கரிப்பட்ட முறிப்பு
கந்தசாமி கோயிலடி
கதறியழும் ஓசை,
தெருவோரக் கிணற்றடி
உருமாறும் மனங்கள்
உதவியற்ற மனிதர்கள்
இறைவா இதுவோ உன் நியதி?
வெள்ளைச் சட்டை-
அதிலே படிந்துள்ள
சிகப்பு மை
சகுனம் சரியில்லை
எனும் மூதாதையர் வெளிப்பாடோ- இல்லை
சரித்திரத்தில் அழுக்கு உள்ளது
எனும் தொனியிலான
நிஜங்களின் பிரதிபலிப்போ?
அடுப்படி,
அவசரமாய் உணவு சமைக்கும் நேரம்,
அம்மா கண்களால் நீர் வடிய
ஊதும் புல்லாங்குழல்
ஆசையாய் பரிமாறும் சோறு
’ஆவென நாக்கினில் நாவூற வைக்கும்
வாசனை நிறைந்த கறிகள்,
அழகிய உலகினினை
கணினியில் தரிசிக்கும் எனக்கு
எங்கே புரியப் போகுது
இந்த அருஞ்சுவை சமையலின்
பின்னுள்ள வேதனை?
இப்போது,
நாவற்குழி நகரம்
நாதியற்ற சவங்கள்
பாவனையில் தமிழரென
பார் முழுதும் ஆடும் தோரணங்கள்
வேரழித்து,புது விழுது கட்ட
வேகமாக நடக்கும் முயற்சிகள்
சாரதாம்பாள், கிருஷாந்தி
வரிசையில் இன்று
ஏராளம் பெயர் சொல்ல முடியாத
ஆயிரம் அம்பாள்கள்- காரணம்
திருமணச் சந்தையில்
விற்கப்பட வேண்டும் எனும்
உள் நோக்கமும் குடும்பக் கௌரவமும்!
மௌனங்கள்,
மயக்கங்கள்
அடிக்கடி இவற்றை
நினைக்கையில் பீறிட்டெழும்பும்
அழுகை ஒலிகள்
இறந்த பிணத்தின் அஸ்தியின் மேல்
ஆடி விளையாடி மகிழும்
அகோர குணம் கொண்ட
தெரு நாய்கள்
உருமாறிப் போன மனித வாழ்வில்
உயிரோடு நடைப் பிணமாய் நாங்கள்;
தெருவெங்கும் ஏது நடந்தாலும்
தேகமெல்லாம் பயத்தால் சிலிர்த்தபடி
ஓடி ஒளிக்கின்ற மனித உருப் பேய்கள்!
******************************************
அடுப்படி: சமையல் செய்யும் இடம்
சாரதாம்பாள், கிருஷாந்தி: பெயர்களும், சம்பவங்களும் வெளியில் தெரியும் வகையில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்டவர்கள்.
|
10 Comments:
>>>இறந்த பிணத்தின் அஸ்தியின் மேல்
ஆடி விளையாடி மகிழும்
அகோர குணம் கொண்ட
தெரு நாய்கள்
கனக்க வைத்த வரிகள்
இவ்வளவு சிம்ம்பிளா. நீட்டா ஒரு லே அவுட்டை சபீபத்துல நான் பார்க்கலை.. அருமை
ஈழத்து இன்னல்கள்
மின்னனென தாக்கியது மனதை
எச்சத்தில் விழுந்த
உங்கள் நாற்றில்...
சீர்குலைவு
சிதைவுகளின் நாற்றம்....,,,
அருமை நன்றி
அவலங்களை படம்பிடித்து காட்டியது உங்கள் கவிதை..
அவல நிலையை கண்டு வேதனையும் கோபமும் மிஞ்சுகிறது.
சொல்ல ஒன்றுமில்லை.
நிலைமை அவ்வளவு மோசம்..
எங்கே புரியப் போகுது
இந்த அருஞ்சுவை சமையலின்
பின்னுள்ள வேதனை?////
சிலசமயங்களில் சட்டென சொல்லிவிடுகிறோம்... சோறு நல்லால்ல என்று. ஆனால் அதன் பின்னுள்ள உழைப்புக்கு மரியாதை கொடுத்து பாராட்ட தயங்கவும் செய்கிறோம் இல்லையா.... அதற்கடுத்த பந்தி, கனக்க வைக்கிறது. பாதுகாப்பில்லா வாழ்வுக்கு விற்பனைதான் வேலியா?
ஆனால் கவிதையை ஓவரால் படிக்கும் பொழுது நன்கு உள்வாங்க என்னால் முடியவில்லை. (தயவு செய்து அது உங்கள் பிரச்சனை அல்ல. எனது வாசிப்பின் பிரச்சனை)
தெரு நாய்கள்
உருமாறிப் போன மனித வாழ்வில்
உயிரோடு நடைப் பிணமாய் நாங்கள்;
தெருவெங்கும் ஏது நடந்தாலும்
தேகமெல்லாம் பயத்தால் சிலிர்த்தபடி
ஓடி ஒளிக்கின்ற மனித உருப் பேய்கள்!
மனதை கனக்க செய்யும் கவிதை.....
//அம்மா கண்களால் நீர் வடிய
ஊதும் புல்லாங்குழல்
ஆசையாய் பரிமாறும் சோறு
’ஆவென நாக்கினில் நாவூற வைக்கும்
வாசனை நிறைந்த கறிகள்//
வலி.....
ம்...இன்னும் மனங்களில் அமைதியில்லை.அவலத்தின் அழுகுரல்கள் கேட்டபடிதான் வாழ்வு !
Post a Comment