் வெளியே வந்துட்டு இருக்கு, வரட்டும் வரட்டும்...!!!
தெரியாத பல விஷயங்கள் புரியாத பல மர்மங்கள் தெரிந்துகொண்டோம்
வீர வரலாற்றுத் தொடர்
தெளிவான நடையில்
தொடர வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
Post a Comment